ஆண்டவன் கட்டளை – விமர்சனம்
“படம் நல்லா இருக்கு’, அல்லது ‘நல்லா இல்ல’ என்று மட்டும் தான் விமர்சகர்கள் எழுத வேண்டும். அதற்கு மேல் ஒரு வரி கூட எழுதக் கூடாது” என்று ‘ஆண்டவன் கட்டளை’ படத்துக்கான பிரஸ்மீட்டில் சர்வாதிகார தொனியில் கண்டிப்புடன் கூறியவர், இப்படத்தின் இயக்குனர் எம்.மணிகண்டன். அவரது கட்டளையை மதிக்கிறோம். அதன்படி, ‘ஆண்டவன் கட்டளை’க்கான நமது விமர்சனம்: “படம் நல்லா இருக்கு. ரொம்ப நல்லா இருக்கு.”
முடிந்ததா மிஸ்டர் மணிகண்டன்? கிளம்புங்க. ஒரு படத்துக்கு ஊடகவியலாளன் விமர்சனம் எழுதுவது, அப்படத்தை இயக்கியவன் மட்டும் படிப்பதற்காக அல்ல; அந்த ஊடகம் வெளியிடும் எண்ணற்ற தகவல்களை வாசிக்கும் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் படிப்பதற்காக. எனவே, இனிவரும் ‘ஆண்டவன் கட்டளை’ விமர்சனம் – உங்களுக்காக அல்ல, எமது இணைய இதழை வாசிக்கும் வாசகர்களுக்காக எழுதப்படுகிறது. கிளம்பிப் போங்க… சீக்கிரம்…!
# # #
மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். அங்கு காந்தி (விஜய்சேதுபதி), பாண்டி (யோகிபாபு) என இரண்டு நண்பர்கள்.
அக்காவின் திருமணத்துக்காகவும், சொந்த தொழில் செய்வதற்காகவும் அக்காவின் கணவரிடமே (இயக்குனர் ஏ.வெங்கடேஷிடமே) கடன் வாங்கி சுமார் ரூ.7லட்சம் வரை கடனாளியாக இருக்கிறான் காந்தி. இக்கடனை அடைக்க வெளிநாடு சென்று சம்பாதிக்க முடிவு செய்கிறான்.
வெளிநாடு சென்று நிறைய சம்பாதித்து திரும்பிய நமோ நாராயணனின் வழிகாட்டுதலின் பேரில், காந்தியும், பாண்டியும் சென்னைக்குச் சென்று, குமார் (இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி) என்ற போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் புரோக்கரை சந்திக்கிறார்கள்.
போலி ஐ.டி. தயாரிக்க சென்னை முகவரி ஒன்று வேண்டும் என்று குமார் சொல்லவே, இதற்காக ரியல் எஸ்டேட் புரோக்கர் (சிங்கம்புலி) உதவியுடன் வாடகைக்கு வீடு தேடி சென்னை தெருக்களில் அலைகிறார்கள். பேச்சலர்களுக்கு வீடு கொடுக்க மறுப்பதால், திருமணம் ஆகிவிட்டதாக காந்தியை பொய் சொல்ல சொல்லுகிறான் ரியல் எஸ்டேட் புரோக்கர். இல்லாத அந்த மனைவிக்கு அவனே ‘கார்மேகம்’ என பெயர் சூட்டுகிறான். அது ஆம்பள பெயர் போல் இருப்பதால், அதனுடன் ‘குழலி’ சேர்த்து, ‘கார்மேக குழலி’ என மாற்றுகிறான் காந்தி. இப்போது அவர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைத்துவிடுகிறது.
“கல்யாணம் ஆகியிருந்தா லண்டன் போக ஈஸியா டூரிஸ்ட் விசா கிடைக்கும்” என போலி பாஸ்போர்ட் புரோக்கர் குமார் சொல்வதை நம்பி, தன் மனைவி பெயர் ‘கார்மேக குழலி’ என்று காந்தியும், ‘பி.தமன்னா’ என்று பாண்டியும் விசா அப்ளிகேஷனில் எழுதுகிறார்கள்.
