மீசைய முறுக்கு – விமர்சனம்

சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களின் முதுகில் தட்டிக்கொடுத்து, “ஜெயிக்கிறோமோ, தோற்கிறோமோ… முயற்சியை மட்டும் கைவிட்டு விடாதீர்கள்” என்ற நம்பிக்கையை ஊட்ட வந்திருக்கிறது ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு’.

கோவையில் ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பம். அதில் நாயகன் ஹிப்ஹாப் தமிழா ஆதி, பேராசிரியராக இருக்கும் அப்பா விவேக், பேராசிரியையாக இருக்கும் அம்மா விஜயலட்சுமி மற்றும் தம்பி அனந்தராம் ஆகியோர் இருக்கிறார்கள்.

ஆதிக்கு இசை என்றால் உயிர். எப்போதும் கீ-போர்டுடன் வலம் வருகிறார். அப்பாவின் வற்புறுத்தலுக்காக படித்தாலும், இசைத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் பயணிக்கிறார்.

இதற்கிடையில், பள்ளி பருவத்திலேயே நாயகி ஆத்மிகாவுடன் காதல், அந்த காதலால் காவல் நிலையம் வரை செல்லும் சிக்கல் என சம்பவங்கள் நீள்கின்றன. எனினும், கல்லூரிக்குச் சென்ற பிறகும் காதல் தொடருகிறது.

கல்லூரி படிப்புக்குப்பின் சென்னை சென்று இண்டிபெண்டண்ட் இசையில் சாதிக்க விரும்புகிறார் ஆதி. அவருக்கு ஒரு வருடகால அவகாசம் மட்டுமே கொடுக்கிறார் அப்பா விவேக். அந்த ஒரு வருட காலக் கெடுவுக்குள் ஆதி இசைத் துறையில் சாதித்தாரா? ஆத்மிகாவுடனான அவரது காதல் என்ன ஆனது? என்பது மீதிக்கதை.

இசையமைப்பாளரான ஹிப்ஹாப் தமிழா ஆதி, தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களோடு கொஞ்சம் கற்பனையையும் கலந்து, இப்படக்கதையை அமைத்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம், நடிப்பு என பல துறைகளை முதல் படத்திலேயே இழுத்துப்போட்டு செய்திருக்கும் ஆதி, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். காதல், காமெடி, செண்டிமெண்ட், நடனம் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, வணிக ரீதியிலான வெற்றி நாயகனாக தன்னை அடையாளம் காட்டி இருக்கிறார். வாழ்த்துக்கள்.

தமிழ் பற்றுள்ள பேராசிரியராகவும், ஆதியின் அப்பாவாகவும் நடித்துள்ள விவேக், வெறும் காமெடியனாக இல்லாமல், சிறந்த குணச்சித்திர நடிகராகவும் இதில் வெளிப்பட்டிருக்கிறார். அவர் பேசும் வசனங்களுக்கு திரையரங்கில் விசில் பறக்கிறது.

நாயகியாக வரும் ஆத்மிகா நடிப்பில் கலக்கியிருக்கிறார். ஆதியுடனான அவரது காதல் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது.

அனந்த்ராம் மற்றும் யூ-ட்யூப் பிரபலங்களான ஷா ரா , விக்னேஷ், அன்பு, சுதாகர், கோபி என அனைவரும் நடிப்பால் கவருகிறார்கள்.

“’நீங்கெல்லாம் சொந்தக்காரங்க கால்ல நிற்கிறீங்க. நான் சொந்தக் கால்ல நிற்கிறேன்’” என ஆதி பேசும் வசனம், “கனவுக்காக சிலர் வாழ்க்கையைத் தொலைச்சிடுவாங்க. வாழ்க்கைக்காக சிலர் கனவைத் தொலைச்சிடுவாங்க. நான் என் கனவை விட்டுட்டு, வாழ்க்கையில ஜெயிச்சிருக்கேன்’” என விவேக் பேசும் வசனம்… இப்படிப் படம் முழுக்க அர்த்தமுள்ள வசனங்களை அடுக்கியிருக்கிறார் ஆதி. திரைக்கதையையும் சுவாரஸ்யமாக, விறுவிறுப்பாக அமைத்திருக்கிறார்.

நடிகர், பாடகர், இசையமைப்பாளராகவும் ஆதி வெற்றி பெற்றுள்ளார். இது ஓர் இசைப்படம் என்ற உணர்வை படம் முழுக்க ஏற்படுத்தியிருக்கிறார். அவருடைய ஆல்பம் மற்றும் தனிப் பாடல்கள் படத்தில் இடையிடையே வருவது ரசிக்க வைக்கிறது.

செந்தில்குமார் – கிருத்தி வாசன் ஒளிப்பதிவும், ஃபென்னி ஆலிவரின் படத்தொகுப்பும் படத்துக்கு பெரிய பலம்.

`மீசைய முறுக்கு’ – இளசுகளுக்கு ஏற்ற இசை விருந்து!

Read previous post:
0a
ஊடகங்கள் தூக்கிவிட்ட போலி போராளி ஜூலி!

ஜூலி என்ற பெண்ணை தூக்கிவைத்துக் கொண்டாடிய முகநூல் கூட்டம் தான் இப்போது திட்டத் தொடங்கியுள்ளது. இனவிடுதலைக்காக தீக்குளித்த செங்கொடியைவிட, நான்கரையாண்டுகளாய், தன் தந்தையோடு மது ஒழிப்பிற்காக 50

Close