“சமூகத்தில் பாதிக்கப்பட்ட கதாபாத்திரங்கள் பேசிக் கொள்வது தான் ‘வஞ்சகர் உலகம்’ படம்!”

லாபிரிந்த் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மனோஜ் பீதா இயக்கியிருக்கும் படம் ‘வஞ்சகர் உலகம்’. குரு.சோமசுந்தரம், சாந்தினி தமிழரசன், அழகம் பெருமாள், ஜான் விஜய், அனிஷா அம்ப்ரோஸ் நடித்திருக்கும் இந்த படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் படத்தின் 25 நிமிட காட்சிகள் பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

“சினிமாவில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அது தான் என்னை இந்த படத்தில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. முதல் இரண்டு ரீல்களை பார்த்திருப்பீர்கள். இன்னும் நிறைய ஸ்பெஷலான விஷயங்கள் இந்த படத்தில் இருக்கின்றன” என்றார் நடிகர் விசாகன்.

“தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ‘ஆரண்ய காண்டம்’ படத்தில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் குரு.சோமசுந்தரம். அதற்குப் பிறகு ‘ஜோக்கர்’ உட்பட எல்லா படத்திலும் சிறப்பான நடிப்பை வழங்கி வருகிறார். அவருடன் இந்த படத்தில் இணைந்து நடித்திருக்கிறேன். இதுவரை ‘ஓரம்போ’ படத்துக்கும், ‘கபாலி’ படத்துக்கும் டிக்கெட் வாங்கி படம் பார்த்தேன். அடுத்து இந்த படத்தை தான் நான் தியேட்டரில் பார்க்க ஆசைப்படுகிறேன். இயக்குனர் என்னை ரொம்பவே படுத்தி எடுத்து விட்டார். ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்தார். படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது” என்றார் நடிகர் ஜான் விஜய்.

v10

“இந்த மாதிரி ஒரு கதாபாத்திரம் எனக்கு 10 படம் நடித்த பிறகாவது வருமா என தெரியவில்லை. அப்படி ஒரு கதாபாத்திரத்தை எனக்கு வழங்கியிருக்கிறார்கள். சாம் சிஎஸ், ஆண்டனி, ஒளிப்பதிவாளர் ரோட்ரிகோ ஆகியோரால் இந்த படத்தின் தரம் மேலும் உயர்ந்திருக்கிறது” என்றார் நடிகர் சிபி புவன சந்திரன்.

“இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் நான் உதவி இயக்குனராக வேலை பார்த்திருக்கிறேன். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறேன். நான், மனோஜ், சிபி எல்லோரும் பள்ளி நண்பர்கள்.  கதை விவாதம் செய்யலாம் என மனோஜ் என்னை அழைத்தார். அப்போது முதல் படத்துக்கு என்னிடம் ஒரு கதை இருக்கு என சொன்னேன். அது அவர்களுக்கும் மிகவும் பிடித்தது. முக்கியமாக கிளைமாக்ஸை மிகவும் விரும்பினார்கள். குரு சோமசுந்தரம் சிறப்பாக நடித்து, கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார். மற்ற நடிகர்கள் எல்லோருமே சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார்கள்” என்றார் வசனகர்த்தா வினாயக்.

“வஞ்சகர் உலகம்’ ஒரு கேங்க்ஸ்டர் படம், முழுக்க முழுக்க ஆண்களை சுற்றிய படமாக இருந்தாலும் ஒரு வலுவான பெண் கதாபாத்திரத்தை எழுதிய இயக்குனருக்கு பாராட்டுக்கள். சாம் சிஎஸ் பல பெரிய படங்களுக்கும் இசையமைத்து வருகிறார், ஆனால் இந்த படம் அவருக்கு பாராட்டுகளை பெற்றுத் தரும். ட்ரெய்லருக்கு கிடைத்த அதே வரவேற்பு படத்துக்கும் கிடைக்கும் என நம்புகிறேன்” என்றார் நாயகி சாந்தினி தமிழரசன்.

“மனோஜ் பீதா எனக்கு கதையை சொன்னபோது ‘நீங்க கேங்க்ஸ்டர்’னு சொன்னார். முதலில் ஆச்சர்யமாக இருந்தாலும் உடனடியாக ஒப்புக்கொண்டேன். கதாபாத்திரத்தை மெருகேற்ற நிறைய வேலைகள் இருந்தன. ‘விக்ரம் வேதா’வுக்குப் பிறகு சாம் சிஎஸ் மிகச்சிறப்பான இசையை வழங்கியிருக்கிறார். தமிழ் சினிமாவில் இந்த படம் ஒரு சிறப்பான இடத்தை பிடிக்கும் என்றார் குரு சோமசுந்தரம்.

