டங்கி – விமர்சனம்

நடிப்பு: ஷாருக்கான், டாப்ஸி பண்ணு, விக்ரம் கோச்சார், அனில் குரோவர், விக்கி கௌஷல், போமன் இரானி மற்றும் பலர்

இயக்கம்: ராஜ்குமார் ஹிரானி

ஒளிப்பதிவு: சி.கே.முரளிதரன், மனுஷ் நந்தன், அமித் ராய் & குமார் பங்கஜ்

படத்தொகுப்பு: ராஜ்குமார் ஹிரானி

பாடலிசை: ப்ரீதம்

பின்னணி இசை: அமன் பந்த்

தயாரிப்பாளர்கள்: கௌரி கான், ராஜ்குமார் ஹிரானி, ஜோதி தேஷ்பாண்டே

தயாரிப்பு: ஜி ஸ்டூடியோஸ், ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட், ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ்

வெளியீடு: ஸ்ரீ கோகுலம் மூவிஸ் – சக்தி ஃபிலிம் ஃபேக்டரி

பத்திரிகை தொடர்பு: யுவராஜ் (யுவி கம்யூனிகேஷன்ஸ்)

ஒரு நாட்டின் எல்லையைக் கடந்து இன்னொரு நாட்டின் எல்லைக்குள் நுழைவதற்கு கழுதைகள் (Donkey) பாஸ்போர்ட், விசா போன்ற சட்டப்பூர்வ நடைமுறைகளைப் பின்பற்றுவதில்லை. அதுபோல், மனிதர்கள் சட்டப்பூர்வ வழிகளையும், நடைமுறைகளையும் பின்பற்றாமல், திருட்டுத்தனமாக ஒரு நாட்டின் எல்லையைக் கடந்து இன்னொரு நாட்டுக்குள் நுழைவதை ஆங்கிலத்தில் ’Donkey Route’ (கழுதை வழி) என்பார்கள். இந்த ‘Donkey Route’-ஐ தான் ஹிந்தியில் ‘டங்கி’ என்கிறார்கள்.

ராணுவ வீரர்களால் அல்லது கொள்ளையர்களால் கொல்லப்படும் பேராபத்து உள்ள இந்த அபாயகரமான டங்கி வழியில் பஞ்சாபிலிருந்து புறப்பட்டு, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் உள்ளிட்ட பல நாடுகளினூடாக திருட்டுத்தனமாக பயணித்து, வருமானம் ஈட்டுவதற்காக இங்கிலாந்துக்குள் நுழைய முயலும் சில சாமானியர்களின் வேதனையையும், சாகசத்தையும், நிர்பந்தத்தையும் சொல்லும் கதை என்பதால் இப்படத்துக்கு மிகப் பொருத்தமாக ‘டங்கி’ என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்தி சினிமாவின் தொடர் வெற்றிப்படங்களின் ‘மாஸ்’ இயக்குனரான ராஜ்குமார் ஹிரானியும், இந்தி சினிமாவில் மட்டுமல்லாது உலகில் எங்கெல்லாம் இந்தியர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் அவர்களால் முன்னணி நாயக நடிகராக கொண்டாடப்படும் ஷாருக்கானும் இணைந்திருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் இது. இந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்கிறதா? பார்க்கலாம்…

0a1b

இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் வயோதிக உள்நோயாளியாகப் படுத்திருக்கிறார் நாயகி மன்னு ரந்தாவா (டாப்ஸி பண்ணு). அவருக்கு ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்கிறது. தனக்கு விரைவில் மரணம் சம்பவித்துவிடும் என்பதை உணர்ந்த மன்னு, தனது தாய்நாடான இந்தியாவில் உள்ள சொந்த ஊரில்தான் தன் இறுதி மூச்சை விட வேண்டும் என்ற ஆசையில், அந்த மருத்துவமனையிலிருந்து தப்பிச் செல்கிறார்.

இந்தியாவுக்குப் போக அவருக்கு விசா கிடைக்காது என்ற நிலையில், தனக்கும், தன்னைப் போலவே இந்தியா செல்ல விரும்பும் தனது இரு நண்பர்களான புக்கு (விக்ரம் கோச்சார்), பல்லி கக்கட் (அனில் குரோவர்) ஆகியோருக்கும்  உதவுமாறு வேண்டிக்கொள்வதற்காக, இந்தியாவில் உள்ள தனது பழைய நண்பரான ஹார்டாயல் ஹார்டி சிங் தில்லியனை (ஷாருக்கானை) தொலைபேசியில் அழைக்கிறார் மன்னு.

