“கருணாநிதி விழாவுக்கு பாஜக.வினரை அழைக்க மாட்டோம்”: மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 60 ஆண்டுகளாக தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வருகிறார். இதனை கொண்டாடும் விதமாக, கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழாவை, அவரது பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி பிரமாண்டமாக நடத்த தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இவ்விழாவில் கலந்துகொள்ள வருமாறு சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார், பரூக் அப்துல்லா, பினராயி விஜயன் உள்ளிட்ட தேசிய தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வினருக்கும், மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க.வினருக்கும் அழைப்பு அனுப்பப்படவில்லை.

இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், “கருணாநிதி அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சியினருடனும் நட்பாக இருப்பவர். அவர் சம்பந்தப்பட்ட விழாவுக்கு எங்களை அழைக்காதது வருத்தம் அளிக்கிறது” என்று கூறியிருந்தார். மேலும், “அரசியல் கட்சிகளின் தலைவர்களை எல்லாம் பாஜகவுக்கு எதிராக திமுக ஒன்றிணைக்கிறது” என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு பதிலளிக்கும் வகையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அரசியல் கட்சிகளின் தலைவர்களை எல்லாம் பாஜகவுக்கு எதிராக திமுக ஒன்றிணைக்கிறது என்று பாஜக தலைவர்கள் சொல்கிறார்கள். இது பற்றி கேட்பதற்கான தகுதி பாஜகவினருக்கு இல்லை.

அவர்களை மட்டம் தட்டிப் பேசுவதாக யாரும் கருத வேண்டாம். காரணம் என்னவென்றால், திராவிட இயக்கங்களை ஒழிப்பதுதான் எங்களுடைய முதல் வேலை என்று அவர்களே தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

இப்படி சொல்பவர்களை அழைத்து வந்து தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழா நிகழ்ச்சி மேடையில் உட்கார வைத்து அவர்களுக்கு தர்ம சங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்த நாங்கள் தயாராக இல்லை.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

 

Read previous post:
0a1a
இது ஸ்ரீரங்க கருவறை அய்யருக்கும் முனியாண்டி கோவில் பூசாரிக்கும் நடக்கும் சண்டை!

சகிப்புத்தன்மை குறித்து நமது இறையாண்மையில் ஆழமாக பேசப்பட்டு இருக்கிறது. இறையாண்மை என்பது நீதியின் ஆன்மாவோடு சம்மந்தப்பட்டது. நீதியில் கறார் தன்மை எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு

Close