அண்ணா சாலை பள்ளமும், நியூட்ரினோ திட்டமும்!

தலைப்பை பார்த்தவுடன் ஏதோ மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல் இருக்கும். ஆனால் தொடர்பு உள்ளது.

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டபோது நாங்கள் வைத்த ஒரு முக்கியமான வாதம், பல லட்சக்கணக்கான டன் பாறைகளை பல லட்சக்கணக்கான கிலோ வெடிமருந்துகளை பயன்படுத்தி வெடிக்கும்போது ஏற்படும் அதிர்வலைகள் எந்த திசையில் பயணிக்கும், எவ்வளவு தூரம் போகும் என்றும், எப்போது திரும்ப அடிக்கும் என்றும் கணக்கிடுவதற்கு இன்றைய அறிவியல் உலகில் சாத்தியமில்லை என்று எடுத்து வைத்தோம்.

அதற்கு எடுத்துக்காட்டாக, 2016 ஆம் ஆண்டு ஜப்பானின் வட கிழக்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம், 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் புகுஷிமா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தொடர்வினைகள் (after shocks ) என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவித்தன. இதில் இருந்து தான் நிலநடுக்கம் ஏற்படும்போதோ, பாறைகளை வெடிகளை வைத்து தகர்க்கும்போதோ அதன் தொடர்வினைகள் எப்படி இருக்கும் என்பதை அனுமானிக்க முடியாது என்றும், அதனால் தான் மேற்கு தொடர்ச்சி மலையில் வெடிகளை வைத்து தகர்க்கும்போது அருகில் உள்ள நீர்நிலைகள் எப்படி பாதிக்கப்படும் என்பதை அனுமானிக்கமுடியாது என்றும் சொன்னோம்.

இப்போது சென்னையில் “மெட்ரோ ரயில்” திட்டத்திற்கு “சுரங்கப்பாதை துளைக்கும் இயந்திரம்” (tunnel boring machine) அண்ணா சாலையில் போடும் சுரங்கத்தால் ஒரு பெரிய பள்ளம் விழுந்து பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் மாட்டிக்கொண்டது. இத்தனைக்கும் மெட்ரோ ரயிலுக்கு வெடி வைத்து தகர்ப்பதெல்லாம் கிடையாது. இதற்கே இப்படியென்றால் அம்பரப்பர் மலையில்? இத்தனைக்கும் கேரளாவின் மிகப் பெரிய இடுக்கி அணை,  முல்லை பெரியார் அணை, வைகை, வைப்பார் போன்ற பல நீர்நிலைகள் உள்ளன நியூட்ரினோ திட்டம் அமைக்கப்படும் இடத்தின் அருகில்.

தேவையா இந்த நியூட்ரினோ திட்டம் ?

SUNDAR RAJAN

POOVULAGIN NANBARGAL