இண்டர்வியூவில் பொய் பேசும் பாண்டிக்கு விசா கிடைத்துவிட, உண்மை பேசும் காந்திக்கு விசா மறுக்கப்படுகிறது. இதனால் பாண்டி லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றுவிட, அடுத்த விசா இண்டர்வியூ வரும் வரையில் சுமார் 6 மாதத்துக்கு சென்னையிலேயே தங்கி ஏதாவது ஒரு வேலை பார்ப்போம் என்று முடிவெடுக்கும் காந்தி, டிராமா மாஸ்டர் (நாசர்) நடத்தும் நடிப்புப்பயிற்சி கூடத்தில் அக்கவுண்டண்ட் பணியில் சேருகிறான்.
எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு உண்மையாக உழைப்பதோடு நேர்மையாகவும் இருக்கும் காந்தியை, டிராமா மாஸ்டருக்கு பிடித்துப் போகிறது. லண்டனில் நடக்கும் சர்வதேச நாடக விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு அவரது நாடகக் குழுவுக்கு கிடைக்க, “நாடகக்குழு மேனேஜராக நீயும் லண்டனுக்கு வர்ற” என்று காந்தியிடம் சொல்லும் மாஸ்டர், அவனது பாஸ்போர்ட்டை கேட்கிறார். அவரிடம், தனக்கு திருமணம் ஆகவில்லை என ஏற்கெனவே உண்மையை சொல்லியிருக்கும் காந்தி, ‘மனைவி பெயர் – கார்மேக குழலி’ என பொய்யாக குறிப்பிடப்பட்டிருக்கும் தனது பாஸ்போர்ட்டை அவரிடம் கொடுக்க தயங்குகிறான். அவரை ஏமாற்ற மனமின்றி இழுத்தடிக்கிறான். பாஸ்போர்ட்டில் இருக்கும் ‘கார்மேக குழலி’ என்ற பெயரை நீக்கும் முயற்சியில் இறங்குகிறான்.
இது தொடர்பாக காந்தி, பாஸ்போர்ட் அலுவல கிளார்க்கை (சீனுவை) அணுகுகிறான். அந்த கிளார்க்கோ, “இது ரொம்ப பெரிய சிக்கலாச்சே” என்று சொல்லி, ஒரு புரோக்கரிடம் அனுப்புகிறான். அந்த புரோக்கரோ, “மனைவியை டைவர்ஸ் செய்துவிட்டதாக காட்டினால் தான், மனைவியின் பெயரை பாஸ்போர்ட்டில் இருந்து நீக்க முடியும்” என்று சொல்லி அவனை ஒரு வக்கீலிடம் அனுப்புகிறான். அந்த வக்கீலோ, “டைவர்ஸூக்கு அப்ளை பண்ணனும்னா, ‘கார்மேக குழலி’ என்ற பெயரிலிருக்கும் ஏதாவது ஒரு பெண்ணின் ஐ.டி. ஜெராக்ஸ் மட்டும் கொண்டு வாங்க. முடிச்சிடலாம்” என்கிறார்.
அப்போது ‘கார்மேக குழலி’ என்ற பெயரில் ஒரு தொலைக்காட்சி செய்தியாளர் (ரித்திகா சிங்) இருப்பது காந்திக்கு தெரிய வருகிறது. உடனே போய் அந்த பெண்ணை சந்திக்கிறான். அவள் அவனுக்கு உதவ முன்வந்தாளா? போலி பாஸ்போர்ட்டில் லண்டனுக்கு போன பாண்டி என்ன ஆனான்? நாடகக் குழுவுடன் காந்தி லண்டன் சென்றானா? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்லுகிறது மீதிக்கதை.
காந்தி கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார் விஜய்சேதுபதி. கடன் பிரச்சனையில் அக்காவின் கணவரிடம் கெஞ்சுவது, சென்னையில் வாடகைக்கு வீடு தேடி அலைந்து விரக்தி அடைவது, விசா இண்டர்வியூவில் நேர்மையாக உண்மை பேசி வெளிநாடு செல்லும் வாய்ப்பை இழப்பது, அதே வாய்ப்பை பொய் சொல்லிப் பெற்ற நண்பனை வறுத்தெடுப்பது, டிராமா மாஸ்டரிடம் பணிவுடன் நடந்துகொள்வது, நாயகியின் முன்னால் பேச இயலாத மாற்றுத் திறனாளியாக நடிப்பது, டைவர்ஸூக்கான கவுன்சிலிங்கின்போது கேட்கப்படும் தாம்பத்ய வாழ்க்கை பற்றிய கேள்விக்கு மாற்றுத்திறனாளியாகவே பதிலளித்து கொந்தளிப்பது, ஈழத்தமிழன் மீது பரிவு காட்டுவது என ஒவ்வொரு உணர்விலும், ஒவ்வொரு உடல்மொழி, ஒவ்வொரு குரல்மொழி காட்டி பொளந்து கட்டியிருக்கிறார் விஜய்சேதுபதி. “வர வர விஜய்சேதுபதி நடிப்பு ராட்சசனாக மாறிக்கொண்டிருக்கிறான்” என்று ஒரு விமர்சகர் மனம் திறந்து பாராட்டியிருப்பதை நாமும் வழிமொழிகிறோம்.
