சரத்குமார், ராதாரவி, சந்திரசேகர் தற்காலிக நீக்கம் ஏன்?: நடிகர் சங்கம் விளக்கம்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து அதன் முன்னாள் தலைவர் சரத்குமார், முன்னாள் பொதுச்செயலாளர் ராதாரவி, முன்னாள் பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகிய மூவரும் திடீரென தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நிர்வாகப் பொறுப்பில் இருந்தபோது செய்த முறைகேடுகள் காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நடிகர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த தேர்தலுக்கு பிறகு நாங்கள் புதிய நிர்வாகமாக பொறுப்பேற்று எங்கள் பணியை சீரும் சிறப்பாகவும் செய்து வருகிறோம். எங்கள் உறுப்பினர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து ஊதியங்களையும் ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறோம். முன்பு கூறியது போல இச்சங்கத்தின் நலன் கருதி தொலைநோக்கு பார்வையோடு சில முக்கிய முடிவுகளையும் சீரமைக்கும் பணிகளையும் செய்ய கடமைப்பட்டுள்ளோம்.

அதன் விளைவாக நாங்கள் நடத்திய சோதனைகள் மூலம் முந்தைய நிர்வாகம் செய்த முறைகேடுகள் பல ஆவணங்கள் மற்றும் விவரங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது. இது பற்றி பலமுறை செயற்குழுவில் விவாதித்து பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்ற ஆண்டு பொதுக்குழுவில் நடவடிக்கைகள் எடுக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

அதன்படி சட்டரீதியாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, சங்க விதிமுறைகளின்படியும் இப்போது நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அதன்படி இந்த முறைகேடுகளின் விசாரணை முடிந்து உண்மை தெரியும் வரை முன்னாள் நிர்வாகிகள்  திரு.சரத்குமார், திரு.ராதாரவி மற்றும் திரு.வாகை சந்திரசேகர் அவர்களை தாற்காலிகமாக நடிகர் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி இருக்கிறோம். இது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. ஒரு பொது சங்கத்திலும், அறக்கட்டளையிலும் முறைகேடுகள் நடந்திருப்பதால் அதை சீர்திருத்தி சங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பை சரிக்கட்ட வேண்டிய நிலையில் நாங்கள் உள்ளோம்.

முறைகேடுகள் என்பது கணக்கு வழக்கு முறைகேடுகள் மட்டுமில்லை, சங்க சொத்து வாங்கல் விற்றல் கூட ஆகும். இதற்காக மேலும் சில முன்னாள் நிர்வாகிகளுக்கும் தன்னிலை விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்படவுள்ளது. இடையில் திரு. சரத்குமார் அவர்கள் நாங்கள் அனுப்பிய தன்னிலை விளக்க கடிதத்தின் மேல் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் நாங்கள் பதில் மனு தாக்கல் செய்தோம். அதில் அவருடைய இடை நிலை மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே அவருக்கு சாதகமாக எந்த ஒரு தீர்ப்பும் வழங்கப்படவில்லை. மேலும், நிர்வாகம் சங்க சட்டவிதிகளின்படி செயல்படுகிறோம். இது செயற்குழுவின் தற்காலிக முடிவாகும். மேலும் நீதிமன்ற முடிவுக்கு பிறகு தொடர் முடிவுகள் எடுக்கப்படும்.

இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்க செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.