வரலாற்றுவழி தமிழ்த் தேசியமும், கற்பனையான இந்தியத் தேசியமும் (பகுதி 1)

0a1e(தினமணி இதழில் 01-08-2018 அன்று நடுப்பக்கக் கட்டுரையாக வெளியான அர்ஜுன் சம்பத் எழுதிய ‘தமிழ்த்தேசியமும் இந்தியத் தேசியமும்’ என்ற, அறிவியல் அடிப்படையற்ற, அரசியல் நோக்குடன் எழுதப்பட்ட கட்டுரைக்கு மறுப்பாக, பேராசிரியர் த.செயராமன் அவர்களால் எழுதப்பட்ட ‘வரலாற்றுவழி தமிழ்த்தேசியமும் கற்பனையான இந்தியத் தேசியமும்’ என்ற இக்கட்டுரையை “தற்போது வெளியிட இயலவில்லை” என்று தினமணி இதழ் தெரிவித்துள்ள நிலையில், இணையத்தில் இக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. நீளமான இக்கட்டுரை, அதன் முக்கியத்துவம் கருதி, இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ‘ஹீரோநியூஸ்ஆன்லைன்’ டாட்காமில் பிரசுரிக்கப்படுகிறது.)

# # #

பகுதி -1

தமிழினத்திற்கு ஒரு பெருமை உண்டு. உலகின் மிகப் பழமையானதும், இன்று வரைப் பயன்பாட்டில் உள்ளதும், செறிவான சொல்வளமும், இலக்கிய வளமும் கொண்ட ஒரு செவ்வியல் மொழிக்குச் சொந்தக்காரர்கள் தமிழர்கள். மற்றவர்களுக்கெல்லாம் தான் பிறந்தது முதல் நாவில் தவழ்வது தாய்மொழி. தமிழைப் பொறுத்தவரை, 24 மொழிகளைப் பெற்றெடுத்ததுடன், 82 உலக மொழிகளுக்கு மூலமாக விளங்குவதால் மற்ற பல மொழிகளுக்குத் தாய்மொழி.

மாந்த இனம் தோன்றிய பகுதியாகக் கருதப்படும் ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து மடகாஸ்கர் மற்றும் இன்றையத் தென்னிந்தியப் பகுதியைத் தழுவி தெற்கில் கடலில் இருந்த பெருநிலப்பரப்பு கடலில் படிப்படியாக மூழ்கி மறைந்தாலும், எஞ்சியுள்ள தொல்மாந்தர் தோன்றிய நிலப்பரப்பில் தொடர்ந்து வாழும் பேற்றினைக் கொண்டவர்கள் தமிழர்கள். உணவு சேகரிக்கும் நிலை, வேட்டையாடும் நிலை ஆகியவற்றைக் கடந்து, ஆற்றங்கரைகளில் நிலை கொண்டு, வேளாண் சமூகமாக மாறி, உபரி உற்பத்தியைப் பெருக்கி, உலக அளவில் வணிகம் செய்து, செல்வத்தைக் குவித்தவர்கள் தமிழர்கள்.

தமிழ்த் தேசத்தின் வரலாற்றுவழி இருப்பு

தமிழர்களுக்குக் கூடுதலாகவும் ஒரு பெருமை உண்டு. ஐரோப்பாவில் முதலாளிய உற்பத்திமுறை தோன்றிய பிறகே மொழி அடிப்படையிலான தேசங்கள் தோன்றின. 15-ஆம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பாவில் ஒன்றன்பின் ஒன்றாகத் தேசங்கள் எழுந்தன. 1789-இல் பிரெஞ்சுப் புரட்சி வெடித்த பிறகு ஜனநாயகக் குடியரசுகளாகத் தேசங்கள் மாறின.

