வாட்ச்மேன் – விமர்சனம்

30 ஆயிரம் ரூபாய் கடன் கிடைக்காமல் தவிக்கும் இளைஞன் திருட நினைத்தால், அதனால் அவன் சில ஆபத்துகளில் சிக்கினால் அதுவே ‘வாட்ச்மேன்’.

ஜி.வி.பிரகாஷ் படத்தின் ஆரம்பத்திலிருந்து பார்க்கவே ரொம்ப பரபரப்பாக இருக்கிறார். 30 ஆயிரம் ரூபாய் கடன் கிடைக்குமா என்று அலையும் அவருக்கு எந்த வழியும் பலன் தரவில்லை. இதனால் திருடியாவது பணத்தை எடுப்போம் என்று முடிவெடுத்து ஒரு வீட்டுக்குள் நுழைகிறார். ஆனால், அந்த வீட்டில் ஏற்கெனவே இருக்கும் சில ஆபத்துகளால் ஜி.வி.பிரகாஷ் என்ன ஆகிறார், அவருக்கான பணச் சிக்கல் ஏன் வந்தது, அந்த வீட்டில் உள்ள ஆபத்து என்ன போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

ஜி.வி.பிரகாஷ் ஹீரோயிஸம் செய்யவோ, ஹீரோ என்பதை நிறுவவோ சாத்தியமில்லாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இயக்குநர் விஜய் உடனான நட்புக்காக நடித்திருக்கிறாரோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. பெரும்பாலான நேரங்களில் பதட்டமாகவும், பயந்த மாதிரியும் இருப்பதே ஜி.வி.பிரகாஷுக்கு கொடுக்கப்பட்ட வேலை. அதை மட்டும் கச்சிதமாக செய்திருக்கிறார்.

வில்லன் ராஜ் அர்ஜுன் பார்ப்பதற்கு டெரராக இருக்கிறார். ஆனால், அந்த டப்பிங் டெக்னிக் எடுப்டவில்லை.  வில்லன் கேங்கில் இருக்கும் யார் முகமும் பதிவாகாத அளவுக்கே கடந்து போகிறார்கள்.

படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ப்ரூனோ என்கிற நாய். அது தன்னோட வேலையை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறது.  தியேட்டர்ல நிறைய அப்ளாஸ் வாங்கும் ஒரே கதாபாத்திரம் ப்ரூனோதான். யோகி பாபு காமெடி தேவையில்லாத ஆணி.

பாடல்கள் இல்லாத படம். அதே நேரத்தில் ஜி.வி.யின் பின்னணி இசையைக் குறை சொல்ல முடியாது. அந்தந்தக் காட்சிக்கு தேவையான பதற்றத்தை பின்னணியில் கொடுத்து அதிர வைக்கிறார். நீரவ் ஷாவோட ஒளிப்பதிவும், ஆண்டனியின் எடிட்டிங்கும் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன. இருட்டின் அடர்த்தியை நீரவ் ஷாவின் கேமரா அழகாகப் படம் பிடித்துள்ளது.

ஜி.வி.கேரக்டருக்கான பிரச்சினை, அவர் திருடலாம் என்று முடிவெடுக்கும் சூழ்நிலை, அந்த வீட்டை அவர் தேர்ந்தெடுக்கக் காரணம் போன்றவை நம்பும்படியாக இருக்கிறது. ஆனால், கடன் கொடுத்தவர் நள்ளிரவு 12 மணி வரைக்கும் அடிக்கடி அவருக்கு போன் செய்து வெறுப்பேற்றுவதை நம்ப முடியவில்லை.

ஜி.வி., ப்ரூனோ தவிர மற்ற கதாபாத்திரங்களின் கேரக்டர்களில் ஈர்ப்பும் இல்லை. அதனால் படத்துடன் நம்மைத் தொடர்புபடுத்திக்கொள்ள முடியவில்லை. ப்ரூனோ நாய் செய்யும் சில விஷயங்களில் மட்டும் சுவாரஸ்யம் தெரிகிறது. மற்றபடி அழகான அம்சங்களோ, த்ரில் விஷயங்களோ, பதற்றமோ, பரபரப்போ படத்தில் ரொம்பக் குறைவு. தொழில்நுட்ப ரீதியில் தரமான இருக்கும் படம் இயக்குநர் வடிவமைத்த காட்சி ரீதியாக கொஞ்சம் பின்வாங்குகிறது.

விஜய்யுடன் சமீபத்திய சில படங்களுடன் ஒப்பிடும்போது கொஞ்சம் நல்ல படம். ஆனால், சொல்ல வந்த விஷயத்தை பெரிய டீட்டெய்ல் இல்லாமல் உடனடியாகச் சொல்லி முடிக்கிற ஃபாஸ்ட் ஃபுட் த்ரில்லர் படம் ‘வாட்ச்மேன்’.

 

Read previous post:
0a1a
சமீப காலமாக உங்கள் நடிப்பு ரொம்ப ரொம்ப மோசமாக இருக்கிறது கமல் சார்!

சற்றே இருட்டான அறை. இரண்டு விளக்குகள் மட்டுமே எரிகின்றன. மேக்கப்போடு அந்த நடிகர் கோபமாக டிவியில் செய்திகளை கேட்கிறார்.. செய்தியில் ஸ்டாலின் 'அந்தக் கலைஞரின் மகனாக இருக்கும்

Close