முற்போக்கான நடிகர் சத்யராஜின் மகள் இப்படிப்பட்ட ஒரு அமைப்போடு இணைந்து செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது!

சென்னை பெருநகரத்திற்குட்பட்ட அரசுப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால் இதனை செயல்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட ISKCON-ன் ’அக்சய பாத்திரா’ என்னும் NGO நிறுவனத்தின் கடந்தகால செயல்பாடுகளை பார்க்கும்போது, சத்துணவு திட்டத்தின் முன்னோடியான தமிழ்நாட்டின் கட்டமைப்பை சிதைக்க அடிமை எடப்பாடி அரசு மூலமாக மோடி அரசு முடிவெடுத்துவிட்டதாகவே தெரிகிறது.

இந்த ISKCON அமைப்பு ஒரு தீவிர சமயம் சார்ந்து இயங்குகிறது. முதலில் இப்படிப்பட்ட ஒரு அமைப்பை பள்ளி கட்டமைப்பிற்குள் கொண்டுவருவதே தவறானது. மோடி அரசின் தயவால் இன்று கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் மதிய உணவு திட்டத்தை இவர்களே செயல்படுத்துகிறார்கள்.

0a1c

இவர்களை பொறுத்தவரை வெங்காயம், பூண்டு போன்றவை கூட சமையலில் சேர்க்கப்படக் கூடாதவை.

சத்துணவின் திட்டத்தின் நோக்கத்தையே சிதைக்கக்கூடிய வகையில், உணவுடன் முட்டையை வழங்க மறுத்த இவர்கள், தொடர்ந்து வெங்காயம், பூண்டையும் சேர்க்க மறுத்துள்ளனர். இந்திய அரசு வகுத்துள்ள வழிகாட்டுதலுக்கு முற்றிலும் முரணாக செயல்படுகின்றனர். அதோடு சுவையில்லாத உணவையே வழங்குகின்றனர். இதனால் வழக்கமாக வழியில்லாமல் மதிய உணவு சாப்பிடும் குழந்தைகள் கூட சாப்பிட மறுக்கின்றனர்.

முட்டை மட்டுமல்ல, வெங்காயம் பூண்டையும் கூட சேர்க்கமாட்டோம் என்று திமிராகவே பதிலளிக்கின்றனர். (விரிவான செய்தி: https://www.thehindu.com/…/why-are-karn…/article27378176.ece)

காலை உணவின் முக்கியத்துவம் கருதி, அதனை செயல்படுத்த பல காலமாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்த நிலையில், காலை உணவு திட்டம் வெகுவாக வரவேற்கப்பட்டது. ஆனால் வெங்காயம், பூண்டிற்கு மாற்றாக அதே சத்துள்ள மற்ற பொருட்களை கொண்டு தயாரித்த காலை உணவு வழங்குவோம் என்று வெளிப்படையாகவே கூறும் ’அக்சய பாத்திரா’ அமைப்பைக் கொண்டு காலை உணவு திட்டத்தை நிறைவேற்ற அடிமை எடப்பாடி அரசு முடிவெடுத்துள்ளது.

மேலும், இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்த இன்று கோரிக்கை வைத்துள்ளார் எடப்பாடி (https://timesofindia.indiatimes.com/…/articles…/74155281.cms).

இப்படியே போனால் மதிய உணவு திட்டத்தையும் அவர்களிடம் ஒப்படைப்பார்.

முட்டை, வெங்காயம், பூண்டு இல்லாத உணவு மாணவர்கள் மீது திணிக்கப்படும். சத்துணவு. தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலையும் ஏற்படும்.

சுவை இல்லாத சத்து இல்லாத உணவு ஒட்டுமொத்த சத்துணவு திட்டத்தையே சிதைத்துவிடும்.

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா அவர்கள் இந்த நிறுவனத்தின் அம்பாசிடராக இருக்கிறார். இந்த காலை உணவு திட்டத்தை கொண்டுவர கடந்த நவம்பர் மாதமே எடப்பாடிக்கு கோரிக்கை வைத்துள்ளார். அதன்படியே தற்போது செயல்பாட்டிற்கு வருகிறது. இந்த அமைப்பிற்கான இடத்தை சென்னை நகரத்திற்குள் ஒதுக்கிக் கொடுத்ததற்கு இன்று எடப்பாடிக்கு நன்றியும் கூறியுள்ளார்.

தமிழர் நலனில் அக்கறைகொண்ட முற்போக்கான நடிகர் சத்யராஜின் மகள் இப்படிப்பட்ட ஒரு அமைப்போடு இணைந்து செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது.

வெங்காயம் பூண்டு புறக்கணிப்பு என்பதே, நிலத்திற்கு அடியில் விளையும் பொருட்கள் ஒடுக்கப்பட்ட கூலி தொழிலாளிகளின் உணவு என்ற மனோபாவத்தின் வெளிப்பாடே. மேலும் குறிப்பிட்ட மதத்தினரின் நம்பிக்கையை அனைவரின் மீதும் திணிப்பதே அரசியலமைப்பிற்கு எதிரானதே. இவர்களுடைய செயல்பாடுகள் தமிழ்நாட்டின் சத்துணவு கட்டமைப்பையே சிதைத்துவிடும்.

ISKCONன் ’அக்சய பாத்திரா’ அமைப்பை தமிழர்கள் முழுமூச்சோடு எதிர்க்க வேண்டும். காலை உணவு திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவதோடு, அதனை மதிய உணவு திட்டத்தை போல் தமிழ்நாட்டு அரசே செயல்படுத்த வேண்டும்.

சத்துணவு பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, சத்துணவு கூடங்களை சீர்படுத்தினாலே, காலை உணவு திட்டத்தை அவர்கள் திறம்பட சிறப்பாக செய்து முடிப்பார்கள்.

செய்யுமா எடப்பாடி அரசு?

செய்ய வைப்போம்.

நன்றி: இயக்க அரசியல்

 

Read previous post:
k7
“முடிந்தவரை அன்பை மட்டுமே பரப்புவோம்; ரொம்ப ஜாக்கிரதையாக பரப்புவோம்!” – விஜய் சேதுபதி

நடிகர் போஸ் வெங்கட் தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து, தனக்கென ஒரு தனித்த இடத்தை பிடித்திருப்பவர். தற்போது முதல் முறையாக

Close