அரசாணை அல்ல, ஜல்லிக்கட்டு போல் சிறப்பு சட்டமே ஸ்டெர்லைட் பிரச்சனைக்கு தீர்வு!

ஸ்டெர்லைட்டை மூடுவதாக ஒரு திடீர் அரசாணையைப் பிறப்பித்து, ஆலைக்கு சீல் வைக்கும் நாடகத்தையும் தமிழக அரசு அரங்கேற்றியிருக்கிறது.

நாளை ஆளுநர் தூத்துக்குடி செல்லவிருக்கிறார். நாளை மறுநாள் சட்டமன்றம் கூடவிருக்கிறது. கொல்லப்பட்டவர்களின் உடல்களை மறு கூராய்வு செய்வது தொடர்பாக எமது வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனு நாளை மறுநாள் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டுதான் இந்த “சீல் வைக்கும் நாடகம்” அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை என்பது மக்களை ஏமாற்றும் மோசடி.

“சூழலை மாசுபடுத்தியதற்காக மூட வேண்டும்” என்று 2010-ல் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, 2013 இல் உச்சநீதிமன்றம் சென்று ஸ்டெர்லைட் முறியடித்து விட்டது. 2013-ல் நச்சுப்புகை வெளியானதையொட்டி, (இப்போது சீல் வைப்பதைப் போலவே) அன்றைக்கும் ஜெ அரசு சீல் வைத்தது. ஆனால் பசுமைத் தீர்ப்பாயத்தில் உத்தரவு பெற்று ஆலையை மீண்டும் திறந்து விட்டது ஸ்டெர்லைட் நிர்வாகம். அந்த வழக்கு 5 ஆண்டுகளாக இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது.

எனவே இந்த சீல்வைப்பு என்பது ஒரு கபட நாடகம். உண்மையிலேயே நிரந்தரமாக இந்த ஆலையை மூடவேண்டுமானால், “தாமிர உருக்காலைகளுக்கு தமிழகத்தில் இடமில்லை” என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். இந்த சட்டமன்றக் கூட்டத்திலேயே, ஜல்லிக்கட்டுக்கு சட்டம் இயற்றியதைப் போல இதற்கும் தனிச் சட்டம் இயற்ற வேண்டும். இவ்வாறு செய்வதுதான் இதற்கு சட்ட ரீதியான தீர்வு என்று சூழலியல் ஆர்வலர்களும் சட்ட வல்லுநர்களும் கூறுகின்றனர். இவ்வாறுதான் மகாராட்டிரத்திலிருந்து ஸ்டெர்லைட் விரட்டப்பட்டது.

தற்போது எடப்பாடி அரசு இந்த அறிவிப்பை செய்வதற்கு காரணம், பத்து லட்சம், இருபது லட்சம் நிவாரணத்துக்கு தூத்துக்குடி மக்கள் யாரும் மயங்கவில்லை. துப்பாக்கி குண்டு காயம் பட்டு மருத்துவமனையில் கிடக்கும் மக்கள், “என்றைக்கு ஆலையை மூடுவீர்கள்” என்ற ஒரே கேள்வியை மட்டுமே எழுப்புகின்றனர். “ஸ்டெர்லைட்டை மூடினால்தான் இறந்தவர்களின் உடலை வாங்குவோம்” என்கின்றனர். எனவே, மக்களை ஏமாற்றி இப்போதைக்கு இப்பிரச்சினையை முடிப்பதற்காகவே இந்த மோசடி அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது.

இரண்டாவதாக, துப்பாக்கி சூடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கைகள். துப்பாக்கி சூடு நடத்திய காவல் துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்வதற்குப் பதிலாக, இன்னொரு மோசடியை இந்த அரசு செய்திருக்கிறது.

“துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார்” என்ற கேள்வியை 22-ம் தேதி முதல் உலகமே கேட்டு வருகிறது. அதற்கு இத்தனை நாட்கள் பதில் சொல்லாத இந்த அரசு, திடீரென்று “துணை வட்டாட்சியர்தான் உத்தரவிட்டார்” என்று ஒரு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து வெளியிட்டிருக்கிறது.

தொழில்முறை கிரிமினல்கள் ஒரு கொலையைச் செய்து விட்டு, வேறொரு எடுபிடியின் கையில் அரிவாளைக் கொடுத்து சரணடைய சொல்வதைப் போல, முதல்வர் – தலைமைச் செயலர் – டி.ஜி.பி – மாவட்ட ஆட்சியர் – காவல் கண்காணிப்பாளர் மட்டத்தில் சதித் திட்டம் தீட்டி, துப்பாக்கிச் சூட்டை அரங்கேற்றி விட்டு, அந்தக் குற்றத்தை ஒரு வட்டாட்சியரின் தலையில் போட்டு ஏமாற்றுகின்றனர். இதைவிட அப்பட்டமான மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது.

ஒரு பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனத்தின் கூலிப்படையாகவே எடப்பாடி அரசும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் செயல்பட்டிருக்கின்றன. கொலைக்குற்றத்தை நிகழ்த்தியது மட்டுமல்ல, தடயங்களை அழிப்பது, சாட்சிகளை மிரட்டுவது உள்ளிட்ட எல்லா கிரிமினல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளன. கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர், காயம்பட்டவர்கள் எத்தனை பேர் என்பது இதுவரை முடிவாகவில்லை.

ஒரு சுயேச்சையான புலன் விசாரணையின் மூலம் இவர்களுடைய சதித்திட்டம் விசாரிக்கப்பட வேண்டும். இவர்கள் தண்டிக்கப்படவேண்டும். அதனை இல்லாமல் செய்வதற்குத்தான் அருணா ஜெகதீசன் என்ற கைப்பாவை நீதிபதியை வைத்து ஒரு விசாரணைக் கமிசன் அமைத்து, இப்படி ஒரு மோசடி முதல் தகவல் அறிக்கையையும் பதிவு செய்திருக்கிறது எடப்பாடி அரசு.

இந்த இரண்டு நடவடிக்கைகளுமே, மக்களின் ரத்தக்காயத்தில் உப்பைத் தேய்க்கும் நடவடிக்கைகள். இந்த ஏமாற்றுக்கு பலியாகாமல், நமது கோரிக்கைகளில் உறுதியாக நிற்போம். போராட்டத்தை தலைமையேற்று நடத்திய மக்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் விரைவிலேயே கூடி முடிவு செய்வார்கள். “அதுவரை இந்த அரசின் எந்தவிதமான அறிவிப்புகளுக்கும் மயங்க வேண்டாம்” என்று போராட்டக் குழுவின் சட்ட ஆலோசகர்கள் என்ற முறையில் தூத்துக்குடி மக்களைக் கேட்டுக் கொள்கிறோம். அவசரம் கருதி இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம்.

வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

வழக்கறிஞர் அரிராகவன்

வழக்கறிஞர் ராஜேஷ்

 சட்ட ஆலோசகர்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு

 Courtesy: vinavu.com