“நான் ரஜினி ரசிகன்; ரஜினி வழியை பின்பற்றுபவன்!” – எம்.எஸ்.தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ஹிந்தியில் எடுக்கப்பட்டுள்ள படம் ‘M.S. Dhoni: The Untold Story’. நீரஜ் பாண்டே இயக்கியுள்ளார்.

தோனி இந்தியா முழுக்க பிரபலம் என்பதால், ‘M.S. Dhoni: The Untold Story’ படத்தை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதன்படி இந்த படம் ‘எம்.எஸ்.தோனி’ என்ற பெயரில் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.

இப்படம் இம்மாதம் 30ஆம் தேதி வெளியாக இருப்பதால், இப்படத்தை விளம்பரப்படுத்துவதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, தன்னுடைய பாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர்  சுஷாந்த் சிங் ரஜ்புத் உள்ளிட்ட படக்குழுவினருடன் சென்னை வந்திருந்தார் தோனி.

சத்யம் திரையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தோனிக்கு, நடிகர் சூர்யாவின் மகள் தியா, மகன் தேவ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்தனர். (கீழே உள்ள படத்தில் சூர்யா மகள் தியா, மகன் தேவ்.)

0a1

அப்போது தியா, தேவ் ஆகிய இருவரிடம் “உங்கள் தந்தை சூர்யா நடித்த சிங்கம் படம் எனக்கு மிகவும் பிடிக்கும். என்ன கம்பீரம்! நான் அவரது ரசிகன் என்பதை அவரிடம் கூறுங்கள்” என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகாவும் கலந்துகொண்டார்.

இதையடுத்து தோனி பேசும்போது, “என் வாழ்க்கை கதையை படமாக்க இருப்பதாக சொன்னபோது முதலில் நான் அதை நம்பவிலலை. சும்மா சொல்கிறார்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால் திடீரென்று ஒருநாள் இயக்குனர் நீரஜ் பாண்டே ஸ்கிரிப்ட்டுடன் வந்து என்னை ஆச்சரியப்படுத்தினார். இந்தப் படத்தில் எனது கேரக்டரில் நடித்துள்ள சுஷாந்த் என்னை அப்படியே உள்வாங்கி சிறப்பாக நடித்துள்ளார்.

“என் வாழ்க்கை குறித்த இந்தப் படம் என்னை மிகவும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. மீண்டும் என் கடந்த கால விஷயங்களை திரும்பி பார்க்கும் ஒரு பதிவாக இதை பார்க்கிறேன்” என்றார்.

“உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?” என்று ஒரு ரசிகர் கேட்டவுடன், தோனி  தோரணையுடன் எழுந்து நின்று சட்டையை கோதியபடி,  “நான்  சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகன்; அவர் வழியை பின்பற்றுபவன்” என்று சொன்னதோடு, ரஜினி ஸ்டைலில் “என் வழி தனி வழி…” என்ற ரஜினியின் வசனத்தை பேசிக்காட்டினார்.

மேலும், “இன்று நான் ரஜினியை சந்திக்கப் போகிறேன். அவரை சந்திக்கும் இந்த நாளை என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாளாக கருதுகிறேன். இந்த நாளுக்காக நீண்ட நாட்கள் காத்திருந்தேன்” என்றார்.

நிகழ்ச்சி முடிந்ததும், ரஜினியை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனுஷின் வீட்டில் தோனி சந்தித்து பேசி மகிழ்ந்தார்.