ஸ்டெர்லைட் ஆலையை “நிரந்தரமாக” மூட அரசாணை பிறப்பித்தார் எடப்பாடி பழனிச்சாமி அரசு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை “நிரந்தரமாக” மூடுவதற்கான அரசாணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 22 ஆண்டுகளாக வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை நிறுவனம் இயங்கி வருகின்றது.

கடந்த 23.3.2013 அன்று, ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதாக புகார் வந்ததன் அடிப்படையில், தொழிற்சாலையை மூடுவதற்கும், மின் இணைப்பை துண்டிப்பதற்கும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 29.3.2013 அன்று உத்தரவிட்டார். அதன் பேரில், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, தொழிற்சாலை உடனடியாக மூடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையின் மேல்முறையீட்டில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம், 8.8.2013 அன்று ஆலையை இயக்குவதற்கு அனுமதியளித்தது.

இத்தீர்ப்பை எதிர்த்தும், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்றும், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 2013-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அம்மனு தற்போது நிலுவையில் உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து இயக்குவதற்கான உரிமம் 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், ஆலை நிர்வாகம் இதனை புதுப்பிக்க விண்ணப்பித்தது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், ஏற்கெனவே விதித்திருந்த மாசு கட்டுப்பாடு தொடர்பான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதால், 9.4.2018 அன்று, அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதையடுத்து, ஆலை இயங்கவில்லை. 24.5.2018 அன்று முதல், ஆலைக்கான மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டது. தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பிறப்பித்த சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட நிபந்தனைகளை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிறைவேற்றாத காரணத்தினால், தூத்துக்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி வந்தனர். ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக் குழுவினர் இன்று தலைமைச் செயலகத்தில் என்னையும், துணை முதல்வரையும், மூத்த அமைச்சர்களையும், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளையும் சந்தித்து, ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை பிறப்பிக்குமாறு வைத்த கோரிக்கையும், தூத்துக்குடி மக்களின் கோரிக்கைகளும், தமிழ்நாடு அரசால் கவனமாக பரிசீலனை செய்யப்பட்டது.

மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழக அரசு, பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பு அளித்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முடிவெடுத்து, அதற்கான அரசாணையை இன்று வெளியிட்டுள்ளது” என முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Read previous post:
0a1c
Mr.Chandramouli gears up for a big release on July 6th  

The delight of watching handsome father-son duo Navarasa Nayagan Karthik and Gautham Karthik is nowhere farther. The delightful news arrives

Close