குலு குலு – விமர்சனம்

நடிப்பு: சந்தானம், அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன், பிபின் மற்றும் பலர்

இயக்கம்: ரத்னகுமார்

தயாரிப்பு: ’சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட்’ எஸ்.ராஜ்நாராயணன்

வெளியீடு: ’ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ உதயநிதி’

இசை: சந்தோஷ் நாராயணன்

மக்கள் தொடர்பு: யுவராஜ்

ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்ட ‘மேயாத மான்’, ‘ஆடை’ ஆகிய வித்தியாசமான திரைப்படங்களைக் கொடுத்த இயக்குனர் ரத்னகுமார் இயக்கியுள்ள மூன்றாவது திரைப்படம் ‘குலு குலு’. ஹீரோவாக நடித்தாலும் பிறரை கலாய்ப்பது, தன்னை கலாய்ப்பவர்களுக்கு கவுண்ட்டர் கொடுப்பது என்ற ரூட்டில் காமெடி பண்ணிவந்த சந்தானம், முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில், முழுக்க முழுக்க சீரியஸான நாடோடி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் இது. இவ்விரு காரணங்களால் பார்க்க ஆவலைத் தூண்டியுள்ள படம் ‘குலு குலு’.

படத்தின் கதை என்னவென்றால், தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுவேலாவில் உள்ள அடர்ந்த அமேசான் காட்டில், அருகிவரும் மொழியொன்றை பேசும் சின்னஞ்சிறு பழங்குடியில் பிறந்தவர் நாயகன் கூகுள். சுருக்கமாய் குலுபாய் (சந்தானம்). காட்டுத்தீயில் மொத்த உறவுகளும் கருகிப்போய்விட, அநாதையாய் காட்டைவிட்டு வெளியேறும் குலுபாய், நாடோடியாக பல நாடுகளில் சுற்றித் திரிகிறார். இறுதியில் தமிழ்நாட்டுக்கு வரும் அவர், இந்த மண்ணும், மக்களும், மொழியும் பிடித்துப் போனதால் இங்கேயே தங்கிவிடுகிறார்.

உதவி கேட்டு யார் வந்து நின்றாலும் அவர்களுக்கு ஓடோடி உதவி செய்வது, நல்லுள்ளம் கொண்ட குலுபாயின் கேரக்டர். இதனால் பல துன்பங்களுக்கு ஆளாகிறார். என்றாலும் உதவுவதை அவர் நிறுத்தவில்லை.

ஒருநாள் சில இளைஞர்கள் குலுபாயிடம் வந்து, கடத்தப்பட்ட தங்கள் நண்பரை கண்டுபிடித்துத் தருமாறு வேண்டுகிறார்கள்.

அவர்களுக்கு உதவ களத்தில் குதிக்கும் குலுபாயை, மிகப் பெரிய பிரச்சனை துரத்தி வருகிறது. இப்பிரச்சனையை குலுபாய் எப்படி சமாளித்தார்? கடத்தப்பட்ட நபரை அவர் கண்டுபிடித்து மீட்டாரா, இல்லையா? என்பது படத்தின் மீதிக்கதை.

0a1i

காமெடி பண்ணி பெயர் வாங்கியதைப் போலவே, முழுக்க முழுக்க சீரியஸாக நடித்து அதிலும் பெயர் வாங்க முடியும் என்பதை இப்படத்தில் நிரூபித்திருக்கிறார் நாயகன் குலுபாயாக வரும் சந்தனம். இதற்கேற்ப கெட்டப்பையும் உடைகளையும் மாற்றிக்கொண்டது புத்திசாலித்தனம். தான் சீரியசாக நடித்தாலும், தன்னை சுற்றியிருப்பவர்களை காமெடி பண்ண வைத்து, காமெடிப்பஞ்சம் ஏற்படாமல் பார்த்துக்கொண்டது அருமையான உத்தி.

கதாநாயகிகளாக வரும் நமீதா கிருஷ்ணமூர்த்தியும், அதுல்யா சந்திராவும் அழகாக இருப்பதோடு, தங்களது கதாபாத்திரங்களுக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மேலும், ஆங்காங்கே காமெடி பண்ணி சிரிக்கவும் வைக்கிறார்கள்.

வில்லனாக வரும் பிரதீப் ராவத் மிரட்டியிருக்கிறார். தீனா, மரியம் ஜார்ஜ், பிபின், ஹரிஷ், கவி ஜெ.சுந்தரம், மெளரிஷ், யுவராஜ் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் கதையோட்டத்தோடு ஒன்றி பயணித்திருக்கிறார்கள்.

சந்தானத்தை ஹீரோவாகப் போட்டு காமெடி படம் மட்டுமே எடுக்க முடியும் என்ற கருத்தாக்கத்தைத் தகர்த்திருக்கிறார் இயக்குனர் ரத்னகுமார். சந்தானத்தை சீரியஸான ஹீரோவாக வெற்றிகரமாக நிலை நிறுத்தியிருப்பதோடு, அவரை வைத்து இன அரசியல், மொழி அரசியல், நடப்பு அரசியல் பேச வைத்து அப்ளாஸ் வாங்க முடியும் என்பதையும் நிரூபித்திருக்கிறார் இயக்குனர். “ஒரு இனத்தை அழிக்க அவங்க மொழியை அழிச்சாப் போதும்னு சொல்வாங்க. ஆனா, ஒரு மொழியை அழிக்க அதை பேசும் இனத்தை அழிச்சாப் போதும்” என்ற வசனம் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை கதை ஓட்டத்துக்கு உறுதுணையாக இருக்கிறது. விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம்.

ரசிகர்களை சிரிக்க வைத்துக்கொண்டிருந்த சந்தானம், ஒருபடி முன்னேறி சிந்திக்கவும் வைக்க ஆரம்பித்திருக்கிறார். வரவேற்போம்.

‘குலு குலு’ – வித்தியாசமான, சுவாரஸ்யமான அனுபவம்!