“இளைஞர்கள் அரசியலில் ஆர்வம் காட்ட வேண்டும்”: விஜய் சேதுபதி அறிவுரை
அருண் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘சேதுபதி’. பிப்ரவரி 19ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார் விஜய்சேதுபதி. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியது:
சினிமா நடிகர்களுக்காக இளைஞர்கள் சண்டை போட்டுக்கறது கஷ்டமா இருக்கு. தேடித் தேடி சண்டை போட்டு பெர்சனலா திட்டிக்கறாங்க – ட்விட்டர்லயும் ஃபேஸ்புக்லயும். ஆனா, இதுல இருக்கற ஆர்வத்துல ஓரளவாவது அரசியல்ல, அரசியல பத்தின சிந்தனைல இருக்கணும்னு நான் எதிர்பாக்குறேன்.
முடிஞ்சளவு இளைஞர்கள் ஏதாவது ஒரு கட்சில அடிப்படை உறுப்பினராவாவது இருக்கணும்னு நினைக்கிறேன். மாற்றத்துக்கான முயற்சியாலாம் நினைக்கல – உறுப்பினரா இருந்தாவாச்சும் அரசியல பத்தி தேடித் தேடி தெரிஞ்சுப்பாங்க.
சினிமாவ பத்தி தேடித்தேடி தெரிஞ்சுக்கற மாதிரி அரசியல பத்தியும் தெரிஞ்சுக்கணும். அது ரொம்ப தேவை, முக்கியம்னு நினைக்குறேன்.
முக்கியமா இப்ப ஃபேஸ்புக், ட்விட்டர்லாம் வந்தாகூட ஜாதி எண்ணம் போகல. அது அதிகமான மாதிரி ஒரு ஃபீல். அந்த எண்ணம் இன்னும் ஆழமாகுது. அது ஏன்னு தெரியல. வளர வளர அது போக மாட்டேங்குது. இன்னைக்கு நிறைய லவ் மேரேஜ் நடக்குது. அது ரொம்ப நல்ல விஷயம். ஒத்துக்கறாங்க பேரண்ட்ஸ். ஆனாலும் ஜாதி இருக்கு. சிலசமயம் ஜாதிய மையமா வச்ச திருமண விளம்பரங்கள்லாம் வருது. ‘என் ஜாதில இருந்து நான் கல்யாணம் பண்ணிட்டேன். அதனால தான் இப்படி இருக்கேன்’னுலாம் விளம்பரம் பாக்கும்போது கஷ்டமா இருக்கு. அத எப்படி ஒத்துக்கறாங்கன்னு தெரியல. அது ரொம்ப காயப்படுத்துது. இதுலலாம் மாற்றம் வரணும்னு ஒரு சாதாரண ஆளா நான் எதிர்பாக்குறேன்.
இவ்வாறு விஜய் சேதுபதி கூறியுள்ளார்.