டிரைவர் ஜமுனா – விமர்சனம்

நடிப்பு: ஐஸ்வர்யா ராஜேஷ், ஆடுகளம் நரேன், மணிகண்டா ராஜேஷ், கவிதா பாரதி, ஸ்ரீரஞ்சனி, அபிஷேக், பாண்டியன் மற்றும் பலர்

எழுத்து, இயக்கம்: கின்ஸ்லின்

ஒளிப்பதிவு: கோகுல் பெனாய்

படத்தொகுப்பு: ஆர்.ராமர்

இசை: ஜிப்ரான்

தயாரிப்பு: ’18 ரீல்ஸ்’ எஸ்.பி.சௌத்ரி

பத்திரிகை தொடர்பு: யுவராஜ்

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வித்தியாசமான கதைகளைக் கவனமாகத் தேர்வு செய்து, அவற்றில் முழு ஈடுபாட்டுடன் நேர்த்தியாக நடிக்கும் சிறந்த நடிகை என பெயர் பெற்றிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், கால்டாக்ஸி டிரைவர் அவதாரம் எடுத்திருக்கும் படம் ‘டிரைவர் ஜமுனா’.

0a1eகதைப்படி, ’ஜமுனா’ என்ற கதாபாத்திரப் பெயர் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் தந்தையை இழந்தவர். தந்தை செய்துவந்த கால்டாக்ஸி டிரைவர் பணியைச் செய்து வருபவர். பிறரது ஆதரவு இல்லாமல் நடமாடக்கூட முடியாத அளவுக்கு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள அம்மாவுடன் (ஸ்ரீரஞ்சனியுடன்) வாழ்ந்து வருபவர்.

முன்னாள் எம்.எல்.ஏ.வான ஆடுகளம் நரேனைக் கொலை செய்ய, இன்னாள் எம்.எல்.ஏ.வான கவிதாபாரதி மூன்று பேர் கொண்ட கூலிப்படை ஒன்றை அமர்த்துகிறார். இக்கொலைத் திட்டத்துடன் இந்த கூலிப்படையினர் ஐஸ்வர்யா ராஜேஷின் கால்டாக்ஸியில் ஏறுகிறார்கள்.

இதே கூலிப்படை போலீஸ் உயர் அதிகாரி ஒருவரது மகனையும், மருமகளையும் கொலை செய்திருப்பதால், அவர்களைப் பிடிக்க, அவர்கள் பயணம் செய்யும் ஐஸ்வர்யா ராஜேஷின் கால்டாக்ஸியை போலீஸ் துரத்திக்கொண்டு வருகிறது. போலீசிடமிருந்து தப்பிப்பதற்காக ஐஸ்வர்யா ராஜேஷை கூலிப்படையினர் பகடைக்காயாக, பிணைக்கைதியாகப் பிடித்துக்கொண்டு, மிரட்டி, காரை வேகமாக ஓட்டச் செய்கின்றனர். அவர்களிடமிருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் தப்பித்தாரா, இல்லையா? கொலை முயற்சியிலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ. காப்பாற்றப்பட்டாரா, இல்லையா? ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை எப்படி இறந்தார்? என்பன போன்ற கேள்விகளுக்கு விறுவிறுப்புடன் பதில் அளிக்கிறது ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் மீதிக்கதை.

ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை எத்தனையோ பாத்திரங்களை ஏற்று நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் அவர் ஏற்று நடித்திருக்கும் கால்டாக்ஸி டிரைவர் பாத்திரம் சவாலானது. ஏறக்குறைய படம் முழுக்க அவர் காரை ஓட்டிக்கொண்டு நடித்திருப்பது அசாதாரணமானது. தன் நடிப்புத் திறமையால் மொத்த படத்தையும் தனியொருவராக திறம்பட தாங்கிப் பிடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். பாராட்டுகள்.

முன்னாள் எம்.எல்.ஏ.வாக வரும் ஆடுகளம் நரேன், இன்னாள் எம்.எல்.ஏ.வாக வரும் கவிதா பாரதி, கூலிப்படையினராக வரும் மூவர், ஐஸ்வர்யா ராஜேஷின் அப்பாவாக வரும் நடிகர், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அம்மாவாக வரும் ஸ்ரீரஞ்சனி, கால்டாக்ஸியில் பயணிக்கும் இசைக்கலைஞனாக வரும் அபிஷேக், ஆடுகளம் நரேனின் மகனாக வரும் மணிகண்டா ராஜேஷ் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளார்கள்.

ஆட்டோவை மையமாக வைத்து ‘வத்திக்குச்சி’ படத்தை இயக்கிய  கின்ஸ்லின், இப்பொழுது காரை மையமாக வைத்து ‘டிரைவர் ஜமுனா’ படத்தை இயக்கியிருக்கிறார். நடிப்புக் கலைஞர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் மிகச் சரியாக தேர்வு செய்து, அவர்களை திறம்பட வேலை வாங்கியிருப்பது ஃபிரேமுக்கு ஃபிரேம் தெளிவாகத் தெரிகிறது. படத்தின் கடைசி 20 நிமிட காட்சிகளை யூகிக்கவே முடியாதவாறு திருப்பங்களால் நிறைத்து, பார்வையாளர்களுக்குத் திகைப்பை ஏற்படுத்தி, படத்தை பரபரப்புடன் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் கின்ஸ்லின். பாராட்டுகள்.

கோகுல் பெனாயின் காமிரா, கதையின் வேகத்துக்கும் கதாபாத்திரங்களின் பதட்டத்துக்கும் ஏற்ப, காருக்கு உள்ளேயும் வெளியேயும் புகுந்து விறுவிறுப்பாக படம் பிடித்திருக்கிறது. இறுதியில் கார் விபத்துக்குள்ளாகும் காட்சியில் ஒளிப்பதிவு பிரமாதம். ஜிப்ரான் தன் பங்குக்கு பின்னணி இசை மூலம் பதைபதைப்பை ஏற்படுத்தி, கதையின் சுவாரஸ்யமான நகர்வுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்.

வெளி வேலைக்குச் செல்லும் நடுத்தர வர்க்கத்துக் குடும்பப் பெண், எத்தகைய ஆபத்தான சூழ்நிலையையும் துணிச்சலுடனும், புத்திக்கூர்மையுடனும் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம் என்பதை உனர்த்துவதால், இந்த ஆண்டில் வெளியான முக்கியமான படமாக இதைக் கொள்ளலாம்.

’டிரைவர் ஜமுனா’ – சுவாரஸ்யமான சாதனைப்பெண்! குடும்பத்துடன் கண்டு களிக்கலாம்!