கிரேக்கத்தில் ‘பொலிஸ்’ என்று அழைக்கப்பட்ட ஏதென்ஸ், ஸ்பார்ட்டா, தீப்ஸ், கொரிந்து போன்ற ‘நகர நாடுகள்’ (City States) இருந்தன. தமிழர்களைப் போலவே கிரேக்கர்களும் பழம் பெருமை வாய்ந்தவர்கள். ஆனால், சங்க காலத்திலேயே, மூவேந்தர்களின் தமிழ் அரசுகள் ஒற்றை தேசமாக அறியப்பட்டது. ‘தேசம்’ என்ற சொல்லாலேயே பண்டைத் தமிழகம் அழைக்கப்பட்டது என்பது பலருக்கும் வியப்பளிக்கும். இதற்குக் கல்வெட்டுச் சான்றும் உள்ளது.

வடஇந்தியாவில், இன்று பாட்னா எனப்படுகிற பாடலிபுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மௌரிய வம்சத்தின் மூன்றாவது பேரரசராகிய அசோகரின் (கி.மு.268-232) பேரரசில் இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதி அடங்கியிருந்தாலும், தெற்கே தமிழர்களின் நிலப்பரப்பு அதில் அடங்கவில்லை. சோழ, பாண்டிய, சத்தியபுத்திர, கேரளபுத்திர மற்றும் தம்பபண்ணி (இலங்கை) ஆகியவை தம் எல்லைப் பகுதியில் சுதந்திர நாடுகளாகவும் நட்புறவோடும் உள்ளன என்று அசோகர் தம் 2 மற்றும் 13-வது பாறைச் சாசனங்களில் தெரிவிக்கிறார்.

ஹத்திக்கும்பா கல்வெட்டில் தமிழ்த்தேசம்

அசோகருடைய சமகாலத்திய கலிங்க (ஒடிசா) அரசராகக் கருதப்படும் காரவேலர் மிக முக்கியத் தகவலைத் தம் ஹத்திக்கும்பா கல்வெட்டில் பதிவு செய்திருக்கிறார். கடந்த காலத்தில், தனது நாட்டுக்கே (கலிங்கம்) அச்சுறுத்தலாக, 113 ஆண்டுகளாக நிலவி வந்த, தமிழர் அரசுகளின் கூட்டமைப்பான ‘திரமிரதேச சங்கதா’வை (தமிழ்த்தேச சங்கம் -Tramiradesa Sanghata) தான் தோற்கடித்துவிட்டதாகக் காரவேலர் பெருமை பேசுகிறார். கி.மு. 3-ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்களை ஒரு தேசமாகக் கருதியமைக்கு இது ஒரு கல்வெட்டுச் சான்றாகும். தமிழ்த்தேசியம் என்பது இயல்பான வரலாற்றுவழித் தேசியம் ஆகும்.

தமிழ்த் தேசத்துக்கு மொழியே முகம்

உலக வரையறுப்புகள் மற்றும் பிரகடனங்களின்படி, ஒவ்வொரு தேசிய இனமும் தனக்கான இறையாண்மையுள்ள தேசத்தை நிறுவிக் கொள்ளலாம். அது அந்தத் தேசிய இனத்தின் பிறப்புரிமை. இத்தேசிய இனங்கள் அதன் பொதுமொழி மூலம் அடையாளம் காணப்படுகின்றன. மொழிதான் ஒரு தேசிய இனத்தின் முகம். மொழியின் அடிப்படையில்தான் நாடு – என்பது தொல்காப்பியர் காலத்திலேயே உணரப்பட்டது. மூவேந்தர்கள் ஆண்டாலும், தமிழ்மொழி எதுவரைப் பேசப்படுகிறதோ அதுவே தமிழ்த்தேசம் என்ற பார்வை சங்க காலத்திலேயே இருந்தது.
‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’
என்று தொல்காப்பிப் பாயிரத்தில் பனம்பாரனார் குறிப்பிடுகிறார்.
‘தமிழ் கெழு மூவர் காக்கும்,
மொழி பெயர் தே எம்’- என்று தமிழ் வழங்காப் பகுதியை அகநானூறு குறிப்பிடுகிறது.

