வரலாற்றுவழி தமிழ்த் தேசியமும், கற்பனையான இந்தியத் தேசியமும் (பகுதி 2)

0a1e(தினமணி இதழில் 01-08-2018 அன்று நடுப்பக்கக் கட்டுரையாக வெளியான அர்ஜுன் சம்பத் எழுதிய ‘தமிழ்த்தேசியமும் இந்தியத் தேசியமும்’ என்ற, அறிவியல் அடிப்படையற்ற, அரசியல் நோக்குடன் எழுதப்பட்ட கட்டுரைக்கு மறுப்பாக, பேராசிரியர் த.செயராமன் அவர்களால் எழுதப்பட்ட ‘வரலாற்றுவழி தமிழ்த்தேசியமும் கற்பனையான இந்தியத் தேசியமும்’ என்ற இக்கட்டுரையை “தற்போது வெளியிட இயலவில்லை” என்று தினமணி இதழ் தெரிவித்துள்ள நிலையில், இணையத்தில் இக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. நீளமான இக்கட்டுரை, அதன் முக்கியத்துவம் கருதி, இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ‘ஹீரோநியூஸ்ஆன்லைன்’ டாட்காமில் பிரசுரிக்கப்படுகிறது. பகுதி 1 ஏற்கெனவே வெளியிடப்பட்டிருக்கிறது.)

# # #

பகுதி -2

இந்து தேசியம் சாத்தியமா?

இந்தியத் தேசியத்தை உருவாக்கி அதை மெல்ல இந்து தேசியமாக அமைத்துவிடும் முயற்சிகள் தொடர்கின்றன. இந்த நோக்கத்தைக் கொண்ட அரசியலாளர்கள், தேசம், தேசியம், தேசியஇனம் போன்றவை குறித்த அரசியல் அறிவியல் அடிப்படையில் எவ்விதப் புரிதலுமின்றி குழப்பமான கருத்துகளை வெள்ளோட்டம் விடுகிறார்கள்.

இந்து தேசியம் என்ற ஒன்று உருவாகவே வாய்ப்பில்லை. இந்தியத்துணைக் கண்டத்தில் பல்வேறு சமயங்கள் காலாகாலமாக இருந்து வருகின்றன. இதில் பெரும்பான்மையினருடையதாகக் கருதப்படும் இந்து மதம் என்பது ஆங்கிலேயர்கள் வரும்வரை இருந்ததேயில்லை. ஆங்கிலேயர்கள்தாம் முன்பிருந்த பல மதங்களையும், வழிபாடுகளையும் ஒருங்கிணைத்து செயற்கையாக உருவாக்கி இந்து மதம் என்று பெயரிட்டார்கள்.

இந்தியாவில் அரசு நிர்வாகத்தை கைக்கொண்ட ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிர்வாகத்தை ஒழுங்கு செய்ய வேண்டியிருந்தது. இந்நிலையில் 1794-ஆம் ஆண்டு மானவ தர்மசாஸ்திரத்தை சர் வில்லியம் ஜோன்ஸ் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, ‘இந்து சட்டம்’ (Hindu Law) என்று பெயரிட்டார். இந்த மொழிபெயர்ப்பு நூலின் அடிப்படையில், எச்.டி.கோல்புரூக் ‘தி இந்து லா’ என்ற இந்து சட்டத் தொகுப்பை உருவாக்கினார்.

இவ்வாறு பல்வேறு மதங்களை இணைத்துச் செயற்கையாக இந்து மதம் உருவாக்கப்பட்டதைக் காஞ்சி சங்கராச்சாரியார் தம் நூலில் குறிப்பிடுகிறார்:

“நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும், வெள்ளைக்காரன் நமக்கு இந்து என்று பொதுப்பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம்…. வெள்ளைக்காரன் தன்னையும் அறியாமல் நமக்கு ‘ஹிந்து’ என்று பொதுப்பெயர் தந்து, இன்று இந்திய தேசம் என்று ஒன்று இருக்கும்படியான மகா பெரிய நன்மையைச் செய்திருக்கிறான்! ” (தெய்வத்தின் குரல், பாகம் 1, ஏழாம் பதிப்பு, வானதி பதிப்பகம், சென்னை, 1988, பக்.305-306)

இந்து என்பது ஒரு இனமோ, ஒரு மதமோ அல்லது நாடோ அல்ல. அது குறிப்பிட்ட புவியியல் பகுதியைக் குறித்தது. அக்கேமீனட் பேரரசுக்கால கிரேக்க கல்வெட்டு சிந்துநதிக் கரையோரப் பகுதிகளை ‘ஹிந்துஷ்’ என்று குறிப்பிடுகிறது. பிற்கால அராபியர் சிந்துநதிக்கு அப்பால் இருந்த இந்திய துனைக்கண்ட மக்களை ‘அல்ஹிந்த்’ என்று குறிப்பிட்டனர்.

