ஆடிட்டர் தாக்கப்பட்ட வழக்கு: ஜெயேந்திரர் உட்பட 9 பேரும் விடுவிப்பு!

மந்தைவெளி ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரர் உட்பட 9 பேரையும் சென்னை நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) விடுவித்து உத்தரவிட்டது.

சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணனை ஒரு கும்பல் கடந்த 2002 செப்டம்பர் 20-ம் தேதி வீடு புகுந்து அரிவாளால் வெட்டியது. இதில் அவர், மனைவி ஜெயஸ்ரீ, வேலைக்காரர் கிருஷ்ணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து பட்டினப்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரர் மீது குற்றம்சாட்டி, சோமசேகர கனபாடிகள் என்ற பெயரில் பல அரசு அதிகாரிகளுக்கு மொட்டைக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றை ராதாகிருஷ்ணன்தான் அனுப்புவதாக நினைத்து அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று போலீஸ் விசாரணையில் கூறப்பட்டது.

இதையடுத்து, ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு, ரவிசுப்ரமணியம், அப்பு என்ற கிருஷ்ணசாமி, கதிரவன், சுந்தர் என்ற மீனாட்சி சுந்தரம், ஆனந்த் என்ற ஆனந்தகுமார், லட்சுமணன், பூமிநாதன், கண்ணன், சின்னகுமார் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதில் ரவிசுப்ரமணியம் மட்டும் அப்ரூவராக மாறினார்.

இந்த வழக்கு சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின்போதே, அப்பு இறந்தார். கதிரவன் கொலை செய்யப்பட்டார். எஞ்சிய 9 பேர் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

போலீஸ் தரப்பில் ரவிசுப்ரமணியம் உள்ளிட்ட 81 பேர் சாட்சியம் அளித்தனர். 220 சாட்சி ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 106 குற்ற ஆவணங்களில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேரும் நேரில் ஆஜராகுமாறு நீதிபதி பி.ராஜமாணிக்கம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, ஜெயந்திரர் உள்ளிட்ட 9 பேரும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் 3-வது தளத்தில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, ஜெயேந்திரர் 88 கேள்விகளுக்கு பதில் அளித்தார். குற்றச்சாட்டு கேள்விகள் பதிவு செய்யப்பட்டதும், அதற்கான ஆவணங்களில் ஜெயேந்திரர் கையெழுத்திட்டார். மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், மந்தைவெளி ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரர் உட்பட 9 பேரையும் சென்னை நீதிமன்றம் விடுவித்தது.

Read previous post:
0a1e
நடிகர் சங்கத்துக்கு லைக்கா அதிபர் ரூ.1 கோடி நன்கொடை!

கமல்ஹாசன் நடிக்க, ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் லைக்கா புரொடக்ஷன் இணைந்து வழங்கும் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் துவக்க விழா இன்று காலை சென்னை தி.நகரிலுள்ள நடிகர்

Close