“சினிமாவில் இன்று நான் இருக்கும் இடம் ரசிகர்கள் கொடுத்தது”: விஜய்சேதுபதி நெகிழ்ச்சி!

“சினிமாவில் இன்று நான் இருக்கும் இடம், நானே  எதிர்பார்ககவில்லை. இது எல்லாமே நீங்கள் கொடுத்தது” என்று ‘றெக்க’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களை பார்த்து நெகிழ்ச்சியுடன் பேசினார் நடிகர் விஜய்சேதுபதி.

விஜய்சேதுபதி, லட்சுமிமேனன், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், கிஷோர், சதீஷ், சிஜாரோஸ், ஹரிஷ் உத்தமன், கபீர் சிங், ஸ்ரீரஞ்சனி,  மீரா கிருஷ்ணன் நடித்துள்ள  படம் ‘றெக்க’. இப்படத்தை ‘காமன்மேன்’ பி.கணேஷ் தயாரித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் ரத்தின சிவா.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் இன்று நடைபெற்றது. பாடல்களை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட, ‘ரேணிகுண்டா’ இயக்குனர் பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். படத்தின் நாயகன் விஜய்சேதுபதி இவ்விழாவில் கலந்துகொண்டு பேசியதாவது:

இப்போது இங்கே எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அப்பப்பா.. செம்மயா இருக்கு. ஒரே பதற்றமாக இருக்கிறது.  இந்த இடம்  நான் எதிர்பார்க்கவில்லை. எல்லாமே நீங்கள் கொடுத்தது. அதற்கு உங்களுக்கு என் நன்றி.

நான் நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியிருக்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த ‘றெக்க’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா. இன்னும் இரண்டே வாரத்தில் இன்னொரு படம் வெளியாக இருக்கிறது. எனக்கே ஒரு மாதிரியாக இருக்கிறது. படங்கள் வரிசையாக வருவதற்குக் காரணம் நேரம் அப்படி அமைந்தது தானே தவிர இவ்வளவு வேகமாக படங்களில் நடிக்க முடியாது. வெளிவரும் தேதிகள் அப்படி தொடர்ச்சியாக அமைந்து இருக்கிறது.

ஆனாலும், ரசித்து வரவேற்ற ரசிகர்களுக்கும், ஊக்கம் தந்த ஊடக நண்பர்களுக்கும் நன்றி.

முதலில் ‘றெக்க’ மாதிரி ஒரு படம் நமக்கு சரிப்பட்டு வருமா என்று பயந்தேன் முடியுமா என தயங்கினேன். முடியுமா என எனக்குள் 1 008 கேள்விகள் எழுந்தன ஆனால் இயக்குனர் ரத்தின சிவா கதை சொன்ன விதம், வசனம்  பேசிக்காட்டிய முறை எல்லாமே என்னைக் கவர்ந்தது. காற்றிலேயே படம் வரைந்து சிவா  என்னென்னவோ செய்தார். என்னைக் கவர்ந்தார்.  அப்படித்தான் இந்தப் படம் தொடங்கியது.

இந்த கதை மேல் நம்பிக்கை வைத்து, என் மேல் நம்பிக்கை வைத்து தயாரிக்க முன்வந்த கணேஷுக்கு நன்றி. படத்தில் நான் எதற்கும் கஷ்டப்படவில்லை. ஆனால் ‘பஞ்ச் டயலாக்’ பேசுவதுதான் சிரமமாக இருந்தது. கஷ்டப்பட்டேன். இப்படத்தில் ‘பஞ்ச்’சுக்கே ஒரு பஞ்ச் இருந்தது. இயக்குநர் சிவா  ஒரு நடிகனை புரிந்துகொண்டு காட்சிகள் அமைத்திருந்தார். அவர் மேலும் உயர்வார்.

லட்சுமி மேன்னுக்கும் நல்ல கதாபாத்திரம். சதீஷ் அப்படி கலகலப்பாக வருகிறார். கே.எஸ்.ரவிகுமார் சாரின் விசிறி நான். ‘தங்க மகன்’ படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து வியந்தேன். அவருடன் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. படத்தில் அவர் நடித்திருப்பது படத்துக்கு பலமாகி அழகாக மாறியிருக்கிறது.

படக்குழுவினருக்கு நன்றி. ரசிகர்களுக்கு நன்றி. சத்தியமாக நிறைய பேசத் தோன்றுகிறது ஆனால் பேச முடியவில்லை. அவ்வளவு பதற்றமாக இருக்கிறேன்.

இவ்வாறு நெகிழ்ச்சியுடன் பேசினார் விஜய்சேதுபதி.

விழாவில் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் டி.சிவா, துணைத்தலைவர் கதிரேசன், இயக்குனர்கள் மகிழ்திருமேனி, பன்னீர் செல்வம், படத்தின் இயக்குனர் ரத்தின சிவா, ,இசையமைப்பாளர் டி.இமான், கவிஞர் யுகபாரதி,  நடிகை லட்சுமி மேனன், நடிகர்கள் சதீஷ் ,ஹரிஷ், எடிட்டர் கே.எல்.பிரவீன் ஆகியோரும் கலந்துகொண்டு பேசினார்கள்.

முன்னதாக தயாரிப்பாளர்கள் பி.கணேஷ்  ,சுபா கணேஷ் அனைவரையும் வரவேற்றார்கள்.