உலகுக்கு ஓர் எச்சரிக்கை: புகுஷிமா அணு உலை விபத்து!

தங்களுக்கு தேவையான தூரத்திற்கு செல்ல அனுப்பப்பட்ட அந்த “தேள்கள்” (ரோபோட்டுகள்) சிறிது தூரத்திலேயே உருகி உருக்குலைந்து விட்டன. பத்து மணிநேரம் தாக்குப் பிடிக்கும் என்று எதிர்பார்த்த தேள் வடிவிலான ரோபோட்டுகளால் இரண்டு மணி நேரம் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை. 60செ.மீ நீளம் கொண்ட ரோபோட்டுகளில் இரண்டு கேமராக்களும், கதிர்வீச்சை அளவீடு செய்வதற்காக பல சென்சார்களும் பொருத்தப்பட்டு இருந்தன. ஆனால் அதிகமான கதிர்வீச்சு இருந்ததால் தாக்குப் பிடிக்க முடியாமல் உருகிவிட்டன….. இந்த விசயங்கள் ஏதோ ஹாலிவுட் திரைப்படத்தில் வரும் காட்சிகள் அல்ல, புகுஷிமா அணு உலையில் நடப்பவை.

6 ஆண்டுகள் கடந்தபிறகும் 625மீ.சீ அளவிற்கு கதிர்வீச்சு அந்தப்பகுதியில் உள்ளது, இந்த அளவு கதிர்வீச்சு மனிதர்களை தாக்கினால் மனிதனால் ஒரு நிமிடத்திற்கு மேல் உயிருடன் இருக்க முடியாது, அந்த அளவிற்கு கதிர்வீச்சின் அளவு உள்ளது.

புகுஷிமா அணு உலையை சேர்ந்த ஷுன்ஜி உச்சிடா சொல்லுகிறார் “டெப்கோவிற்கு உருகிய எரிபொருளின் நிலை என்ன என்றே தெரியாது” என்று. இரண்டாவது உலையின் நிலைகள் இவ்வாறு இருக்க, மற்ற இரண்டு உலைகளின் நிலைமை குறித்த எந்த தகவலும் இல்லை. இரண்டாவது உலையை செயலிழக்க செய்ய மட்டும் 6,80,000 கோடிகள் செலவாகும் என்று கணக்கிட்டுள்ளார்கள், அதுவும் 2040 ஆம் ஆண்டு வரை ஆகும் என்று அறிவித்துள்ளார்கள், ஆனால் கிரீன்பீஸ் அமைப்பை சேர்ந்த ஷான் புர்னேய் குறிப்பிடுகிற மாதிரி, புகுஷிமா விபத்து இது வரை மனித இனம் சந்திக்காதது மட்டுமல்ல மனிதர்களின் சக்தி, அறிவு, யோசிக்கும் திறன் ஆகிய அனைத்தையும் கடந்த பேரிடர் என்றும் அணு உலைகளை செயலிழக்கச்செய்ய இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்று சொல்லுகிறார்.

ஆனால் ஜப்பான் அரசு 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னர் ஓரளவுக்காவது அந்த பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றம் செய்ய முயற்சி செய்துவருகிறது. ஆனால் புகுஷிமா பகுதியில் இன்னமும் கதிர்வீச்சின் அளவு மிகவும் அதிகமாக இருக்கிறது என்கின்றன பல்வேறு அமைப்புகள், அந்த பகுதி முழுவதுக்கும் கதிர்வீச்சை சுத்தம் செய்யவும், ஓரளவிற்காவது மீள்குடியேற்றம் செய்யவும் பலலட்சம் கோடிகள் ஆகும் ஆனால் எவ்வளவு காலமாகும் என்பதை கணிப்பது மிகவும் கடினம் என்கின்றன அந்த அமைப்புகள்.

வெறும் கண்துடைப்பிற்காகவும், வெளிநாடுகளை ஏமாற்றவும் தான் முழுவதும் சுத்தம் செய்ய அந்த குறுகிய கால அளவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன, ஜப்பானின் பிரதமர் ஷின்ஜோ அபே வெளிநாடுகளுக்கு வேண்டுமானால் சென்று சில ஆண்டுகளில் புகுஷிமா சரியாகிவிடும் என்று சொல்லலாம் ஆனால் அவர் ஒருபோதும் ஜப்பான் நாட்டில் அந்த வார்த்தைகளை வெளியே சொல்லுவதில்லை.

புகுஷிமா அணு உலைகளை செயல் இழக்க செய்ய டெப்கோ நிறுவனம் அறிவித்துள்ள காலளவு ஒரு கனவு தான், நடைமுறையில் அது சாத்தியம் இல்லை என்கிறார் ஜப்பான் நாட்டின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் “ஸுனிச்சி டனகாவே” மேலும், இப்போது எங்களை இருள் தான் சூழ்ந்துள்ளது, எந்த விதத்திலும் எங்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய செய்திகள் வரவில்லை என்கிறார்.

பல்லாயிரம் கோடியில் கட்டப்பட்ட பனிச்சசுவரால் கதிர்வீச்சு கொண்ட நீர் கடலில் கலப்பதை பெரிய அளவில் தடுக்க முடியவில்லை, இதை தவிர பல்வேறு நீர் தொட்டிகளில் சேமித்து வைத்துள்ள சுமார் 10,00,000 (பத்து லட்சம்) டன் கதிர்வீச்சு நீரை என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து நிற்கிறது ஜப்பான். ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் 2020 ஆண்டுக்கு முன், அந்த பகுதி முழுமைக்கும் சுத்தமாக்கி பழைய நிலைமைக்கு கொண்டுவர ஜப்பான் அரசு பல்வேறு வழிகளில் முயற்சி செய்தாலும், உண்மை வேறு மாதிரியாக உள்ளது.

இந்த உலகம் இது வரை சந்தித்திராத பேரழிவு புகுஷிமா அணு உலை விபத்து தான் என்று உலகம் உணர்ந்து கொண்டுவருகிறது. வரலாற்றில் நடக்கும் விசயங்களை மறந்தாலும் அல்லது அதிலிருந்து பாடம்
கற்றுக்கொள்ளமறுத்தாலும், அந்த நிகழ்வுகள் திரும்பவும் நடைபெறும் என்று ஜார்ஜ் சான்டனியாவின் வார்த்தைகளை இந்நேரத்தில் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

SUNDAR RAJAN