அறம் – விமர்சனம்

நாம் அவ்வப்போது தொலைக்காட்சியில் நேரலையில் பார்த்துப் பதறிய, பரிதவித்த மிக முக்கிய பிரச்சனை ஒன்று தான் நயன்தாரா நடிப்பில், கோபி நயினார் இயக்கத்தில் ‘அறம்’ திரைப்படமாக உருப்பெற்றிருக்கிறது…

நிலத்தடி நீர் வறண்டுபோன ஒரு கிராமத்தில், ஒரு கவுன்சிலரின் தரிசு நிலத்தில் தோண்டப்பட்டு கைவிடப்பட்ட ஓர் ஆழ்துளைக் கிணற்றில், தவறி விழுந்து உயிருக்குப் போராடும் நான்கு வயது ஏழைச் சிறுமி ஒருத்தியை மீட்பதற்காக மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ளும் பகீரத முயற்சிகளும், அம்முயற்சிகளினூடே அம்பலப்பட்டு அம்மணமாகும் அரசு எந்திரங்களும், அதன் விளைவுகளுமே ‘அறம்’ திரைப்படம்.

முக்கியமான 6 காரணங்களுக்காக நயன்தாராவுக்கு நமது பாராட்டுக்கள். ஒன்று – இப்படியொரு கதையை தேர்வு செய்ததற்காக. இரண்டு – “கதை ஓ.கே. ஆனால் வேறொரு பெரிய இயக்குனர் இயக்கட்டும்” என்று சொல்லாமல், இதுவரை திரையில் அறிமுகம் ஆகாத கோபி நயினாரே இயக்கட்டும் என்று அவரை நம்பி, இயக்கும் பெரும்பொறுப்பை அவரிடமே ஒப்படைத்ததற்காக. மூன்று – திரைக்கதையில் மூக்கை நுழைத்து “ஆங்காங்கே கொஞ்சம் மசாலா தூவணும்” என்று அடம் பிடிக்காமல், திரைக்கதை அதன் போக்கில் இயல்பாய் காட்சிகளாக விரியட்டும் என அனுமதித்ததற்காக. நான்கு – விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தியாகத் துணைவியார் ‘மதிவதனி’யின் பெயர் தான் தன் கேரக்டர் பெயர் என தெரிந்தும், யார் யாருக்கோ பயந்து மாற்றச் சொல்லாமல் அதை அப்படியே ஏற்றுக்கொண்டதற்காக. ஐந்து – இப்படத்தை தயாரிக்க தயாரிப்பாளரைத் தேடி அலைய வேண்டாம் என்று தன் மேனேஜரையே தயாரிக்க வைத்ததற்காக. ஆறு – மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் தனது அனுபவமிக்க ஆகச்சிறந்த நடிப்பை அழுத்தமாய் வெளிப்படுத்தியதற்காக.

“அரசாங்கம்னா நான் மக்கள்னு நினைக்கிறேன்” என்று மக்களுக்காகவே யோசித்து செயல்படும் மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் நிமிர்ந்து நிற்கிறார் நயன்தாரா. நேர்மை, துணிச்சல், உண்மை என்ற கோட்பாடுகளுடன், சகாயம் ஐ.ஏ.எஸ். மாதிரியான மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் நயன்தாராவின் கம்பீரம் பளிச்சிடுகிறது. சிறுமியை மீட்கப் போராடும் தருணத்தில் நயன்தாரா எடுக்கும் முயற்சிகளும், அதை வெளிக்காட்டும்போது உணர்வைக் கட்டுப்படுத்துவதும், அதற்குப் பிறகான விளைவுகளில் நிலைமையின் தீவிரம் உணர்ந்து உடைந்து அழுவதுமாக தன் ஆளுமையை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். நயன்தாராவின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு இந்தப் படம் உறுதுணை புரிகிறது. கவனமாக இது போன்ற கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தால், அவர் காதலிக்கும் வயது கடந்த பிறகும் கதாநாயகியாக திரையுலகில் நிலைத்து நிற்பார் என்பது நிச்சயம்.

நடிக்கிற எல்லா படங்களிலும் கொடூர குற்றச் செயல்கள் புரியும் “கெட்டவன்” கதாபாத்திரங்களில் நடித்துவந்த ராம்ஸ், இப்படத்தில் முற்றிலும் வித்தியாசமாக, பொறுப்பான கீழ்த்தட்டு குடும்பத்தின் தலைவனாக, ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமியின் தந்தையாக, ‘புலேந்திரன்’ என்ற கதாபாத்திரத்தில் பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது நடிப்பும், வசனங்களும் நம்மை உலுக்கி எடுக்கின்றன.

