“எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகும் வரை சட்டப் பேரவையை திமுக புறக்கணிக்கும்!” – மு.க.ஸ்டாலின்

துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக இன்று தமிழக சட்டப்பேரவை கூடியது. சட்டப்பேரவைக்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்தனர்.

முன்னதாக, இன்றைய அவை நிகழ்வுகளை ஒத்தி வைத்து நாள் முழுவதும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என, ஒத்திவைப்பு தீர்மானம் கோண்டு வருவதற்காக திமுக சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

ஆனால், திமுகவின் ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு சபாநாயகர் தனபால் மறுத்து விட்டார். இதையடுத்து, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது, “தூத்துக்குடியில் பொதுமக்கள் உணர்ச்சி வசப்படாமலும், யாருடைய தூண்டுதலுக்கு ஆளாகாமலும் இருக்க வேண்டும். தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்திற்கு திமுகவே காரணம். திமுக எம்எல்ஏ கீதா ஜீவன் தான் போராட்டத்திற்கு காரணம்” என தெரிவித்தார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக புகைப்படங்களைக் காட்டியும் முதல்வர் பேசினார்.

இதையடுத்து, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மான அடிப்படையில் மு.க.ஸ்டாலினைப் பேச சபாநாயகர் தனபால் அனுமதித்தார். அப்போது, “துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகும் வரை பேரவை நிகழ்வுகளில் திமுக பங்கேற்காது. முதல்வர் அறிக்கையில் துப்பாக்கிச் சூடு என்ற வார்த்தையே இடம்பெறவில்லை. அமைச்சரவை கூடி ஸ்டெர்லைட்டை மூட சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்” என தெரிவித்தார்.

இதையடுத்து, மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

Read previous post:
0a1c
ரஜினியின் ‘காலா’ படத்தின் ட்ரெய்லர் – வீடியோ

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ திரைப்படம் வருகிற (ஜூன்) 7ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. இதனையொட்டி இப்படத்தின் அதிகாரபூர்வ ட்ரெய்லரை இப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் இன்று

Close