நண்பன் பாண்டியாக வரும் யோகிபாபு, முதல் பாதியில் தோன்றும் காட்சிகள் ஒவ்வொன்றையும் திரையரங்கமே கைதட்டி கொண்டாடுகிறது. “உன் மூஞ்சியைப் பார்க்க பிடிக்கலை” என சொன்னவுடன், “சார் பவுடர் போட்டிருக்கேன்” என்று பதிலடி கொடுப்பது, “அவ்ளோ நல்ல வெள்ளக்காரனுகளை ஏண்டா நாட்ட விட்டு தொரத்தினோம்”, “நீ லண்டன் சிட்டிசன் மேல கை வைக்கறடா”, “ஜெயிச்சவனை தோத்தவன் ஏன் அடிக்கிறான்”, “எவ்ளோ பெரிய மூக்கு”, “இப்போ கோபமா டீயை கீழே ஊத்துவான் பாரேன்” என்றெல்லாம் கவுன்ட்டர் கொடுத்து காமெடி சரவெடி கொளுத்துகிறார். இரண்டாம் பாதியில் குணச்சித்திர நடிகருக்கான அம்சங்களை அள்ளித் தருகிறார். யோகிபாபுவுக்கு நிச்சயம் இது திருப்புமுனை திரைப்படம்.
துணிச்சலான டிவி செய்தியாளர் கார்மேக குழலியாக வரும் ரித்திகா சிங்கின் நடிப்பு, அசர வைக்கும் ஆச்சரியம். பிரஸ்மீட்டில் கலாச்சார காவலன் போல் பேசும் அமைச்சருடனும், அவருக்கு ஆதரவாக தன்னுடன் வாக்குவாதம் செய்யும் சக பத்திரிகையாளர்களிடமும் ஆவேசமாக மோதி வெளியேறுவது, நாயகனின் டைவர்ஸ் முயற்சிக்கு முதலில் உதவ மறுத்து பிடிவாதம் காட்டுவது, பின்னர் மனமிரங்கி உதவப்போய் அவதிப்பட்டு கடுப்பாவது, தன்னை பெண் பார்க்க வந்திருப்பவன் கேட்கும் அபத்தமான கேள்விகளுக்கு வெடுக்கென பதிலளிப்பது… என கதாபாத்திரத்துக்குத் தேவையான முதிர்ச்சியான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் ரித்திகா சிங். அதிலும், “நாம கல்யாணம் பண்ணிக்குவோமா?” என நாயகன் கேட்கும்போது, நேரடியாக பதில் சொல்லாமல் யோசனையும், வெட்கமுமாய் ஒரு ரியாக்ஷன் கொடுப்பாரே… நோ சான்ஸ்! அவர் இது போன்ற கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்தால், நற்பெயரை தக்க வைத்துக்கொள்ளலாம்.
