மோடி அரசுக்கு எதிராக தி.மு.க.வின் புதிய தலைவர் மு.க.ஸ்டாலின் போர் பிரகடனம்

“இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்கும் மோடி அரசுக்குப் பாடம் புகட்ட வா” என்று தி.மு.க.வினருக்கு அக்கட்சியின் புதிய தலைவர் மு.க.ஸ்டாலின் அறைகூவல் விடுத்துள்ளார்.

கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து தி.மு.க.வின் புதிய தலைவராக மு.க.ஸ்டாலினை அக்கட்சியின் பொதுக்குழு போட்டியின்றி தேர்ந்தெடுத்து இன்று அறிவித்தது. இதற்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் பொதுக்குழுவில் ஏற்புரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:

 நான் தலைவர் கலைஞர் (கருணாநிதி) இல்லை, நான் அவர் போல் பேசத் தெரிந்தவன் இல்லை, பேசவும் தெரியாது. அவர் போல் மொழியை ஆளவும் தெரியாது. ஆனால் அதுபோல் முயன்று பார்க்கும் துணிவு பெற்றவனாக உங்கள் முன் நிற்கிறேன்.

தலைவர் கலைஞரின் கொள்கை தீபம் கையில் இருப்பது முப்படையும் நம்மிடம் இருப்பது போல. அந்த தைரியத்தில், துணிச்சலில் இந்தத் தலைவர் பொறுப்பை உங்கள் அன்போடு ஆதரவோடு ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.

‘தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை’ என்று நான் வாழ்ந்ததாக தலைவர் என்னை வாழ்த்தியிருந்தார். ‘உழைப்பு உழைப்பு உழைப்பு’ என்று எனது பெயருக்கு உதாரணமாகச் சொன்னார். அந்த வார்த்தைக்கு ஏற்ப வாழ்நாள் முழுதும் வாழ்வேன். என்னைவிட கழகம் பெரிது. உதயசூரியன், கருப்பு சிவப்பு கொடி தான் அனைவரையும் விட பெரிது. எனக்கு ஒரே ஒரு குறைதான் இந்தக் காட்சியைப் பார்க்க தலைவர் இல்லையே என்பதுதான்.

‘எனக்கு அக்கா இருக்கிறார், ஆனால் அண்ணன் இல்லை. அந்த குறையைத் தீர்க்க எனக்கு அண்ணனாக பேராசிரியர் (அன்பழகன்) இருக்கிறார்’ என்று கூறினார் தலைவர் கலைஞர். அந்த வகையில் பேராசிரியர் எனக்கு பெரியப்பா. இப்போது என் அப்பா இல்லை. ஆனால் இங்கே பெரியப்பா இருக்கிறார். அப்பாவுக்கு முன்பே என்னைத் தலைவராக வழிமொழிந்தவர் பெரியப்பா அப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவது 100 மடங்கு கடினம். பெரியப்பாவிடம் பெயர் வாங்குவது 200 மடங்கு கடினமானது. ‘அடுத்த தலைவர் பதவிக்குத் தகுதியானவர் ஸ்டாலின்’ என்று அன்றே பேசியவர் பேராசிரியர். அவர்முன் தலைவராகப் பதவி ஏற்கும் பேறு பெற்றதை பெருமையாகக் கருதுகிறேன்.

என்னை பள்ளி செல்லும் பிள்ளையாக, கல்லூரி மாணவனாக, கட்சித் தொண்டனாக, பொதுக்குழு உறுப்பினராக, பேச்சாளராக, இளைஞரணி செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக, மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக, பொருளாளராக, செயல் தலைவராக என்னுடைய வளர்ச்சியை படிப்படியாக பார்த்தவர்கள் இங்குள்ளனர்.

ஒருவரின் வளர்ச்சி படிப்படியாக இருக்க வேண்டும் என்று விரும்பியவர் தலைவர். நானும் அப்படித்தான் நினைத்தேன். கலைஞரின் மகன் என்று சொல்லிக்கொள்வதை விட அவரின் தொண்டன் என்பதில்தான் பெருமைப்படுகிறேன்.

பகுத்தறிவு, சுயமரியாதை, சமூக நீதி, சமத்துவம் எனும் நான்கு தூண்களால் எழுப்பிய இயக்கம் திமுக. சுயமரியாதை எனும் முதுகெலும்பில்லாத மாநில அரசையும், சமத்துவத்தையும், சமூக நீதியையும், பகுத்தறிவு சிந்தனைகளையும் சிதைக்கக்கூடிய மத்திய அரசையும் பார்க்கும்போது நமக்கு வேதனை ஏற்படுகிறது.

கல்வி, கலை, இலக்கியம், மதம்  ஆகியவற்றின் அடிப்படையை அதிகார பலத்தால், மதவெறியால் அழித்திட மத்திய அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. நீதித்துறை, கல்வித்துறை, ஆளுநர் நியமனம் உள்ளிட்டவைகளில் எல்லாம் மக்களாட்சியின் மதச்சார்பற்ற கொள்கைகளை, மாண்பைக் குலைக்கும் செயல்களாக அமைந்துள்ளன.