தமிழ்த் தேசத்தை ‘தமிழ்நாடு’ என்று பதிவு செய்யும் முதல் இலக்கியம் சிலப்பதிகாரம். தமிழ்வழங்கும் பகுதியை ‘தமிழ்நாடு’ (சிலப்.25-165) என்றும், ‘தென் தமிழ்நாடு’ (சிலப்.10-58) என்றும் அது குறிப்பிடுகிறது.

அதுபோன்றே, ‘தமிழ்நாடு’ என்று தமிழகத்தைக் கம்பர் (கி.பி. 13-ம் நூற்றாண்டு) குறிப்பிடுகிறார். ‘அகன் தமிழ்நாடு’ (கிட்கிந்.749) ‘தென் தமிழ்நாடு’ (கிட்கிந். 750, 918), ‘செந்தமிழ்நாடு’ என்று கூறும் கம்பர், வடமொழி பரவிவிட்ட வடஇந்தியப் பகுதியையும், தமிழ் வழங்கும் பகுதியையும் வெவ்வேறாகப் பிரித்துக் காட்டுகிறார். ‘வடசொற்கும், தென் சொற்கும் வரம்பாகி நின்ற வேங்கடம் (கிட் கிந். 745) என்று வேங்கடமலையை தமிழகத்தின் எல்லை ஆக்குகிறார். மொழியின் அடிப்படையிலேயே தேசங்கள் என்பது தமிழ்ப் புலவர்களின் தெளிவான பார்வையாகும்.

பக்தி இலக்கியமாகிய பெரியபுராணம், ‘அருந்தமிழ்நாடு’, ‘தண்டமிழ்நாடு’, ‘தென்றமிழ்நாடு’, ‘வண்டமிழ்நாடு’, ‘கன்னித்தமிழ்நாடு’, ‘தமிழ் வழங்குநாடு’, ‘தமிழ்த்திருநாடு’, ‘செந்தமிழ்நாடு’ என்று மொழியையும், நாட்டையும் இணைத்துத் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

தமிழர்களுக்கான தேசம் எது? என்பதைத் தெளிவாக இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த உயைாசிரியர் இளம் பூரணார், தொல்காப்பியம் நூற்பா-496 -க்கு பொருள் கூறும்போது, ஒரு கேள்வியும் அதற்கான பதிலும் குழப்பமில்லாமல் இருக்க வேண்டும் என்பதைக் கூறும்போது,
‘நும் நாடு யாது என்றால்,
தமிழ்நாடு என்றல்’ என்று கூறுகிறார்.

ஐரோப்பாவில் தேசம் அல்லது மொழிவழி நாடு பற்றிய பார்வை கி.பி. 15-ம் நூற்றாண்டில்தான் ஏற்பட்டது. ஆனால் தமிழர்கள் சங்ககாலம் முதலே தங்கள் தாயகம், மொழி அடிப்படையில் தேசம் பற்றியப் பார்வையில் தெளிவாக இருந்தார்கள்.

சங்க காலத்தில், தமிழகத்தை
‘இமிழ் கடல் வேலித் தமிழகம்’
என்று பதிற்றுப்பத்தும்,
‘வையக வரைப்பில் தமிழகம்’ என்று புறநானூறும், இக்காலத்திற்குப் பின் எழுதப்பட்ட பரிபாடல் திரட்டு ‘தமிழ் நாட்டகம்’ என்றும் குறிப்பிடுகின்றன.

மொழியின் அடிப்படையில் தமிழர் என்ற இன அடையாளம்

பக்தி இலக்கியக் காலத்தில் தமிழர்கள் தம்மைத் தமிழர் என்று அடையாளப்படுத்தினர். பூதத்தாழ்வார் ‘இருந்தமிழ் நன் மாலை இணையடிக்கே சொன்னேன் பெருந்தமிழன் நல்லேன் பெரிது’ (நாலாயிர திவ்விய பிரபந்தம்) என்று தம்மை தமிழன் என்று அழைத்துக் கொள்வதில் பெருமை கொள்கிறார்.

