“எங்கள் தெய்வமான ராவணனை எரிக்காதே”: பழங்குடி மக்கள் போராட்டம்!

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கோண்டு பழங்குடி மக்கள், இராவணன் உருவபொம்மை எரிக்கப்படுவதை எதிர்த்து போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

விஜயதசமி – தசரா விழாவில் ‘இராம லீலா’ என்ற பெயரில் இராவணனின் உருவபொம்மைகளை எரித்து இராமனின் வெற்றியை இந்தியாவின் வட மற்றும் மத்திய மாநிலங்களைச் சேர்ந்த ஆதிக்க சாதி இந்துக்கள் கொண்டாடுகிறார்கள்.

இதற்கு நேரெதிராக பன்னெடுங்காலமாக கோண்டு பழங்குடி மக்கள் இராவணனை தெய்வமாக வழிபடுகிறார்கள். டெல்லியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பிஸ்ராக் கிராமத்தில் தான் இராவணன் பிறந்ததாக அம்மக்கள் நம்புகிறார்கள். இராவணனின் மனைவியான மண்டோதிரி பிறந்ததாகக் கூறப்படும் ராஜஸ்தானின் மாண்டோர் கிராம மக்களும் தசராவை கொண்டாடுவதில்லை.

மராட்டிய மாநிலத்தில் இருக்கும் கட்சிரோலி மாவட்டத்தின் கோர்ச்சி நகரத்தில் இந்த ஆண்டும்  3 ஆயிரத்திற்க்கும் அதிகமான பழங்குடி மக்கள் இராவணின்  படத்தை வைத்து வழிபாட்டுக் கூட்டம்  ஒன்றை நடத்தினார்கள்.

தாங்கள் வழிபடும் இராவணன் எரிக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும் என ஒவ்வொரு ஆண்டும் மனு கொடுக்கிறார்கள். இந்த ஆண்டும் இராவணனின் உருவபொம்மைகளை எரிக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும் என பேரணி ஒன்றை நடத்தி மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர். எனினும் வழக்கம் போல அதிகார வர்க்கம் இதைக் குப்பைக் கூடைக்கு அனுப்பியிருக்கும்.

கோண்டு பழங்குடி மக்களின் கலாச்சாரம் பண்டைய காலத்திலிருந்தே தனித்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளும் அதிகாரிகள், இராவணனை எரிப்பதை தடுக்க முன்வர மாட்டார்கள். இது பழங்குடி மக்களுக்கும் தெரியாமல் இல்லை.

வால்மீகி இராமாயணம் கூட, இராவணனைப் பற்றித் தவறாக எதுவும் கூறவில்லை. துளசிதாஸ் இராமாயணத்தில் மட்டுமே இராவணன் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளார். இராவணன் தவறு எதுவும் செய்யவில்லை என்றும், அவர் செய்தது அனைத்தும் தனது குடும்பத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்கத் தான் என்றும் வால்மீகி தெளிவாகக் கூறியுள்ளார் என கோண்டுவானா காண்டன்தாரா கட்சி அமைப்பாளர் சந்தீப் வாக்கடே கூறியுள்ளார்.

கட்சிரோலி மாவட்டத்தை சேர்ந்த கமால்பூர், ரஞ்சி, பென்திரி, மல்தாகிர் உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் தனோரா மற்றும் குர்கேடா தொகுதிகளிலும் இராவணன் வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றதாக வாக்கடே கூறினார்.

கமலாபூர் கிராமத்தில் 42-க்கும் மேற்பட்ட கிராம மக்களும், பெந்திரி கிராமத்தில் 6,000 க்கும் மேற்பட்ட பழங்குடி மக்களும் ஒன்றுகூடி இராவணனை வழிபட்டனர். இராவணனை வழிபடும் இந்த விழாவை கோண்டி தர்ம சமஸ்கிருத பச்சாவ் சமிதி என்ற அமைப்பு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகிறது.

இந்நிலையில் உத்திரபிரதேசத்தின் கவுதம புத்தா நகர் மாவட்டத்திலுள்ள பிஸ்ரக் கிராமத்தில் இராவணின் சிலையைச் சேதப்படுத்தி, கோவிலையும் சூறையாடியிருக்கிறது இந்து மதவெறிக்கும்பல். ஆனால் அங்குள்ள கிராம மக்கள் இந்துத்துவ வெறியர்களின் மிரட்டலுக்கு அடிபணியாமல் இராவணனுக்கு பூஜைகள் செய்து வழிபட்டார்கள்.

சென்னையில் தந்தை பெரியார் திராவிடக்கழகம் பல தடைகளைத் தாண்டி இராமன் மற்றும் சீதாவின் உருவ பொம்மைகளை எரித்து இராவண லீலாவை கொண்டாடினார்கள். காவல்துறை அனுமதி மறுத்தும் தடையை மீறி இந்த ஆர்பாட்டம் நடந்ததால் ஏழு பேர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்கள்.

“இராமன் தேசிய நாயகன்”, “அயோத்தியை ஏற்காதவன் தேசத்துரோகி” என்று பார்ப்பனியத்தை திணிக்கும் இந்துமத வெறியர்களுக்கு எதிராக நாடெங்கும் இன்று இராவண லீலா வளர்ந்து வருகிறது. இது ஆர்.எஸ்.எஸ் அயோக்கியத்தனமாக சிக்ஸ் பேக் பாலிவுட் இராமனை அறிமுகம் செய்வதற்கு முன்பே பல நூற்றாண்டுகளாக பழங்குடி மக்களிடத்தில் இருக்கிறது. இத்தகைய பார்ப்பனிய எதிர்மரபுகளை, மக்களின் பண்பாடுகளை ஒழிப்பதே இந்து ராஷ்டிரத்தின் இலட்சியம்.

இராவணன் தீயவன் இல்லை என வால்மீகி பாராட்டியுள்ளார். ஆனால் அதிகாரிகளோ எங்கள் கோரிக்கைகளுக்கு தயக்கம் காட்டி வருகிறார்கள். இந்த ஆண்டும் நாங்கள் கொடுத்த குறிப்பாணையை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அரசின் மெத்தன நடவடிக்கையால் எப்பொழுதும் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றப் போவதில்லை என்பது தெளிவாகப் புரிந்துவிட்டது என்கிறார்கள் கோண்டு மக்கள்.

இந்துமத வெறியருக்கு எதிராக மனு கொடுத்து பயனில்லை என்று பழங்குடி மக்களே தெளிந்து விட்டார்கள்.

– சங்கவை

Courtesy: vinavu.com