அண்ணா, கருணாநிதியால் தொலைநோக்குப் பார்வையில் தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்களை எல்லாம், தங்கள் சுயநல நோக்கால் முடக்கி, மாநில மக்களின் நலனை காவு கொடுத்து சுமரியாதை எல்லாம் அடகு வைத்து, அண்ணா பெயரையும் தாங்கி பகல் கொள்ளை ஒன்றை அரசு பெயரில் நடத்திக் கொண்டிருப்பதை வேதனையோடு பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த சமூகத் தீமைகளை அகற்றி, தமிழகத்தை  திருடர்களிடம் இருந்து மீட்பதை முதல் கடமையாகக் கொண்டிருக்கிறோம். தமிழகத்தின் இந்த ஆட்சியைப் பார்க்கும்போது, ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்ற பாரதியின் வரிகள் தான் ஞாபகத்துக்கு வருகிறது.

வெளியில் இருக்கும் போராட்டங்களுக்கு நாம் தயாராகும் முன், நாம் யார், நமக்குள் இருக்கும் குறைகள் என்ன, செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன என்று யோசித்து எனக்கு பல நாள் தூக்கம் வரவில்லை. விழித்துக்கொண்டே ஒரு கனவு கொண்டேன். ஒரு அழகான எதிர்காலத்தை நான் கனவு கண்டேன். நாம், நம் கழகம், நம் தமிழினம், நம் நாடு இவை அனைத்தும் புத்தம் புதிதாய் மாறுவது அந்த கனவு.

மாற்றம் இல்லாத, தம்மை மாற்றிக்கொள்ளாத விலங்கோ, இனமோ இம்மண்ணில் நீடித்தது இல்லை. மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும். இன்று நீங்கள் பார்க்கும், கேட்கும் மு.க.ஸ்டாலின் ஆகிய நான் புதிதாய்ப் பிறக்கிறேன். திராவிட இயக்கத்தின் கனவுகளோடு இதோ உங்கள் முன்னால் பிறந்திருக்கிறேன்.

இது புதிய நாம். அந்த அழகான எதிர்காலத்தில் நம் கழகத்தினர். யார்? அவர்கள் உடன் பழகுபவரை உடன்பிறப்பாய் நினைப்போர், யார் தவறு செய்தாலும், அது நான் என்றாலும் எதிர்த்துக் குரல் கொடுப்போர். பகுத்தறிவு விழிகொண்டு இந்த உலகை பார்ப்போர். கருத்து சுதந்திரத்தை போற்றிப் பாதுகாப்பவர், மதச்சாயம் பூசும் கட்சிகளை எதிர்ப்பவர். இதுதான் நான் காணும் கனவின் சிறு துகள்.

இதை நிறைவேற்ற தனி மனிதனான என்னால் முடியாது. என் உயிரினும் மேலான தலைவர் கலைஞரின்  உடன்பிறப்பே… நீ இல்லாமல் என்னால் அதைச் செயல்படுத்த முடியாது. வா, என்னோடு வா. இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்கும் மோடி அரசுக்குப் பாடம் புகட்ட வா. முதுகெலும்பில்லாத இந்த மாநில அரசைத் தூக்கி எறிய வா.

நான் முன்னே செல்கிறேன், என் பின்னால் வா என்று நான் சொல்லவில்லை. வா, நாம் சேர்ந்தே பயணிப்போம்.

இங்குள்ள மூத்தோர் என் அண்ணன்கள், அக்காள்கள். இளையோர் தம்பிகள், தங்கைகள். இனி இதுதான் என் குடும்பம். திமுகவில் நானும் ஒரு தொண்டன். இனி அனைவரும் சமம்.

தலைமைக்குக் கட்டுப்பட்டவர்களாக நீங்கள் இருக்க வேண்டும்.உங்கள் எண்ணத்தின் பிரதிபலிப்பாக கட்சி இருக்கும்.

இந்த அழைப்பு தென்றலைத் தீண்ட அல்ல, தீயைத் தாண்டுவதற்கு. ஓடுவோம் ஓடுவோம் வாழ்க்கையின் ஓரத்திற்கு ஓடுவோம். உலகமே வியக்கும் சமூக நீதியின் இயக்கமாம் நம் தாய்க்கழகம் தி.க.வின் சுயமரியாதைக் கொள்கையிலிருந்து ஒருகணம்கூட நாம் மாறப்போவதில்லை.

அன்று மேடையின் கீழ் நின்ற நான் இதன் தலைவனாவேன் என்று கனவு கூட கண்டது கிடையாது. கருணாநிதியில்லாத கோபாலபுரம் வீட்டை, அறிவாலயத்தை, இந்த மேடையை இந்த இயக்கத்தை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. இவ்வளவு பெரிய பொறுப்பை என் தோளில் ஏற்றி வைத்துள்ளார்.

என்னிடம் இருக்கும் இதயம் அவர் தந்தது, அது அண்ணாவிடம் இரவலாக வாங்கியது. எதையும் தாங்கும் இதயம் இதைத் தாங்காதா? என் கடைசி மூச்சு, கடைசி இதயத்துடிப்பு உள்ளவரை தமிழினமே உனக்காக நான் உழைப்பேன் உழைப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.