தமிழர்கள் தங்களையும், ஆரியர்களையும் வெவ்வேறாகப் பிரித்து அறிந்தனர். சிலப்பதிகாரம், வடமொழியாளர்களை ‘வடவாரியர்’ என்று குறிப்பிடுகிறது. அப்பர் திருமறைக்காட்டில் சிவபெருமானுக்கு சமஸ்கிருதத்திலும் தமிழிலும் வழிபாடு நடப்பதை ஆரியம் வேறு, தமிழ் வேறு என்று வேறுபடுத்திக் காட்டும் வகையில்
“ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்”
என்று குறிப்பிடுகிறார்.

தமிழர்களுடைய பண்பாடும், வடஇந்தியப் பண்பாடும் அடிப்படையிலேயே வெவ்வேறானவை.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’,
‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’
என்ற ஆன்றோர் வாக்குகள், தமிழினத்தின் அறம் சார்ந்த விழுமியத்தின் வெளிப்பாடுகள். ஆரியரின் வர்ணாசிரம தர்மத்தை எதிர்த்தே இவ்விழுமியங்கள் (Values) முன்நிறுத்தப்பட்டன.

தமிழ், தமிழகம், தமிழ்நாடு என்று தமிழ் இலக்கியங்கள் பேசினாலும் திருக்குறள் மாந்த இனம் முழுமைக்கும் நன்னெறி புகட்டும் பொதுமறையாக எழுதப்பட்டமையால், அதில் தமிழ்மொழி, தமிழினம், தமிழ்த்தேசம் என்று பெயர் குறிப்பிடப்படவில்லை. அதனால்தான் பாரதியார்
“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”  என்று பாடினார்.

புராதன இந்தியா என்பது உண்டா?

இந்தியா என்ற நாடு ஆங்கிலேயரின் வாளின் வலிமையால் உருவாக்கப்பட்டு, பிரிட்டிஷ் காலனியாதிக்கப் பகுதியாகிறது. அதற்கொரு நிர்வாகக் கட்டமைப்பையும் ஆங்கிலேயர்கள் உருவாக்கினார்கள். வெற்றிகொள்ளப்பட்ட பகுதிகள் சிறிதாயிருந்தபோதும், பின்னர் காலனியப் பேரரசாக உருவெடுத்தபோதும் ‘இந்தியா’ என்றே ஆங்கிலேயர் அழைத்தனர். இந்தியாவுக்கென ஒரு மையப்படுத்தப்பட்ட அரசு ஆங்கிலேயர்களால் 1773-இல் உருவாக்கப்பட்டு, வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு அதன் முதல் கவர்னர் ஜெனரல் ஆக்கப்பட்டார்.

ஆங்கிலேயர் வரும்வரை இந்தியத்துணைக் கண்டம் ஒற்றை நிர்வாகத்தின் கீழ், ஒரு நாடாக இருந்ததே இல்லை. இன்று பலரும் கருதிக்கொள்வதுபோல இந்திய தேசம் அல்லது பாரத தேசம் என்ற ஒன்று வரலாற்றில் இருந்ததே இல்லை. புராணிகர்கள் குறிப்பிடுகிற 56 தேசங்களிலும் கூட இந்திய தேசம், பாரத தேசம் என்ற ஒன்று கிடையாது. ‘புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்’ என்ற நூலை 1918-இல் பி.வி.ஜகதீச ஐயர் எழுதினார். இதில் சொல்லப்படும் 56 தேசங்களில் சீனம், பாரசீகம், காந்தாரம், காம்போஜம், நேபாளம் கூட இருக்கின்றன. ஆனால் பாரத தேசம் அதில் இல்லை. சோழ தேசம், பாண்டிய தேசம், கேரள தேசம், திராவிட தேசம் அதில் இருக்கின்றன.