நரைத்த தலையும், நரைத்த குறுந்தாடியுமாக ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றிருக்கும் ஹார்டி சிங், 25 ஆண்டுகளுக்குப் பிறகு தன் சினேகிதி மன்னுவின் குரலை தொலைபேசியில் கேட்டு உற்சாகம் அடைகிறார். மன்னுவுக்கு உதவுவது என முடிவு செய்கிறார்.

மன்னு யார்? ஹார்டி சிங் யார்? அவர்களுக்கிடையில் எப்படி பழக்கம் ஏற்பட்டது? மன்னுவுக்கும், அவரது இரு நண்பர்களுக்கும் இந்தியா செல்ல ஏன் விசா கிடைக்கவில்லை? என்ற கேள்விகளுக்கு விடையாக, கதை 25 ஆண்டுகள் பின்னோக்கி நகர்ந்து ஃபிளாஷ்பேக்காக விரிகிறது…

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லால்டு என்ற கிராமத்தில் வாழ்ந்துவரும் மன்னு, புக்கு, பல்லி கக்கட் ஆகிய மூவரும் வெவ்வேறு காரணங்களால் பணப் பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறார்கள். இந்த பணப் பிரச்சனையிலிருந்து மீள, லண்டனில் குடியேறி உழைத்து சம்பாதிக்க முடிவு செய்கிறார்கள். இவர்களுடன் முன்னாள் ராணுவ அதிகாரியான ஹார்டி சிங்கும் சேர்ந்துகொள்கிறார்.

பணப் பிரச்சனை, மொழிப் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் இவர்களுக்கு விசா மறுக்கப்பட, சட்டவிரோதமாக டங்கி வழியில் திருட்டுத்தனமாக இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் உள்ளிட்ட நாடுகளின் எல்லைகளினூடாக லண்டனுக்கு பயணம் மேற்கொள்கிறார்கள். வழியில் ஏற்படும் தொல்லைகளையெல்லாம் தீரத்துடன் சமாளித்து, அனைவருக்கும் பக்கபலமாக இருந்து, அவர்களை லண்டன் கொண்டுபோய் சேர்க்கிறார் ஹார்டி சிங். இடையில் அவருக்கும் மன்னுவுக்கும் காதல் அரும்புகிறது.

லண்டனில் போலீஸில் சிக்கிக்கொள்ள, இவர்கள் அனைவரும் கைவிலங்கிடப்பட்டு, நீதிமன்ற கூண்டில் ஏற்றப்படுகிறார்கள். இங்கிலாந்து சட்டதிட்டங்களுக்கும் இவர்களுக்கும் இடையில் மட்டுமல்ல, ஹார்டி சிங்குக்கும் ஏனைய மூவருக்கும் இடையிலும் கூட பிரச்சனை ஏற்படுகிறது. ஹார்டிங் சிங் மட்டும் பிரித்தெடுக்கப்பட்டு, இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுகிறார். எனில், லணடனில் எழுந்த பிரச்சனை என்ன? 25 ஆண்டுகளுக்குப் பிறகு சமகாலத்தில் இந்தியாவுக்கு திரும்ப விரும்பும் மன்னு மற்றும் அவரது நண்பர்களுக்கு ஹார்டிங் சிங் எப்படி உதவினார்? அவருக்கும் மன்னுவுக்கும் இடையில் மீண்டும் காதல் துளிர்த்ததா? என்பன போன்ற கேள்விகளுக்கு நிறைய திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ‘டங்கி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

சமகாலத்தில் முதியவராகவும், ஃபிளாஷ்பேக்கில் இளைஞராகவும் இரு வேறு கெட்டப்-களில் ஹார்டாயல் ஹார்டி சிங் தில்லியன் என்ற நாயக கதாபாத்திரத்தில் வருகிறார் ஷாருக்கான். இந்த ஆண்டு இதற்குமுன் வெளிவந்த அவரது ‘பதான்’, ‘ஜவான்’ படங்களில் அளவுக்கதிகமாக அதிரடி ஆக்‌ஷன் காட்டியது போல் இல்லாமல், இதில் முற்றிலும் வேறுபட்ட யதார்த்தமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் ஆங்காங்கு தூவிவிடும் டைமிங் நகைச்சுவை, நாயகியிடம் கவித்துவமாக காதலை வெளிப்படுத்தும் விதம் போன்றவை ரசிப்புக்குரியவை. காதலியைச் சந்திக்க இங்கிலாந்து போக முடியாமல் தீக்குளித்து இறந்துபோன தனது நண்பன் சுகியின் (விக்கி கௌஷல்) அஸ்தியை வைத்துக்கொண்டு லண்டன் நீதிமன்றத்தில் எமோஷனலாக பேசும் காட்சியில் நம் உள்ளத்தை உருக்கிவிடுகிறார். ஹியூமராகத் தொடங்கி கண்ணீரில் முடியும் கிளைமாக்ஸ் காட்சியில் உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தி நம் இதயத்தில் இடம் பிடித்துவிடுகிறார்.