19-ம் நூற்றாண்டில் அதிகாரத்திலும், பதவியிலும் அதிக பங்கு கேட்க அவரவர் சமுகத்தினர் எண்ணிக்கையை உயர்த்திக்காட்ட வேண்டிய தேவை எழுந்தது. ஆகவே, அதிகாரத்தை துய்க்க துடித்த மேல் தட்டு மக்களால் இந்து என்ற சமய உருவாக்கம் வரவேற்கப்பட்டது. செயற்கையாக அனைத்து மதங்களையும் இணைத்து இந்த வரையறுக்குள் பௌத்தர், சமணர், பழங்குடிகள் கொண்டுவரப்பட்டனர்.

1955-ஆம் ஆண்டு இந்து சட்டம் தொகுக்கப்பட்டபோதும், இந்து என்பது இலக்கணப்படுத்தப்படவில்லை ‘எவன் ஒருவன் மதத்தால், இஸ்லாமியனோ, கிறித்துவனோ, பார்ச்சியோ, யூதனோ அவனுக்கு இச்சட்டம் பொருந்தாது என்று அது குறிப்பிடுகிறது.

இந்தியா என்ற கட்டமைப்பு

ஆங்கிலேயரின் வாளின் நுனியால் இணைக்கப்பட்ட இந்தியா; செயற்கையாக இணைக்கப்பட்ட இந்து மதம்; 200 ஆண்டுகால ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் எழுந்த விடுதலைப் போராட்டம்; ஆங்கிலேயரே உருவாக்கிய மையப்படுத்தப்பட்ட ஓர் அரசதிகாரம்; ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின்னும் ஒரு நாடாகத் தொடரும் நிலை; அதைக் கட்டிக்காக்க ஓர் இறுக்கமான அரசியலமைப்பு இதுதான் இந்திய தேசியத்தின் இரகசியம்.

1980-களில் தான் அனைத்து இந்திய தேசியம் உருவாகப் தொடங்கியது. ஆங்கிலம் அறிந்த மத்திய தர வர்க்க அறிவாளிகள், பிராமணர்கள் இந்திய அளவில் கைகோர்த்தனர். இந்திய உருவாக்கத்தில் பலன் இருப்பதாக உணர்ந்தனர். இவர்களே இந்திய தேசியம் என்ற செயற்கை தேசியத்தை உருவாக்கப் பங்களித்தவர்கள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வரைந்தவர்கள் விபரம் அறிந்தவர்களாக இருந்தபடியால், இந்தியாவை ஒரு ‘தேசம்’ (Nation) என்று இந்திய அசியலமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அதைப் போலவே, பல்தேசிய இன மக்கள் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் தங்கள் மரபு வழித் தாயகத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் நிலையில், அவர்களுக்குக் குறைந்த பட்சம் உண்மையான கூட்டாட்சி முறையாவது வழங்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி வழங்க வேண்டும் என்றுதான் அரசியல் அமைப்பு அவையில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அன்றைய இந்து-முஸ்லிம் கலவரச் சூழலில் அனைத்து அதிகாரங்களும் மைய அரசில் குவிக்கப்பட்டன. அரசியல் அறிவியலாளர் கே.சி.வியர் கூறுவதுபோல, இன்று நிலவுவது ‘அரை-குறைக் கூட்டாட்சி’ (Quasi Federal) இந்திய அரசியல் சட்டத்தில் அதை எழுதியவர்கள் ‘கூட்டாட்சி’ (Federal) என்ற சொல்லைத் தவிர்த்தார்கள்.

இந்தியா என்ற நாடு எப்போதாவது ஒரு தேசமாகக் கருதப்படுமா? என்ற சந்தேகம் இந்தியத் தலைவர்களுக்கே இருந்தது. இந்திய விடுதலை வீரரும், பிரம்மசமாஜ் உறுப்பினருமான பிபின் சந்திரபால், 1881-ஆம் ஆண்டில் ‘ஓர் இந்தியா’ என்பது கற்பனையான நிறைவேறாக் கனவு (Chimera), சாத்தியமில்லாதது, ஆனால் உருவாக்கப்பட்டால் நலம் தரும், என்று கருத்தறிவித்தார். பலகோடி செலவில் முன்னெடுக்கப்பட்ட தொடர் பிரச்சாரமும், கற்பிதமும், எதிர்க்கருத்துகள் தண்டனைக்குரிய குற்றமாக நடைமுறைப்படுத்தப்பட்டமையும் இந்தியாவை ஒரு தேசமாகக் காட்டுகின்றன.

