சரத்குமாருக்கு விஜயபாஸ்கர் ரூ.7 கோடி கொடுத்தாரா?: நடிகை ராதிகாவுக்கு சம்மன்!

இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்த ஆர்.கே.நகரில் பண விநியோகம் தொடர்பாக புகார்கள் எழுந்ததையடுத்து, கடந்த 7-ம் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கிண்டி டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி, சமக தலைவர் சரத்குமார், அவரது மனைவி ராதிகாவின் ராடன் மீடியா அலுவலகம், அதிமுக முன்னாள் எம்பி சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடந்தது.

இந்நிலையில், சமக தலைவர் சரத்குமார் வீட்டுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2.30 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். அவரிடம் வீட்டில் வைத்தே விசாரணை நடத்தினர். அதே நேரத்தில் சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகாவுக்கு சொந்தமான ராடன் மீடியா அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை தேனாம்பேட்டை ஜெயம்மாள் தெரு மற்றும் தி.நகர் பவுல் அப்பாசாமி தெருவில் உள்ள ராடன் மீடியா அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பின்னர், தேனாம்பேட்டை ராடன் மீடியா அலுவலகத்துக்கு சரத் குமாரை வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்து வந்தனர். அங்கு வைத்து அவரிடம் இரவு வரை தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

ராடன் அலுவலகத்தில் மீண்டும் சோதனை ஏன்? என்பது குறித்து வருமானவரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் பணப் பரிவர்த்தனைகள் குறித்த ஏராளமான தகவல்கள் உள்ளன. ஆவணங்களில் இருந்த பணப் பரிமாற்ற தகவல்கள் உண்மை என்பது தெரியவந்தது. சரத்குமாருக்கும் பணம் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன. விஜயபாஸ்கர் மூலம் ரூ.7 கோடி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. அதன்பேரில்தான் சரத்குமாரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு, அவரிடம் விசாரணையும் நடத்தினோம்.

எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, பல முக்கியமான ஆவணங்கள் மற்றும் பணம் சரத்குமார் தொடர்புடைய இடங்களில் இருக்கலாம் என்று நம்புகிறோம். இதனால்தான் மீண்டும் சோதனை நடத்தி வருகிறோம். தொடர்ந்து பல இடங்களில் சோதனை நடத்த இருக்கிறோம்.

சோதனையில் கிடைக்கப் பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் 6 அமைச்சர்கள், ஒரு எம்பி-க்கு அதிக அளவில் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்துவதற்கு கூடுதல் ஆதாரங்களை தேடி வருகிறோம். இதில் முக்கிய பிரமுகர்கள் பலர் சிக்க வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார். இந்த வழக்கில் விரைவில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் களம் இறங்கி விசாரிக்க உள்ளனர்.

இந்நிலையில் நடிகை ராதிகாவுக்கு இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு ஆஜராகுமாறு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.