இலங்கைத் தமிழராக வரும் அரவிந்தன், குடியுரிமை விசாரணை அதிகாரியாக வரும் ஹரிஷ், டிராமா மாஸ்டராக வரும் நாசர், நடிப்புப்ப்யிற்சி கலைஞர்களாக வரும் சாந்தகுமார், பூஜா தேவாரியா, ரியல் எஸ்டேட் புரோக்கராக வரும் சிங்கம்புலி, சீனியர் வக்கீலாக வரும் ஜார்ஜ், அவரது ஜூனியராக வரும் வினோதினி, நீதிபதியாக வரும் சுசிலா, போலி பாஸ்போர்ட் ஏஜெண்டாக வரும் இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி, போலி கையெழுத்து போடும் சேஷூ… என படத்தில் நடித்த அனைவருமே குறிப்பிட்டுப் பாராட்டும்படியான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
அருள் செழியனின் கதையைப் படமாக்கிய விதமும், எம்மணிகண்டன், அருள் செழியன், அனுசரண் என மூவரின் திரைக்கதை அமைப்பும் சிறப்பு. இடைத்தரகர்களிடம் சிக்கித் தவிக்கும் நாயகனின் நிலையை இயல்பாக, அதே சமயம் அழுத்தமாக சொன்ன விதத்தில் இயக்குநர் மணிகண்டன் முத்திரை பதிக்கிறார். நிறைய காட்சிகளில் கதாபாத்திரங்களின் செயல்பாடுகளில் இயக்குநரின் புத்திசாலித்தனமும் பளிச்சிடுகிறது. இறுதியில், “இயக்கம் – மணிகண்டன் சந்திரா மதியழகன்” என பாஸ்போர்ட் பாணியில் பெயர் போட்டது ‘அட’ என புருவம் உயர்த்த வைக்கிறது.
”படிச்சா டாக்டர்தான் ஆகமுடியும். படிக்கலைன்னா மெடிக்கல் காலேஜ் கட்டி கல்வித்தந்தையே ஆகலாம்”, ”சம்பாதிக்கிறது லண்டன்லயும், சவுதிலயும். ஆனா கிறிஸ்டீனுக்கும், முஸ்லிமுக்கும் வாடகைக்கு வீடு விடமாட்டாங்களா?”, ” ஆக மொத்தம் தமிழ்நாட்ல தமிழ்ல பேசுனா பிரச்சினை. அதான் நானும் காந்தியும் லண்டன் போறோம்”, “சொன்ன பத்து பொய்க்கு ஒண்ணுமே நடக்கல. ஒரே ஒரு உண்மை சொன்னதுக்கு விசா ரிஜக்ட்”, ”வேலைக்கு விசுவாசமா இருப்பதா, வேலையில் சேர்த்துவிட்டவனுக்கு விசுவாசமா இருப்பதா?” என்பன போன்ற மணிகண்டனின் வசனங்கள் கூர்மை.
கே-வின் பாடலிசையும், பின்னணியிசையும் படத்துக்கு மிகப் பெரிய பலம்.
தமிழ்நாடு அரசின் கோபுர முத்திரையையே போலியாக தயாரித்து ஃஃபிராடு வேலை செய்யும் ஏஜண்டுக்கு, கார்மேக குழலி என்ற பெயரில் ஒரு ஐ.டி. தயாரிப்பதா கஷ்டம்? அதற்கு எதற்கு ஒரு கேரக்டரை தேடிப் போக வேண்டும்? ஒரு ரீஜனல் பாஸ்போர்ட் அதிகாரியின் அறைக்கதவை ஒரு சாமானியன் தட்டிவிட்டு உள்ளே போய்ப் பார்ப்பது அத்தனை சுலபமா? அதெப்படி அத்தனை பெரிய அதிகாரி விஜய் சேதுபதி சொன்னதும் நம்பி பச்சை இங்க்கில் படபடவென எழுதிக் கொடுத்துவிடுகிறார்? அரசு அலுவலகங்களில் பணிபுரியும் கீழ்மட்ட ஊழியர்கள் தான் அயோக்கியர்கள்; உயர்மட்ட அதிகாரிகள் எல்லாம் யோக்கியர்கள் என காட்டியிருப்பது, புரையோடி கிடக்கும் இன்றைய சமூக அமைப்பை அப்படியே கட்டிக்காக்கத் துடிக்கும் வலதுசாரி என்.ஜி.ஓ. கண்ணோட்டம் இல்லையா? நாயகனும் நாயகியும் வாழ்க்கையில் இணைவது ஆண்டவன் கட்டளை என்றால், குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி ஒரு பெருங்கூட்டம் அலைவதாக இதில் காட்டப்படுகிறதே… அவர்கள் பொருந்தா திருமணம் செய்ததற்கும், நாசமாய் போனதற்கும் எவன் கட்டளை காரணம்? என்று கேள்விகள் பல எழுந்தாலும்…
‘ஆண்டவன் கட்டளை’ – சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிற, ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய படம்!