“விக்ரம் வேதா’ முடிந்தவுடன் மனோஜ் ‘ஒரு கேங்க்ஸ்டர் படம், மியூசிக் பண்றீங்களா’னு கேட்டார். ஷூட்டிங் ஸ்பாட் போனேன், ஷூட் பண்ண ஒரு சில காட்சிகள் பார்த்தேன், எந்த மெருகேற்றலும் இல்லாமலேயே ஹாலிவுட் தரத்தில் இருந்தது. இந்த படத்துக்கு எந்த செயற்கையான விஷயங்களையும் செய்யவில்லை. வழக்கமான ஒரு படமாக இருக்கக் கூடாது என்று நினைத்தோம். நேர்மையாக எனக்குப் பிடித்ததை செய்திருக்கிறேன். இந்த கதையில் எல்லா கதாபாத்திரங்களுக்கும் சரிசமமான முக்கியத்துவம் இருக்கிறது. நல்ல தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் இருக்கிறார்கள். யுவன், சந்தோஷ் நாராயணன், ஸ்வாகதா ஆகியோர் இந்த படத்தில் பாடியிருக்கிறார்கள்” என்றார் சாம் சிஎஸ்.

“கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் திரைக்கதை எழுத மற்றும் முன் தயாரிப்பு பணிகளுக்காக எடுத்துக் கொண்டோம். குறிப்பிட்ட பட்ஜெட்டில் படம் எடுப்பது ரொம்பவே கஷ்டம். ஒவ்வொரு நாளும் போராட்டங்கள் இருந்தன. சரியான திட்டமிடல் மூலம் ஒளிப்பதிவாளர் ரோட்ரிகோ நல்ல காட்சிகளை கொடுத்திருக்கிறார். நான் செல்வராகவன் சாரின் பெரிய ரசிகன். நாங்கள் பள்ளியில் படிக்கும்போது கட் அடித்துவிட்டு போய் பார்த்த படம் ‘புதுப்பேட்டை’. அந்த படம் பார்த்தபோதே நாங்கள் படம் எடுத்தால் அழகம் பெருமாள் அந்த படத்தில் இருக்கணும்னு நினைத்தோம். சமூகத்தில் பாதிக்கப்பட்ட கதாபாத்திரங்கள் பேசிக் கொள்வது தான் இந்த படம். குரு சோமசுந்தரம் மைய கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருந்தார். நிறைய இடங்களில் அலட்டல் இல்லாமலே சைலெண்டாக நடித்திருப்பார். சாம் சிஎஸ் பல நேரங்களில் உந்துதலாக இருந்தார். முதல் படம் நானே எழுதி இயக்குவதில் எனக்கு உடன்பாடே இல்லை. மேற்கத்திய தாக்கத்தில் படம் இருக்க திட்டமிட்டு உழைத்தோம். சாந்தினி படத்தின் மிகப்பெரிய பலம். ஜான் விஜய் பாடி லாங்குவேஜ் புதிதாக இருக்கும். 4 மணி நேரம் இருந்த படத்தை எடிட் செய்து மிகச்சிறப்பாக கொடுத்திருக்கிறார் ஆண்டனி. ‘ஏ’ சான்றிதழ் கொடுப்பதற்கு பதில் 18+ என கொடுத்தால் நன்றாக இருக்கும். ‘ஏ’ என்றால் அது வேறு மாதிரி நினைக்கிறார்கள்” என்றார் இயக்குனர் மனோஜ் பீதா.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்னர் ஷாம், ஒளிப்பதிவாளர் ரோட்ரிகோ, நடிகர்கள் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன், அழகம் பெருமாள், எடிட்டர் ஆண்டனி, பாடகி ஸ்வாகதா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

 

Read previous post:
0a1c
ஹீரோக்கள் மீதான சுமை எப்படி இருக்கும் என்பதை சமந்தாவுக்கு உணர்த்திய படம்!

ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி, வி.ஒய். கம்பைன்ஸ் மற்றும் பிஆர்8 கிரியேஷன்ஸ் சார்பில் ராம்பாபு பண்டாரு தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில்

Close