இது ஸ்ரீரங்க கருவறை அய்யருக்கும் முனியாண்டி கோவில் பூசாரிக்கும் நடக்கும் சண்டை!

சகிப்புத்தன்மை குறித்து நமது இறையாண்மையில் ஆழமாக பேசப்பட்டு இருக்கிறது. இறையாண்மை என்பது நீதியின் ஆன்மாவோடு சம்மந்தப்பட்டது. நீதியில் கறார் தன்மை எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு சகிப்புத்தன்மையும் இருக்க வேண்டும். இந்த சகிப்புத்தன்மை உச்ச நீதிமன்றத்திற்கு இருக்கிறதா என்று தெரியவில்லை.

ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று உச்ச நீதிமன்றம் கூறி அவரை பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவு போடுகிறது. உலகம் உங்களை பார்த்து கை தட்டி சிரிக்காதா? மன நிலை பாதித்தவர்தான் இதுவரை கொல்கத்தா நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார் என்பதை பரப்புரை செய்ய ஆரம்பித்து இருக்கிறீர்களா? அப்படியே அவர் மன நலம் பாதித்தவர் என்று நீங்கள் பொய்யாக ஒரு சான்றதழ் வாங்கினால், இதுவரை அவர் கொடுத்த தீர்ப்பின் உண்மை தன்மை குறித்து கேள்வி எழுப்பப்படாதா?

நீதிபதி கர்ணனின் நடவடிக்கையை சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர,அவரை மனநிலை பாதித்தவர் என்று இந்த அளவிற்கு சொல்ல முடிகிறது என்றால், இதற்கு சாதி துவேஷம் தானே காரணம்.

கர்ணனின் கருத்தினை ஊடகங்கள் போடக் கூடாது என்று எப்படி உச்ச நீதிமன்றம் சொல்லலாம்? இது நீதிமன்ற எமர்ஜென்சி என்பேன். இந்திய அரசியல் சாசனம் பிரிவு 19 கருத்து சுதந்திரம் குறித்து பேசப்பட்டு இருக்கிறது. உச்ச நீதிமன்றமே அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படுகிறதா?

தலித் சமூகத்தை சேர்ந்த ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியை பிடிக்க பெரிய போலீஸ் படையே வந்து உள்ளது. அவர் என்ன தேச விரோதியா? இல்லை… குஜராத்தில் கலவரம் செய்து கொலைகள் செய்த குற்றவாளியா?

இது ஸ்ரீரங்க கருவறை அய்யருக்கும் முனியாண்டி கோவில் பூசாரிக்கும் நடக்கும் சண்டை.

நீதியைத்தான் இழிவுபடுத்த கூடாது. நீதிபதிகளை அல்ல. ஆக, நீங்கள் தவறு செய்தால் உங்களை விமர்சிக்க எங்களுக்கு உரிமையும் கடமையும் உண்டு. நாங்கள் விமர்சிப்பது உச்ச நீதிமன்றத்தை அல்ல. அதன் நீதிபதிகளை. நீங்கள் அரசர்கள் அல்ல. நீதி வழங்கும் மக்களின் பணியாளர்கள். இதை எப்போது நீங்கள் புரிந்து கொள்வீர்கள்?

EVIDENCE KATHIR