திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்…!

மற்றவர்களது பாடங்களிலிருந்து தனக்கான படிப்பினைகளை பெறுவது ஒரு நல்ல தலைமைக்கு அழகு.

இல்லை, நாங்கள் பட்டாலும் திருந்த மாட்டோம் என்று செயல்படும் தலைமைகளை பற்றி என்ன சொல்ல?

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஜெர்மனி, தன்னுடைய மின் தேவையில் 85 சதவீதத்தை, புதிப்பிக்கக் கூடிய ஆற்றலிலிருந்து தயாரித்ததாக அறிவித்தது.

பல நூற்றுக்கணக்கான அணு மின் நிலையங்களை கட்ட திட்டமிட்ட சீன அரசு, இப்போது கட்டப்படும் அணு மின்நிலையங்கள் தவிர புதிதாக எதுவும் கட்டப் போவதில்லை என்று அறிவித்து சூரிய சக்தி, காற்றாலைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது,

38% அணு மின்சாரத்தை நம்பி இருந்தாலும் ஜப்பான் ஒரே ஒரு அணு மின் நிலையத்தை மறுபடி ஆரம்பிக்க தலைகீழாக நின்று முயற்சித்துக்கொண்டிருக்கிறது.

75% அணு மின்சாரத்தை நம்பி இருக்கும் பிரான்ஸ் நாடு, அதை 40 சதவீதத்திற்கும் குறைவாக கொண்டுவருவதற்கு திட்டங்களை வகுத்துள்ளது.

1979 ஆம் ஆண்டிற்கு பிறகு ஒரு அணு உலையை கூட அமெரிக்கா ஆரம்பிக்கவில்லை.

இது இல்லாமல், உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் 150க்கும் மேற்பட்ட நாடுகள் அணு ஆயுதங்களுக்கு எதிராக கையெழுத்திட்டு ஐக்கிய நாடுகள் சபையில் விவாதம் நடைபெறுகிறது.

இவ்வாறு உலகம் முழுவதும் அணு சக்திக்கு எதிரான மனநிலையில் இருக்கும்போது, இந்தியா மட்டும் மேலும் புதிதாக 10 அணு உலைகள் அமைக்க அனுமதி கொடுத்துள்ளதாக வந்துள்ள அறிவிப்பை என்னவென்று சொல்ல?. அதுவும் “மேக் இன் இந்தியா” என்கிற திட்டத்தின் கீழ் இதை தயாரிக்க இருப்பதாக அறிவித்து, சுமார் 33,000 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு உண்மையில் பெரும் கவலை அளிக்கிறது. அதற்கான காரணங்கள் சில…

  1. அறிவித்துள்ள 10 அணு மின் உலைகளும் கடின நீரை (heavy water) பயன்படுத்துபவை, ஆனால் மிக அதிகமான நன்னீர் தேவைப்படும், உதாரணமாக சுட்காவில் (மத்திய பிரதேசம் மாநிலத்தில்) அமைக்கப்படும் அணு மின் நிலையம் நர்மதா ஆற்றங்கரையில் அமையவுள்ளது. நர்மதா நதியில் இருந்துதான் அணு உலைகளுக்கு தேவையான நன்னீரை எடுக்க போகிறார்கள், ஏற்கனவே தண்ணீர் பஞ்சம் அதிகமாக உள்ள நாட்டில் எது முக்கியம்?
  2. இந்த மாதிரி அமைக்கப்படும் அணு உலைகளுக்கு தேவையான யுரேனியம், ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும், (இந்தியாவில் தேவையான யுரேனியம் இல்லை), அப்படி இறக்குமதி செய்யப்படுவதால் சர்வதேச அணு சக்தி சட்டங்களுக்கு அவை உட்படுத்தப்படும் (IAEA guidelines). அதனால் அணு உலையில் உற்பத்தியாகும் கழிவுகளை எங்கு வேண்டும் என்றாலும் கொண்டு செல்ல முடியாது, அதனால் உற்பத்தியாகும் கழிவுகளை என்ன செய்வார்கள் என்று தெரியாது. இந்தியாவில் அணு கழிவுகளை புதைக்க ஒரு நிரந்தர இடம் கிடையாது.
  3. சுட்கா பழங்குடி மக்கள் அதிகம் வாழும் பகுதி, அந்த மண்ணின் மீது அவர்களுக்கே அதிக உரிமை இருக்கிறது. .
  4. பன்ஸ்வாரா, கைகா, கோரக்பூர், சுட்கா என அனைத்து இடங்களும் மக்கள் அடர்த்தியாக வாழக்கூடிய பகுதிகள், இவை அனைத்தும் நன்னீர் தட்டுபாடுள்ள பகுதிகள், இப்படி உள்ள இடங்களில் அணு உலைகளை அமைக்கவேண்டிய தேவை என்ன இருக்கிறது?
  5. செர்னோபில் விபத்து நடந்து 31 ஆண்டுகள் கழித்து அங்கு நிலவும் கதிர்வீச்சு குறித்த விவரங்கள் வெளிவந்து உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்ற நிலையிலும், புகுஷிமா விபத்தை எப்படி கையாளுவது என்று தெரியாமல் ஜப்பான் தடுமாறி கொண்டிருப்பது குறித்து வெளிவரும் தகவல்கள் அணுசக்தி குறித்த அச்சத்தை மேலும் அதிகரிக்க செய்கின்றன.

புதிப்பிக்கக்கூடிய எரிசக்தியை மட்டுமே பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதே பசுமை குடில் வாயுக்களின் அளவை குறைக்குமே ஒழிய, அணு மின்சாரம், அனல் மின்சாரம் இவை இரண்டும் சூழலை கெடுக்கும். இந்திய அரசு இந்த திட்டங்களை கைவிட்டுவிட்டு மக்கள் நல திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். உண்மையில் வளர்ச்சி என்பது எளிய மக்களுக்கானது, வல்லரசுகளுக்கானது அல்ல என்பதை இந்திய அரசு உணர வேண்டும்

– பூவுலகின் நண்பர்கள் 

SUNDAR RAJAN