நோட்டு தட்டுப்பாடு: ரிலையன்ஸ் பேரங்காடியும், அண்ணாச்சி பலசரக்கு கடையும்!

வழக்கம்போல் ரிலையன்ஸில் பொருட்களை வாங்கிவிட்டு கேஷ் கவுண்டரில் நின்றுகொண்டிருந்தேன். இரண்டு மூன்று முறை டெபிட் கார்டை தேய்த்து சோர்ந்து போன பணியாளர், “சர்வர் ப்ராப்ளம் சார் எந்த கவுண்டர்லயும் கார்ட் ஸ்வைப் பண்ண முடியல கேஷ் வச்சிருக்கவங்க மட்டும் நில்லுங்க” என்றார்.

“ரெண்டாயிரம் நோட்டா இருக்கே, அதையாவது வாங்கிக்குவீங்களா? “

“சில்லற இருக்காது சார். 1500 ரூவாக்கு மேல பில் போடுற மாதிரி பர்ச்சேஸ் பண்ணா சேஞ்ச்க்கு ட்ரை பண்றேன். இல்லனா பொருட்களை அங்க வச்சிட்டு போங்க. ஒரு மணி நேரம் கழிச்சு வந்து பாருங்க, சர்வர் ப்ராபளம் சால்வ் ஆச்சுன்னா வாங்கிட்டு போங்க.”

எனக்குப் பின்னால் நின்ற பெரியவர், “சார், என்கிட்ட பழைய 500 ரூவா நோட்டு இருக்கு. அதையாவது வாங்கிக்குவீங்களா?” என்றார்.

“இல்ல சார். அதெல்லாம் வாங்க மாட்டோம்னு என்ட்ரன்ஸ்லேயே போர்டு வச்சிருக்கோமே, பாக்கலியா?”

மணி இரவு ஒன்பது ஆகியிருந்தது. இன்னும் ஒரு மணி நேரம் கழித்து ரிலையன்ஸ் திறந்திருக்குமா என்பதே சந்தேகம்தான். இதில் சர்வரும் சரியாகி இருக்க வேண்டும். நாளை காலைத் தேவைக்கான சில அத்தியாவசியப் பொருட்களை இன்றே வாங்கி ஆக வேண்டிய கட்டாயம் வேறு. வேறு ஏதேனும் கடையில் முயற்சிக்கலாம் என்றாலும், பத்து நாட்களாக கிடைக்காத சில்லறை இப்போது மட்டும் கிடைத்து விடவா போகிறது?

வீட்டுக்கருகில் இருக்கும் அண்ணாச்சி கடைக்கு வழக்கமாக நான் அதிகம் செல்வதில்லை. இருந்தபோதிலும் ஒரு முறை அங்கும் முயற்சிக்கலாமே என்று முடிவு செய்து, அண்ணாச்சி கடைக்குச் சென்றேன்.

இரண்டாயிரம் ரூபாய் விசயத்தை முதலில் சொன்னால் அண்ணாச்சி சில்லறை இல்லை என்று சொல்லி விடுவாரோ என்ற தயக்கத்தில் தேவையான பொருட்களை வாங்கிய பின்னர் இரண்டாயிரம் ரூபாய் நோட்டைக் கொடுத்தேன்.

“ரெண்டாயிரத்துக்கு எல்லாம் சில்றை இல்ல சார். வேண்ணா, பழைய 500 ரூவா நோட்டுக்கூட குடுங்க, வாங்கிக்கிறேன்.”

” சரி, பராவாயில்ல அண்ணாச்சி. எங்கிட்ட வேற பணம் இல்ல. இந்தாங்க, இந்த பொருள எடுத்துக்கங்க.”

“ஏன் சார் அப்டி சொல்லுதிய?  நீங்க மொதத் தெருல நாலாவது ப்ளாட்லதான இருக்கிய. வெள்ளம் வந்தப்பெல்லாம் எல்லாருக்கும் அங்க இங்கன்னு ஓடி ஓடி வேல செய்தியளே. இந்தாங்க பிடிங்க, எல்லாப் பொருளையும் எடுத்துட்டுப் போங்க. அப்புறமா பணத்த குடுங்க. நீங்க என்ன எம் பணத்த குடுக்காம ஊர விட்டா ஓடிப்போகப் போறீய? அவசர செலவுக்கு எதும் ரூவா வச்சிருக்கியளா? நூறு, எரநூறு வேணும்னா நா தரவா? வாங்கிக்கங்க. அப்புறமா குடுங்க சார்.”

தயக்கத்துடனும் புன்னகையுடனும் அண்ணாச்சியிடம் பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தவுடன், மொபைலுக்கு மெஸ்ஸேஜ் ஒன்று வரவே எடுத்துப்பார்த்தேன். Thank you for using Debit Card ending xxxx for Rs.475.00 in CHENNAI at Reliance Fresh …!

வாங்காத பொருளுக்கு என் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்த Relaiance எங்கே!

வாங்கிய பொருளுக்கே பணம் வாங்காமல் கடன் கொடுத்த நம்மூர் அண்ணாச்சி எங்கே!..

*Reliance கடைகளிலும், ஆன்லைனிலும் வெறும் வணிகமும், இலாப நோக்கமும் மட்டும்தான் இருக்கும்!

ஆனால், நம் மக்களின் கடைகளில் மட்டும்தான் வணிகம், இலாபம் தாண்டி, வாடிக்கையாளருக்கும், வணிகருக்கும் இடையே ஒரு அன்பு கலந்த உயிரோட்டமான உணர்வுபூர்வமான உறவு இருக்கும்!

PARAM PARAMESWARAN