83 – விமர்சனம்

நடிப்பு: ரண்வீர் சிங், தீபிகா படுகோன், ஜீவா, நீனா குப்தா மற்றும் பலர்

இயக்கம்: கபீர் கான்

ஒளிப்பதிவு: அஸீம் மிஸ்ரா

பின்னணி இசை: ஜூலியஸ் பாக்கியம்

‘83’ என்றால் ‘1983’. அந்த ஆண்டு தான் கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியது. அது பற்றிய படம் என்பதால் இப்படத்துக்கு ‘83’ என பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

1983ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி புறப்பட்டுச் செல்வதிலிருந்து அந்த அணி உலகக் கோப்பையை வெல்வது வரையிலான நிகழ்வுகளே இந்தப் படத்தின் திரைக்கதை.

இந்தியாவிலும் இங்கிலாந்திலும் இந்திய அணி மீது காட்டப்படும் அலட்சியம், இதனை மீறி இந்திய அணி ஒவ்வொரு போட்டியாக வெல்ல ஆரம்பிப்பது, ஒவ்வொரு போட்டியிலும் எதிர்கொள்ளும் சவால்கள் என துவக்கத்திலிருந்தே படம் க்ளைமாக்ஸை நோக்கித்தான் நகர்கிறது என்பதால் எந்த கட்டத்திலும் படம் சலிப்புத் தட்டவில்லை.

0a1f

இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ் பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் ரண்வீர் சிங். உடல் மொழி, விளையாட்டு, சோகம், அவமானம் என அனைத்திலும் தன் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

கபில்தேவின் மனைவி பாத்திரத்தில் – ரண்வீர் சிங்கின் மனைவியாக – வருகிறார் தீபிகா படுகோனே. கணவரை ஊக்குவிப்பவராக அவர் சிறிது நேரமே வந்தாலும் ரசிக்கும்படி அவரது கதாபாத்திரம் உள்ளது.

ஸ்ரீகாந்த் பாத்திரத்தில் நடித்திருக்கும் ஜீவா, பல இடங்களில் காமெடியில் கலக்கி இருக்கிறார். ஏனைய வீரர்களாக வருபவர்களும் கொடுத்த வேலையை நன்றாக செய்திருக்கிறார்கள்.

முன்னாள் கிரிக்கெட் வீரர்களைப் போல தோற்றம் கொண்டவர்களை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்ததற்காக இயக்குனர் கபீர் கானை பாராட்டலாம். 1983ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோக்களை திரைப்படத்தோடு இணைத்து காட்சிப்படுத்தியது சிறப்பு.

அசிம் மிஷ்ராவின் ஒளிப்பதிவும், ஜூலியஸ் பாக்கியத்தின் பின்னணி இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் பலம் சேர்த்திருக்கிறது.

’83’ – கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல விருந்து!