மோடியை அகற்றினாலும் இவர்கள் வேறொரு கேடியை கொண்டு வருவார்கள்!

கடந்த சில வாரங்களில் மூன்று கூட்டங்களை கடக்க நேரிட்டது. மூன்றும் ஒரே வகை சார்ந்தவை.

‍‍‍‍‍‍ ‍‍முதல் கூட்டம்:

ஜப்பான் வாழ் இந்தியர்கள் மத்தியில் மோடி பேசுகையில், “மகளுக்கு கல்யாணமா…? கையிலதான் இப்போ காசு இல்லையே!” என்கிற ரீதியில் பணத்துக்கு அல்லாடும் மக்களை கிண்டல் செய்கிறார். அதற்கு கூடியிருந்த கூட்டம் கைதட்டி சிரித்து ரசிக்கிறது.

இரண்டாவது கூட்டம்:

ஒரு இசை விழாவை தொடங்கி வைத்து பேசும் மோடி, “என்னை பாட சொல்லாததற்கு நன்றி. நான் பாடியிருந்தால் இங்கு வந்திருப்பவர்கள் அனைவரும் டிக்கெட்டை கொடுத்துவிட்டு, காசை திரும்ப கொடுக்கும்படி கேட்பார்கள். அதுவும் நூறு ரூபாய் நோட்டுகளாக கேட்பார்கள்” என சொல்கிறார். அந்த கூட்டமும் சிரித்து மகிழ்கிறது.

மூன்றாவது கூட்டம்:

இந்த வார ‘நீயா நானா’வுக்கு வந்திருந்த கூட்டம்! ஒருவர், “விவசாயிகள் தான் கருப்பு பணத்துக்கு காரணம்” என்கிறார். மற்றொருவர், “சிறுவியாபாரிகள் வியாபாரத்தை விட்டுவிட்டு வங்கி வாசலில் சென்று நிற்க வேண்டுமென்றால் நின்றுதான் ஆக வேண்டும்” என அகங்காரத்துடன் பேசுகிறார்.

நம் நாட்டில் மோடி பிரச்சினை அல்ல. மேலே சொன்ன மக்கள் பிரிவுதான் பிரச்சினை. இந்த மக்கள் உருவாகியிருக்கும் சூழலின் விளைவு மட்டும்தான் மோடி. இவர்களின் இந்த சிந்தனைக்கான சூழல் நீடிக்கும்வரை மோடியை அகற்றினாலும் வேறொரு கேடியை கொண்டு வருவார்கள்.

ஆனால், ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள்?

செல்லா நோட்டு நடவடிக்கையில் அம்பானிகள், அதானிகள் என மோடிக்கு நேரடி ஆதாயம் இருக்கும். பாஜக மற்றும் இன்னபிற கட்சியினருக்கு கூட நோட்டு மாற்றம், கமிஷன், money laundering என ஏதேனும் இருக்கும். தொலைக்காட்சி விவாதங்கள் போன்ற பிராபல்யம் என சில சமூக ஆர்வலர்களுக்கான ஆதாயம் இருக்கும். ஆனால், இவற்றை எல்லாம் பார்த்து கைதட்டி ஆதரிக்கும் கும்பலுக்கு நயா பைசா கூட பிரயோஜனம் இல்லை. அப்புறமும் ஏன்?

முதலாளித்துவ வலதுசாரி அரசியல் தரும் குறுகிய கண்ணோட்ட வன்மமாக இருக்கலாம். அல்லது அப்படியான அரசியல் பேசுபவர்களாக தங்களை அடையாளம் காட்டி கொள்வதுதான் வளர்ச்சி என நினைத்து பேசுபவர்களாக இருக்கலாம். சில வருடங்களுக்கு முன் ஒரு முறை, ஏதோ ஒரு சமூக பிரச்சினை ஏற்படுத்திய ஆத்திரத்தில் நிலைப்பதிவுகள் பல எழுதி பதிவேற்றி கொண்டிருந்தேன். அநேகமாக கூடங்குளம் பிரச்சினையாக இருக்க வேண்டும். என்னுடன் பணிபுரிந்த ஒரு நண்பர் தொடர்பு கொண்டு “இப்படியெல்லாம் எழுதாதே” என அறிவுறுத்தினார். “ஏன்?” என கேட்டதற்கு, “நாம எல்லாம் elite. இப்படியெல்லாம் பேசக்கூடாது” என்றார். The so called elite mentality!

