மேற்கு தொடர்ச்சி மலை – விமர்சனம்

எளிய மக்கள்தான் எவ்வளவு நேர்மை மிக்கவர்கள்.. அன்பு மிகுந்தவர்கள்..

அவர்களின் வாழ்க்கையை நவீனத்தின்… அறிவியலின் பெயரால்தான் ஆளும் வர்க்கம் எப்படியெல்லாம் சூறையாடி அவர்களின் அடையாளத்தை அழித்து ருசிக்கிறது..

விதை வியாபாரிதான்..  அந்த வியபாரி எத்தனை நயவஞ்சகமாக.. கள்ளத்தனம் மிகுந்தவனாக. இன்றைய அரசின்.. ஆளும் வர்க்கத்தின் குறியீடாக  இயக்குனரால் வடிவமைக்கப்பட்டுள்ளார்..

எளிய மக்களின் வாழ்க்கைதான் பனித்துளியின் மென்மை ஒத்தது.. துளியும் மாசற்றது என்ற உண்மையை படம் முழுவதும் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர்.

எளியவன் ஒருவன் கொஞ்ச நிலத்தை தனதாக்கிக்கொள்ள மெனக்கெடும்போது அவனுக்கு ஒத்தசையாக எவ்வளவு பிரியமுள்ளவர்களாக நம் உழைப்பாளிகள்.

‘எதுப்பா நம்ம நெலம்’ என தன் வாரிசு கேட்கும்போது ரங்குவும் அவன் மனைவியும் அடையாளப்படுத்த முற்படும் வேளை, நம் கண்களையும் தேட வைக்கிறார் இயக்குநர். நிலமற்றவர்களாக நாமும்.

தன் மகனுக்கு நிலத்தின் அடையாளத்தை சொல்லி முடித்து மகிழும் அந்த விநாடி.. மலையில் இருந்து உருண்டு விழும் ஏலக்காய் மூட்டை பாறையில் மோதி, கிழிந்து தெரித்து விழும் ஏலக்காய் துளிகள்..

என் மூத்த மகன் என் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தான்..

பெரும்பாலான எளிய மக்களின் கனவுகள்.. ஆசைகள் அனைத்தும் இப்படித்தான் இன்று எல்லா பக்கங்களிலும்.

கம்யூனிஸ்டுகள் நேர்மையானவர்கள்.. எப்போதும் தொழிலாளர்கள்.. எளிய மக்களின் நலன் சார்ந்தே இருப்பவர்கள்.. செயல்படுபவர்கள். மாறானவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தாலும் அப்புறப்படுத்தப்படுவார்கள்.. அதற்கு எந்த எல்லைக்கும் செல்வார்கள்… உண்மையானவர்கள்… பொது நலம் சார்ந்தவர்கள் என்பதை தெளிவாக சொல்லியுள்ளார் இயக்குனர்.

சகாவுக்கு லால் சலாம்!

படம் மேற்குத் தொடர்ச்சியின் அழகியலை.. மேகங்களின் தழுவலை.. ப்பா.. ஒளிப்பதிவாளருக்கு அப்ளாஸ்.

இளையராஜா… ஆரம்பத்தில் மழையில் தொடங்கிய அவரின் மயக்கிடும் இசை.. முடிவில் ராட்சச காத்தாடி சுற்றும்போது கேட்பவர் மனசை கிழித்துவிடுகிறது.

திருமணம்… திருமண விருந்து.. விளையாட்டு.. கேலிபேசுவது.. உழைப்பை போற்றுவது.. அடுத்தவனின் துயரத்தை பங்குபிரித்துக் கொள்வது.. இப்படி படம் முழுவதும் எளிய மக்களின் வாழ்க்கை போற்றி இருக்கிறார்.. அவர்களின் சொல்ல முடியாத துயரத்தை நம்மோடு பகிர்ந்திருக்கிறார்..

நம்பி இருக்கும் எளிய மக்களின் வாழ்க்கையை சூறையாடும் வஞ்சகத்தை..கள்ளத்தை அம்பலப்படுத்தி நிலமற்ற எம் மக்களுக்கு சேதி ஒன்றை சொல்லி இருக்கிறார்.

உஷார்..

வாழ்த்துகள் தோழர் லெனின் பாரதி.

தடம்பதித்திட்ட அத்தனை கலைஞர்களும் வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்த்துகள்.

(குறிப்பு:
இப்படத்தை தோழர்களும் நண்பர்களும் குடும்பத்தோடு சென்று திரை அரங்கில் உடனே பார்த்திடுங்கள். அரங்கம் முழுதும் நிரம்பி இருந்தாலும்; படம் அனைவராலும் பேசப்பட்டாலும் திரையிட அனுமதிக்க மாட்டார்கள் ஆட்சியாளர்கள்.. அதிகாரம் மிக்கவர்கள்.)

Karuppu Anbarasan