இரஷ்யாவைச் சேர்ந்த ஆய்வாளர் ஏ.எம். டயகாவ் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
“இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக, இந்தியா இங்கிலாந்தின் காலனியாக இருந்த உண்மை காரணமாக வெளி உலகத்திற்கு இந்தியா ஏதோ ஒன்றிப்போன தன்மை கொண்டது போலவும், அதில் வசிக்கும் மக்கள் கூட்டம் அத்தனையும் ஒரே வகையைச் சேர்ந்தது போலவும் ஒரு தோற்றத்தைக் கொடுத்திருக்கிறது… சக்திவாய்ந்த தேச விடுதலைப் போராட்டத்தில் இந்தியாவில் வசிக்கிற அத்தனை மக்களும் ஓரளவு அதிகமாக அல்லது குறைவாகப் பங்கு பெற்றது இந்திய மக்கள் அனைவரும் ஒன்றிப்போய் இருக்கிறார்கள் என்ற பிரமையை மேலும் படைத்திருக்கிறது… இந்தியாவில் இங்லீஷ்காரர்களைப்போல, பிரெஞ்சு, இத்தாலிக்காரர்களைப்போல தொகையில் குறைவில்லாத மக்கள் வாழ்கிறார்கள் என்பதும், அவர்கள் தங்கள் தனிப்பட்ட கலாச்சாரத்தாலும், மொழியாலும், இலக்கியத்தாலும், பழக்கவழக்கங்களாலும், தங்களது தனித் தேசிய குணாதிசயங்களாலும் பிரத்யேகத் தன்மை பெற்றிருப்பவர்கள் என்பதும், தங்களது வரலாற்று முறையான வளர்ச்சியில் ஒரு நீண்ட பாதையைக் கடந்து வந்திருப்பவர்கள் என்பதும் ஒரு சிலருக்குத்தான் தெரியும்.”

 இந்தியா நாடா? தேசமா?

இந்தியா ஒரு நாடு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், அது ஒரு தேசமல்ல. ‘நேஷன்’ (Nation) என்னும் ஆங்கிலச்சொல் ‘தேசம்’ ‘தேசிய இனம்’ இரண்டையும் குறிக்கும். இதற்கு அடிப்படையானவை நான்கு கூறுகள். அவை,
1. ஒரு பொதுமொழி,
2. ஒரு தொடர்ச்சியான வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு.
3. ஒரு பொதுவான பொருளாதார வாழ்வு.
4. பொதுப்பண்பாட்டில் வெளிப்படும் ‘தாம் ஓரினம்’ என்ற உளவியல் – இவற்றைக் கொண்டிருக்கும் வரலாற்றுப் போக்கில் உருவான மக்கள் சமுதாயமே ஒரு தேசம் ஆகும்.

இந்த அடிப்படைக் கூறுகளை இந்தியா நிறைவு செய்யவில்லை. ஆகவே, அது ஒரு நாடு, தேசமல்ல (a State and not a Nation). மார்க்சியரான பிரகாஷ் காரத் ‘சோஷியல் சைன்டிஸ்ட்’ (எண் 37)-இல் இவ்வாறு கூறுகிறார். அதுதான் உண்மை.

“இந்தியாவை ஒரு தேசம் (Nation) என்பது முழுக்க முழுக்க வரலாற்றறிவியலற்ற வார்த்தையாகும். மொழியால், எல்லையால், பண்பாட்டால் தெளிவாகப் பிரிந்துள்ள பெரிய தேசியஇனங்கள் குறைந்தபட்சம் 12 இருக்கின்றன. தெலுங்கு, அஸ்ஸாமி, வங்காளி, ஒரியா, தமிழ், மலையாளி, கன்னடிகா, மகாராஷ்டிரியன், குஜராத்தி, பஞ்சாபி, ஹிந்தி (ஹிந்துஸ்தானி) மற்றும் காஷ்மீரி, இவைகளுக்கப்பால் மணிப்புரி, திரிபுரி, நாகர்கள், கரோ மற்றும் சந்தால் போன்ற ஏராளமான சிறு தேசிய இனங்களும் இருக்கின்றன.

