ஒரு குப்பை கதை – விமர்சனம்

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் சிவகுமார் – தீபா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’. “வெத்தலை வெத்தலை வெத்தலையோ…”, “உச்சி வகுந்தெடுத்து…” போன்ற மிகப் பிரபலமான பாடல்கள் இடம் பெற்றிருந்த அந்த படம், ஒரு மனைவியின் கள்ளக் காதலையும், அவளது அப்பாவிக் கணவனின் மன உணர்வுகளையும் அழுத்தமாக சித்தரித்து வெற்றி கண்டது. ஏறக்குறைய அதேபோன்ற அடிப்படைக் கதையுடன், மனைவியின் கள்ளக் காதலையும், அதன் விளைவுகளையும் உணர்ச்சிப்பூர்வமாய் அழுத்தமாக சொல்ல வந்திருக்கிறது ‘ஒரு குப்பை கதை’.

கதையின் நாயகனான டான்ஸ் மாஸ்டர் தினேஷ், ஒரு கொலை செய்துவிட்டதாகக் கூறி போலீசில் சரணடைகிறார். அவர் செய்த கொலை பற்றி போலீஸ் விசாரிக்க, தன் வாழ்க்கைக் கதையை தினேஷ் விவரிக்கத் தொடங்குவதாக படம் ஆரம்பமாகிறது.

சென்னை மாநகரில், கூவம் கரையோர குப்பத்தில், ஒரு குடிசை வீட்டில் தன் அம்மாவுடன் வசித்து வரும் தினேஷ், குப்பை அள்ளும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவர் நல்லவர், நேர்மையானவர், கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லாதவர். இத்தகைய நல்லியல்புகள் கொண்டவராக இருந்தபோதிலும், அவர் செய்யும் வேலை காரணமாக அவருக்கு எவரும் பெண் கொடுக்க முன்வரவில்லை.

இந்நிலையில், வால்பாறையில் வசிக்கும் நாயகி மனிஷாவை, ஒரு நண்பர் மூலம் பெண் பார்க்கச் செல்கிறார்கள். மனிஷாவின் வீட்டாரிடம், மாப்பிள்ளை ஒரு கம்பெனியில் குமாஸ்தாவாக வேலை பார்ப்பதாக பொய் சொல்லுகிறார்கள். ஆனால் பொய் பேசும் பழக்கம் இல்லாத தினேஷ், மனிஷாவின் அப்பாவான ஜார்ஜிடம், ‘நான் குப்பை அள்ளும் தொழிலாளி’ என்று உண்மையைச் சொல்லிவிடுகிறார். தினேஷின் நேர்மை ஜார்ஜூக்கு பிடித்துப் போக, அவருக்கு தன் மகளைக் கொடுக்க சம்மதிக்கிறார். அதேநேரத்தில் தினேஷ் செய்யும் வேலை பற்றி மனிஷாவிடம் சொல்ல வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொள்கிறார்.

தினேஷுக்கும், மனிஷாவுக்கும் திருமணம் நடக்கிறது. நிறைய கனவுகளுடன் வரும் மனிஷாவுக்கு கூவக்கரையோர குப்பத்து வாழ்க்கை பிடிக்கவில்லை. அவர் கர்ப்பவதி ஆகிறார். அதன்பின் தான் அவருக்கு தினேஷ் குப்பை அள்ளும் தொழிலாளி என்ற விவரம் தெரிய வருகிறது. தினேஷை வெறுக்க ஆரம்பிக்கிறார்.

தலை பிரசவத்துக்காக பிறந்த வீடு செல்லும் மனிஷா, குழந்தை பிறந்த பிறகு, குப்பத்துக்கு வர முடியாது என்று பிடிவாதமாக கூறிவிடுகிறார்.

இதனால் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு பிடித்து, அங்கே குடி போகிறார்கள். அவர்களது வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஐ.டி. ஊழியரான சுஜோ மேத்யூக்கும், மனிஷாவுக்கும் பழக்கம் ஏற்படுகிறது. அது கள்ளக் காதலாக மாறுகிறது. விளைவாக, மனிஷாவையும் அவரது குழந்தையையும் அழைத்துக்கொண்டு ஓசூருக்கு ஓடிப்போய், அங்கே குடும்பம் நடத்துகிறார் சுஜோ மேத்யூ.

மனைவியையும், குழந்தையையும் பிரிந்த வேதனையிலும், அவமானத்திலும் வாடும் தினேஷ் குடிக்க ஆரம்பிக்கிறார். மனைவியை அவரது விருப்பம் போல் வாழ விட்டுவிட்டு, குழந்தையை மட்டும் அழைத்து வர ஓசூர் செல்கிறார். அங்கே என்ன நடந்தது என்பது அதிர்ச்சியூட்டும் கிளைமாக்ஸூடன் கூடிய மீதிக்கதை.

நாயகனாக அறிமுகமாகி இருக்கும் டான்ஸ் மாஸ்டர் தினேஷ், குப்பை அள்ளும் தொழிலாளியாகவே வாழ்ந்திருக்கிறார். முதல் படத்திலேயே யதார்த்தமாக நடித்து, பார்வையாளர்களின் மனம் கவர்கிறார்.

நாயகி மனிஷாவுக்கு மிகவும் சிக்கலான கதாபாத்திரம். பிற நாயக நடிகைகள் நடிக்கத் தயங்கும் கதாபாத்திரம். ஆனால், மனிஷா தன் கதாபாத்திரத்தை சரியாக உள்வாங்கி, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, கள்ளக் காதலில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக விழும் தருணங்கள், இதயத் துடிப்பை எகிறச் செய்கின்றன.

நாயகனின் நண்பனாகவும், குப்பை அள்ளும் சக தொழிலாளியாகவும் வரும் யோகி பாபு காமெடியிலும், குணச்சித்திர நடிப்பிலும் கலக்கியிருக்கிறார். சுஜோ மேத்யூ, கிரண் ஆர்யன், ஜார்ஜ், அதிரா, கோவை பானு, செந்தில், லலிதா உள்ளிட்டோர் தங்கள் பாத்திரம் உணர்ந்து தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

குப்பை அள்ளுபவன் உள்ளத்தால் தூய்மையாக இருக்கிறான், வெளியில் நாகரிகமாகத் தெரிபவன் மனதளவில் குப்பையாக இருக்கிறான் என்பதை அடித்தளமாக வைத்து கதை பின்னியிருக்கும் அறிமுக இயக்குனர் காளி ரங்கசாமி பாராட்டுக்கு உரியவர். கள்ளக் காதல் விபரீதங்கள் அதிகரித்து வருவதை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டி வரும் இன்றைய நிலையில், கள்ளக் காதலுக்கு எதிராக பெண்களை எச்சரிப்பது இப்படத்தின் சிறப்பு.

ஜோஸ்வா ஸ்ரீதரின் பின்னணி இசையும், மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவும் படத்துக்கு கூடுதல் பலம்.

`ஒரு குப்பைக் கதை’ – ரசிக்கத் தக்க நல்ல கதை!