நாயகியாக மன்னு ரந்தாவா என்ற கதாபாத்திரத்தில் வரும் டாப்ஸி பண்ணுவை கவுரவிக்கும் வகையில், அவரது பெயர் டைட்டில் கார்டில் ஷாருக்கானின் பெயருக்கு முன்பாக வரும் வகையில் போடப்பட்டுள்ளது. இந்த கவுரவத்தை கவுரவிக்கும் வகையில், ஷாருக்கானுக்கு ஈடுகொடுத்து, அருமையாக நடித்திருக்கிறார் டாப்ஸி. இளமையான கெட்டப்பில் மட்டுமல்லாது வயதான கெட்டப்பிலும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஷாருக்கானிடம் மல்யுத்தப் பயிற்சி எடுக்கும் காட்சியில், ஷாருக்கானையே தோளுக்கு மேல் தூக்கி தரையில் வீசி அசால்ட் செய்து கைதட்டல் பெறுகிறார். குடியுரிமை பெறுவதற்காக லண்டன் நீதிமன்றத்தில் தன் காதலனுக்கும், தாய்நாட்டுக்கும் எதிராக முடிவெடுக்கும்போது, அந்த வேதனையை பார்வையாளர்களுக்கு கடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார். இப்படி ஒவ்வொரு காட்சியிலும் அவரது நடிப்பு அபாரம்.

புக்குவாக வரும் விக்ரம் கோச்சார், பல்லி கக்கடாக வரும் அனில் குரோவர், சுகியாக வரும் விக்கி கௌஷல், கீது குலாட்டியாக வரும் போமன் இரானி உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கி கவனம் பெறுகிறார்கள்.

அயல்நாட்டினரின் குடியேற்ற விவகாரம் என்ற உலகளாவிய முக்கியப் பிரச்சனையை, பாமர சினிமா ரசிகனும் புரிந்துகொள்ளும் விதத்தில் எளிமையாகவும், ஈர்க்கும் வகையிலும் திரையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி. ”யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, வறுமையால் வாழ்வாதாரம் தேடி வரும் எளிய மக்களுக்கும் விசா வழங்கும் வகையில் விதிகளை மாற்றியமைக்க வேண்டும்” என்ற வலிமையான கருத்தை, காமெடியும் எமோஷனும் கலந்த திரைக்கதை – வசனம் மூலம் சிறப்பாகச் சொல்வதில் இயக்குநர் வெற்றி பெற்றுள்ளார். படத்தின் இறுதியில், ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் பேர் உயிரைப் பணயம் வைத்து டங்கி வழியில் பயணம் செய்கிறார்கள் என்றும், அவர்களில் பலர் பரிதாபமாக இறந்து போகிறார்கள் என்றும் புள்ளிவிவரம் தரும் இயக்குநர், அதற்கு ஆதாரமாக உண்மைச் செய்திகளுடன் கூடிய புகைப்படங்களை வரிசையாகத் திரையில் காட்டி நம் மனதை பதைபதைக்கச் செய்துவிடுகிறார். கமர்ஷியலான இந்த பிளாக் பஸ்டர் திரைப்படத்தை சமூகஉணர்வுடன் படைத்தளித்ததற்காக இயக்குநர் ராஜ்குமார் ஹிரானிக்கு நமது பாராட்டுகள்.

சி.கே.முரளிதரன், மனுஷ் நந்தன், அமித் ராய், குமார் பங்கஜ் ஆகியோரின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளது. இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியே படத்தொகுப்பும் செய்துள்ளதால், கதையோட்டம் சீராக இருக்கிறது. பிரீதமின் பாடலிசை ஓ.கே ரகம். அமன் பந்தின் பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது. இது இந்தி படம் தான் என்றாலும், ஆங்கில  சப்-டைட்டில்கள் கதையை சுலபமாக புரிந்துகொள்ள உதவுகின்றன.

‘டங்கி’ – அனைவரும் அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய படம்!