அடுத்த மனநிலை, முழு அறியாமை! இந்த ரகம் சார்ந்தவரிடம் நம் நாட்டில் இருக்கும் பிரச்சினைகளுக்கு காரணங்கள் என சில பொதுவான கருத்துகளை காண முடியும். “கடுமையான தண்டனைகள் இல்லாமை”, “சர்வாதிகார ஆட்சிதான் சிறந்தது”, “சிலவற்றை அடைய சிலவற்றை இழக்கலாம்”, “ஏழைகள் உழைக்காதவர்கள்”, “சர்வைவல் ஆஃப் தெ ஃபிட்டஸ்ட்” போன்றவை.

மிக எளிய compassion உணர்வை கூட எப்படி இவர்கள் புறக்கணிக்கிறார்கள் என்பதை கவனித்தால் பெருத்த ஆச்சரியம் ஏற்படும். சமூக அக்கறை என்பதெல்லாம் இவர்களை பொறுத்தவரை ஆபத்தான விஷயங்கள். சரியாக சொன்னால் தன்னலம் சார்ந்த சிந்தனை – self centred thinking!

இந்த மனப்போக்கு நிலப்பிரபுத்துவ சுரண்டலின் நீட்சியாக வந்து முதலாளித்துவ வளர்ச்சியின் பலனாக விளைந்தது என சொல்லலாம். அதாவது அடுத்தவரை மிதித்து நசுக்குவதுதான் இயல்பான வாழ்க்கைமுறை என நினைக்கும் மனப்போக்கு! அது இயல்பல்ல என சொல்லுவதற்கான populist உதாரண புருஷர்கள் உலகமயமாக்கலுக்கு பின் நமக்கு வாய்க்காமல் போனதுதான் நாட்டுக்கு கேடு ஆனது. அல்லது அப்படி வாய்த்தும் முதலாளித்துவத்துக்கு அச்சுறுத்தலாக இருந்தபடியால் ஊடகங்கள், அரசுகள், குடும்பங்கள், மதங்கள் என அனைத்து நிறுவனங்களும் கவனமாக இருட்டடிப்பு செய்ததாகத்தான் இருக்க வேண்டும்.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி. இந்த மனப்போக்கு ஆபத்தானது. பிற்போக்கானது. அதனால்தான் மோடி இங்கும், ட்ரம்ப் அங்கும் ஆட்சி அமைக்க முடிகிறது. உலக நாடுகளில் பிற்போக்கு தலைதூக்குகிறது என்றால், அந்த நாட்டின் பொருளாதார உற்பத்தி முறையும் அதன் விளைவான கலை, பண்பாட்டு அசைவுகளும் அதற்கு இடம் கொடுக்கிறது என்று அர்த்தம். அமெரிக்காவிலும் இந்தியாவிலும் இருப்பது முதலாளித்துவ உற்பத்தி முறை. அதிலும் அந்த முறை, படுபாதாளத்தில் கிடக்கையில் மக்கள் கவனம் சிதறடிக்கப்பட வேண்டியது கட்டாயம் ஆகிறது. பிற்போக்கு அதற்கு பயன்படுகிறது.

இப்படியான சதித்திட்டங்களின் தூதர்களாகத்தான் மேற்கூறிய கும்பல் செயல்படுகிறது. இந்த கும்பல் இயங்குவதற்கான சூழல் நீடிக்கும்வரை இங்கு இனி எதுவும் ஆபத்துதான்.

Dark Knight என்று ஒரு bat man series படம்! அதில் பேட்மேனுடைய சமூக அக்கறையை, அதற்கான நியாயங்களை, அவற்றின் fragility-ஐ வில்லனான ஜோக்கர் பரிகசித்துக்கொண்டே இருப்பான். அந்த தாழ்வுணர்ச்சியாலேயே பேட்மேன் தோற்றுக்கொண்டே இருப்பான். அப்போது பேட் மேனின் உதவியாளன் ஆல்பிரட் இவ்வாறு சொல்வான்:

“Because some men aren’t looking for anything logical, like money. They can’t be bought, bullied, reasoned, or negotiated with. Some men just want to watch the world burn” என்று.

மேலே சொன்ன மக்கள் பகுதி இத்தகையவர்தாம். They just want to watch the world burn. இந்த மக்கள் இயங்குவதற்கான சூழல் இருக்கும்வரை, இந்த உலகம் எரிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கும்!

RAJASANGEETHAN JOHN