பாரத தேசம் என்ற கருத்தியல் உருவாக்கம்

அமாவாசை தர்ப்பணத்தின்போது சொல்லப்படும் மந்திரத்தில்
‘மன்வந்த்ரே அஷ்டா விம்ஸதி தாமே கலியுகே ப்ரதமேபாதே ஜம்பூத்வீபே பாரதவர்ஷே பரதகண்டே மோரோ’
என்று வருகிறது. 18 மற்றும் 19-ம் நூற்றாண்டுகளில் விரிவாக நடத்தப்பட்ட சமஸ்கிருதம் தொடர்பான மொழி ஆய்வுகளால் உயிரூட்டப்பட்ட ஆரிய இன உணர்வால் உந்தப்பட்டவர்கள் தங்களுக்கான தேசத்தை ‘பாரதம்’ என்று அழைக்கத் தொடங்கினர். இந்தியத் துணைக் கண்டத்தை பரதகண்டம் என்றும் பல அறிவாளர்கள் குறிப்பிடத் தொடங்கினர்.

இந்திய அரசியல் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்படும் 22 மொழிகளில் சிந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்குத் தாயகம் கிடையாது. சமஸ்கிருதத்தை உயர்த்திப் பிடித்தவர்கள் இந்திய விடுதலைக்குப்பின் தாயகம் இல்லாத சமஸ்கிருதத்திற்கு தாயகம் வழங்கும் வகையில், இந்தியாவுக்குப் ‘பாரதம்’ என்று பெயர் சூட்ட விரும்பினார்கள். இந்திய அரசியல் சட்டம் 1946 முதல் 1949 வரை எழுதப்பட்டது. 1948 செப்டம்பர் வரையிலும் இந்தியா என்ற பெயரே ஏற்கப்பட்டது. இந்தியா என்பது வரலாற்றில் அறியப்பட்ட பெயர் என்பதால், இந்தியாவுக்கு ‘பாரதவர்ஷம்’ என்று பெயர் வைக்க எழுப்பப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆனால், சேத் கோவிந்ததாஸ் போன்ற இந்து மதவாதிகள் அரசியல் சட்ட அவைக்குள்ளும் வெளியிலும் பாரதம் என்று பெயரிட வற்புறுத்தி வந்தனர். 1949 செப்டம்பர் 17-ஆம் தேதியன்று கொண்டுவரப்பட்ட திருத்தம் இந்தியாவின் பெயராக ‘இந்தியா அதாவது பாரத்’ என்று அறிவித்தது. அதன் பிறகு, தொடர் பிரச்சாரத்தின் மூலம் ‘பாரத தேசம்’ என்ற சொல்லாடல் புழக்கத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

இவ்வாறு புராதன இந்தியாவில் இல்லாத, உலகறிந்த வரலாற்றிலும் இல்லாத பாரததேசம் என்ற சொல்லாடல் முன்னிலைப்படுத்தப்படுவதன் நோக்கமே இந்துத்துவத் திட்டமான இந்து இந்தியாவைப் படைப்பதே. தமிழ்மொழியில், சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் என எந்த நூலிலும், பாரததேசம் என்றோ, இந்திய தேசம் என்றோ எந்தக் குறிப்பும் கிடையாது. அதைப் போன்றே இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள எந்த மொழியிலும் இந்தியா, பாரதம் போன்றவை குறிப்பிடப்படவில்லை. ஏனென்றால் இந்தக் கருத்தியல்களும் சொல்லாடல்களும் சமீபத்தியவை.

இந்து தேசியம் சாத்தியமா?

(இக்கட்டுரையின் தொடர்ச்சியை பகுதி 2ல் காண்க)

Read previous post:
0a1d
“சமூகத்தில் பாதிக்கப்பட்ட கதாபாத்திரங்கள் பேசிக் கொள்வது தான் ‘வஞ்சகர் உலகம்’ படம்!”

லாபிரிந்த் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மனோஜ் பீதா இயக்கியிருக்கும் படம் 'வஞ்சகர் உலகம்'. குரு.சோமசுந்தரம், சாந்தினி தமிழரசன், அழகம் பெருமாள், ஜான் விஜய், அனிஷா அம்ப்ரோஸ் நடித்திருக்கும் இந்த

Close