இந்திய ஒன்றியத்தின் குடியரசு தின விழா: தமிழக மக்கள் புறக்கணித்தனர்!

இந்திய ஒன்றியத்தின் 68வது குடியரசு தின விழா இன்று ஒன்றியம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரை பகுதியில் தமிழக அரசு சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு இந்திய ஒன்றிய கொடியை ஏற்றி வைத்து, முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கிய ஓ.பி.எஸ்., அதன்பின் மனைவியுடன் அமர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தார்.

வழக்கமாக ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இவ்விழாவைக் காண திரண்டு வருவார்கள். ஆனால், இந்த ஆண்டு பெருந்திரளாய் மக்கள் வரவில்லை.

சில தினங்களுக்கு முன் ஜல்லிக்கட்டு கோரிக்கைக்காக மெரினாவில் நடைபெற்ற அறப்போராட்டத்தில் பங்கேற்ற பல லட்சம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயன்றார்கள். தடியடி நடத்தினார்கள். தப்பியோடிய போராட்டக்காரர்களை துரத்திச் சென்று கொடூரமாக தாக்கினார்கள். போராட்டக்காரர்களுக்கு மனிதாபிமானத்துடன் உதவ முன்வந்த மீனவ மக்களையும் அடித்து நொறுக்கினார்கள். ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள், மீன் சந்தை என கண்ணில் பட்ட அனைத்தையும் துவம்சம் செய்து, தீ வைத்து கொளுத்தி வெறியாட்டம் ஆடினார்கள். இது தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசிஸ் அராஜகம் காரணமாக காயமடைந்தும், கைது செய்யப்பட்டும், உடைமை இழந்தும் மருத்துவமனைகளிலும், சிறைகளிலும், நடுத்தெருவிலும் ஆயிரக்கணக்கான மக்கள் அவதிப்பட்டு வருவதால், இக்கொடுமைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், குடியரசு தின கொண்டாட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என தமிழக மக்களை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் கேட்டுக்கொண்டனர்.

இதனால், மெரினாவில் நடைபெற்ற குடியரசு தின விழாவை காண வராமல், பெருவாரியான மக்கள் புறக்கணித்துவிட்டனர். மெரினா களையிழந்து, வெறிச்சோடி காணப்பட்டது. அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஊடகங்கள், அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்ட போலீசார், கலை நிகழ்ச்சிகளை வழங்க வந்த பள்ளி மாணவ மாணவிகள் ஆகியோர் மட்டுமே விழாவுக்கு வ ந்திருந்தார்கள்..

மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்ற குடியரசு தின விழாக்களையும் பெருவாரியான மக்கள் புறக்கணித்து விட்டதாகவே அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.