உலகம் முழுவதும் ஒவ்வொரு தேசிய இனமும், அதன் மொழியாலேயே அறியப்படுகிறது. ஆங்கிலேய தேசிய இனம் ஆங்கில மொழியாலும், பிரெஞ்சு தேசிய இனம் பிரெஞ்சு மொழியாலும், ஜெர்மானிய தேசிய இனம் ஜெர்மன் மொழியாலும் அறியப்படுவதுபோலவே, தமிழ்த் தேசிய இனம் தமிழ்மொழியாலும், மராட்டிய தேசிய இனம் மராட்டிய மொழியாலும், வங்காள தேசிய இனம் வங்காள மொழியாலும் அறியப்படுகின்றன. இத்தகைய தேசிய இனங்கள் தனித்தனி சுதந்திர தேசங்களையும் அமைக்க உலக சாசனங்களால் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றன.

இந்திய தேசியம் என்பது ஒரு தேசியம் என்பதற்கான அடிப்படைத் தகுதிகளை நிறைவு செய்யவில்லை. இந்தியத் துணைக்கண்டத்தில் இருக்கும் தேசிய இனங்களின் தனி அடையாளங்களை அழித்து ஓர் ஒற்றைத் தன்மையை வலியுறுத்துகிறது. இது நிலப்பரப்பு தேசியம் (Territorial Nationalism) ஆகும். இந்தியத் தேசியரான ம.பொ.சிவஞானம் ‘இந்திய தேசியத்தின் வயது 100’ என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதன் வயது அவ்வளவே.

ஒரு மதம் ஒரு தேசத்தை உருவாக்காது

65 கோடி மக்கள் தொகை கொண்ட ஐரோப்பாவில் இறையாண்மையுள்ள 50 தேசங்கள் உள்ளன. ஐரோப்பிய நாடுகளின் பண்பாடுகள் வேறுபாடு காணமுடியாத அளவிற்கு ஒற்றுமை உடையன. கிறித்துவ மதம் ஐரோப்பா முழுவதையும் ஒரே உலகமாக இணைத்து இருந்தது. இடைக்காலத்தில், போப்பாண்டவருக்கு அத்தனை அரசுகளும் அடங்கிக் கிடந்தன. ஆனாலும் இந்தக் கிறித்தவ பண்பாட்டு ஓர்மை அரசியல் ஒற்றுமையை ஏற்படுத்திவிடவில்லை. மொழியையே அடையாளமாக கொண்டு தனித்தனி தேசங்கள் எழுந்தன.

இஸ்லாமிய நாடுகள் 23 உள்ளன. அவற்றுள் பெரும்பாலனவை மேற்கு ஆசியாவில் இருக்கின்றன. ஒரே இறைவன் பற்றிய நம்பிக்கை, புனித குரான் ஆகியவை இஸ்லாமியர்களை ஒரு தேசமாக இணைத்துவிடவில்லை. பண்பாடு மற்றும் சமயம் என்பது வேறு. அரசியல் என்பது வேறு. அரசியல் தேசியஇனஅடிப்படையிலேயே அமையும்.

ஏசு கிறித்துவின் புகழ்பாடுவதாலேயே ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஒரே தேசம் என்று கூறுவது எவ்வளவு தவறோ, அவ்வளவு தவறானது, இராமன் உள்ளிட்ட கடவுளர்களை இந்தியாவில் பல இலக்கியங்கள் குறிப்பிடுவதால் இந்தியா ஒரு தேசம் என்று வாதிடுவது. காப்பிய நாயகர்களை இந்திய எல்லை தாண்டியும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

இயல்பான மொழிவழித் தேசியத்தை மறுக்கலாமா?

இயல்பான மொழிவழி தேசிய இனங்களின் இருப்பையும், அடையாளத்தையும் முற்றிலுமாக அழித்து, இந்திய தேசியம் என்ற ஒற்றை அடையாளத்துக்குள் அடக்கி விடவும், அதை மெல்ல மெல்ல இந்து தேசியமாக மாற்றியமைக்கவும், சமயச்சார்பற்ற இந்தியா என்ற கருத்தியலைக் கைவிட்டு, ஆரிய, வேத, சமஸ்கிருத, இந்திச் சார்புடைய ‘பாரததேசம்’ என்பதை நிலைநிறுத்திவிடவும், விடாது முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி’ – ஆகிய தமிழ்க்குடி போன்றே, பல தேசிய இனங்கள் விட்டுக் கொடுத்துத்தான், இந்தியா என்ற அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் மரபுவழி தேசியங்களையும், தேசங்களையும் அழித்து ஒரு மொழி, ஓர் இனத்தின் மேலாண்மையை நிலைநிறுத்தும் மதவாத தேசியத்தை முன்னிறுத்தினால், அது இந்தியாவின் இருப்புக்கே ஆபத்தாய் முடியும்.

(முற்றும்)

பேராசிரியர் த.செயராமன்
மேனாள் வரலாற்றுத்துறைத் தலைவர்,
தமிழ்த் தேசிய ஆய்வாளர்.

(Shared from Va Gowthaman)