தன் நலன் பேணாமல், பெற்ற பிள்ளைகளின் நலனுக்காகவே உயிர் வாழும் அன்பான கீழ்த்தட்டு தாயாக ‘சுமதி’ என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியிருக்கிறார் சுனு லட்சுமி. ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்ட தன் மகளை நினைத்து ஏங்குவது, அழுது புலம்பி மயங்கி விழுவது என உயிரோட்டமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து, பரிதவித்து, மூர்ச்சையாகி உயிருக்குப் போராடும் நான்கு வயது சிறுமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தன்ஷிகா தான் கதையின் மெய்யான நாயகி. அத்தனை பார்வையாளர்களின் கவனத்தையும் தன்பால் ஈர்த்து, கலங்கடித்திருக்கிறது இந்த குட்டிப்பிசாசு! பாராட்டுக்கள் பெண்ணே!

‘காக்கா முட்டை’ படத்தில் ரகளையாக கலகலப்பூட்டிய சிறுவன் ரமேஷ், இந்தப்படத்தில் கடலுக்குள் மூழ்கி வெகுநேரம் மூச்சடக்கும் ஆற்றல் உள்ள சிறுவனாக நடித்து மனம் கவருகிறான்.

சுமதியின் சகோதரனாக வரும் ‘காக்கா முட்டை’ விக்னேஷ், எம்.எல்.ஏ.வாக வரும் வேல ராமமூர்த்தி, போலீஸ் அதிகாரியாக வரும் முத்துராமன், மருத்துவராக வரும் ஜீவா ரவி, அமைச்சராக வரும் டி.சிவா, தமிழக அரசின் தலைமைச் செயலாளராக வரும் கிட்டி, கிராமத்து குழந்தைகளுக்கு சொட்டுமருந்து ஊற்றும் செவிலியராக வரும் வினோதினி வைத்தியநாதன் என்று படத்தில் வரும் உறுதுணை நடிகர்கள் அனைவரும் தத்தமது கதாபாத்திரங்களை உணர்ந்து நேர்த்தியான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். பிலேந்திரனின் நண்பனாக வந்து, அரசாங்கத்துக்கு எதிராக கேள்விகள் கேட்டு ஆவேசப்படும் பழநி பட்டாளம், வெகுமக்களின் மனஉணர்வை, போர்க்குரலை துல்லியமாக பிரதிபலித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் கோபி நயினார் கதைக்களம், காட்சி அமைப்பு, கதாபாத்திரத் தேர்வு, திரைக்கதை என அத்தனையிலும் மிகுந்த கவனம் எடுத்து செதுக்கி இருப்பது படத்தில் பிரதிபலிக்கிறது. துளியும் சமரசம் செய்துகொள்ளாத, வெகுமக்களை உளப்பூர்வமாக நேசிக்கும் படைப்பாளியாக கோபி நயினார் அழுத்தமாக முத்திரை பதிக்கிறார். இவரது திரை பிரவேசத்தால் தமிழ் சினிமாவில் இன்னும் பல ஆரோக்கியமான முயற்சிகள் தொடரும் என்று தாராளமாக நம்பலாம்.

ஓம் பிரகாஷின் கேமரா ஆழ்துளைக் கிணற்றின் ஆழத்தையும், சிறுமியின் போராட்டத்தையும் பதற்றத்துடன் நமக்குக் கடத்துகிறது. ஜிப்ரானின் உயிர் உருக்கும் பின்னணி இசை படத்துக்கு மிகப் பெரிய பலம் சேர்க்கிறது. வலுவான பல காட்சிகள் ஜிப்ரானின் இசையால் ஜீவனுள்ளதாக மாறுகிறது. ரூபனின் படத்தொகுப்பு நேர்த்தியாக உள்ளது. ஆழ்துளை கிணறு தொடர்பான காட்சிகளில் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்னின் உழைப்பு ஆச்சரியப்படுத்துகிறது.

முழுமை இல்லாதவன் தான் மனிதன் (Man is imperfect). எனவே மனிதன் படைக்கும் எதிலும் குறைபாடுகள் இருக்கவே செய்யும். கோபி நயினாரின் இந்த படைப்பும் இதற்கு விதிவிலக்கல்ல. எனினும், இதிலுள்ள குறைகள், பெரிதாய் அலட்டிக்கொள்ளும் அளவுக்கு – படைப்பாளிக்கு எதிராக வரிந்துகட்டி மல்லுக்கு நிற்கும் அளவுக்கு – உறுத்தலான குறைகளாக இல்லை என்பது ஆறுதலான விஷயம்.

‘அறம்’ – அபூர்வமாய் வரும் தரமான படம்! நொள்ளை நொட்டை சொல்லாமல் இதை ஆதரிப்பது ஒன்றே அறம்!!

Read previous post:
0a1d
நெஞ்சில் துணிவிருந்தால் – விமர்சனம்

கொலை, கொள்ளை என குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலிடமிருந்து சகோதரியையும், நண்பனையும் காப்பாற்றும் நண்பனின் கதையே 'நெஞ்சில் துணிவிருந்தால்'. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில்

Close