லென்ஸ் – விமர்சனம்

இயக்குனர் வெற்றிமாறனோ, அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘கிராஸ் ரூட் கம்பெனி’யோ ஒரு திரைப்படத்தில் சம்பந்தப்பட்டிருந்தால், அந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்று கண்ணை மூடிக்கொண்டு உறுதியாகச் சொல்லிவிடலாம். உதாரணம் – ‘ஆடுகளம்’, ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’. இந்த வரிசையில் இப்போது வெளிவந்திருக்கிறது ‘லென்ஸ்’.

சில வாரங்களுக்குமுன், சுனாமியாய் தாக்கி, சமூக வலைத்தளங்களை புரட்டிப்போட்டு அலறவிட்ட ‘சுசிலீக்ஸ்’ விவகாரம் உங்களுக்கு நினைவிருக்கும். பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்திலிருந்து, திரையுலக பிரபலங்கள் பலரது நிர்வாண மற்றும் கலவியல் சார்ந்த படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பையும், பலத்த சர்ச்சையையும் ஏற்படுத்தின. இத்தகைய இன்றைய தமிழ்ச்சூழலில் வெற்றிமாறன் வாங்கி வெளியிட்டுள்ள ‘லென்ஸ்’ திரைப்படம் மிக மிக முக்கியமான படம்; இண்டர்நெட்டை பயன்படுத்தும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

ஒரு ஆன்லைன் செக்ஸ் அடிமைக்கும், ஒரு ஹேக்கரும் இடையே, இண்டர்நெட் வழியே, ஸ்கைப் தொழில்நுட்பம் மூலம் நடக்கும் உரையாடல் (வீடியோ சாட்) தான் ‘லென்ஸ்’ படக்கதை.

படத்தின் ஆரம்ப காட்சி. இரவு நேரம். ஓர் அறையின் மங்கலான வெளிச்சத்தில், லேப்டாப் முன் தனிமையில் அமர்ந்து ஏதோ செய்துகொண்டிருக்கிறான், ஐ.டி. புரஃபொஷனல் அரவிந்த் (ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்). அவன் இன்னும் படுக்க வராததால் எரிச்சலடையும் அவனது அழகிய மனைவி ஸ்வாதி (மியா கோஷல்), “என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க?” என்று கோபமாய் குரல் கொடுக்கிறாள். “அமெரிக்க கிளைண்ட். நைட்ல தான் ஒர்க் பண்ண முடியும், நீ போய் தூங்கு” என்று பதில் குரல் கொடுக்கும் அரவிந்த், நடிகர் சல்மான் கானின் முகம் இருக்கும் முகமூடியை எடுத்து தன் முகத்தில் மாட்டிக்கொண்டு, ஆடை களைந்து, லேப்டாப் முன் நிர்வாணமாக நிற்க, அவனுடன் வீடியோ சாட் செய்யும் ஜூலி என்ற பெண்ணும் அவனைப் போலவே ஒரு முகமூடி அணிந்து நிர்வாணமாக லேப்டாப் திரையில் காட்சி கொடுக்க, ‘என்னடா நடக்குது இங்கே?’ என திகைத்து பேச்சற்றுப் போகிறோம் நாம்.

மறுநாள் காலை. தூங்கி எழுந்ததுமே லேப்டாப்பை திறந்து வீடியோ சாட் செய்ய ஆரம்பிக்கிறான் அரவிந்த். அப்போது ‘நிக்கி’ என்ற பெயர் தென்படுகிறது. அது பெண் என நினைத்துக்கொண்டு, அந்த நபருடன் அரவிந்த் வீடியோ சாட் செய்ய துவங்குகிறான். ஆனால், அது பெண் அல்ல, ஆண் என்பது சற்று நேரத்தில் தெரிந்துவிடுகிறது. திரையில் தோன்றும் அந்த ஆண் (ஆனந்த்சாமி), “நான் தற்கொலை செய்துகொள்ள போகிறேன். அதை நீ லைவ்வாக பார்க்கணும்” என்று சொல்லி அதிர்ச்சி தருகிறான். “முடியாது” என்று கூறி இணைப்பை துண்டிக்க முயலுகிறான் அரவிந்த். அப்போது, முதல்நாள் இரவு அவன் நடத்திய நிர்வாண சாட் வீடியோவை காட்டும் எதிர்முனை ஆண், “என் தற்கொலையை பாக்குறியா? அல்லது இதை நெட்டில் ஏற்றிவிடவா?” என பிளாக்மெயில் செய்கிறான். தன்னுடைய ஆபாச வீடியோக்களை இவன் ஹேக் செய்து வைத்திருக்கிறான் என்பதை உணர்ந்து பதறும் அரவிந்த், “நீ யார்? உனக்கும், ஜூலிக்கும் என்ன சம்பந்தம்? அவள் உன் மனைவியா?” என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்கிறான். “உன் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லுகிறேன்” என ஆரம்பிக்கிறான் எதிர்முனை ஆண்…

யோகன் என்ற பெயர் கொண்ட அந்த எதிர்முனை ஆண் யார்? அவன் ஏன் அரவிந்தை ‘ஆன்லைன் பிணைக்கைதி’யாக பிடித்து வைத்திருக்கிறான்? அவனுக்கும், அரவிந்துக்கும் என்ன பிரச்சனை? அவன் ஏன் தற்கொலை செய்ய நினைக்கிறான்? அந்த தற்கொலையை அரவிந்த் பார்க்க வேண்டும் என ஏன் மிரட்டுகிறான்? என்பன போன்ற அனைத்துக் கேள்விகளுக்கும் யாருமே எதிர்பார்க்க முடியாத திடுக்கிடும் திருப்பங்களுடனும், த்ரில்லான விறுவிறுப்புடனும், அழுத்தமான சோஷியல் மெசேஜூடனும் பரபரப்பாக விடையளிக்கிறது மீதிக்கதை.

படத்தின் முதல் பாதி முழுவதும் ‘ஆன்லைன் செக்ஸ் அடிமை’ அரவிந்த் லேப்டாப் முன் அமர்ந்து பதற்றதுடன் பேச, எதிர்முனையில் இருக்கும் ‘ஹேக்கர்’ யோகன் மிகவும் நிதானமாக, அதேநேரத்தில் சொல்வதற்கு கனமான் ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன என்பதை உணர்த்தும் அழுத்தமான பார்வையுடன் பேசுகிறான். இவர்கள் இருவரது உரையாடல் மட்டுமே முதல்பாதி படமாக இருந்தாலும், அந்த உணர்வே நமக்கு ஏற்படாத வகையில் படம் படு சுவாரஸ்யமாக நகர்கிறது.

‘ஆன்லைன் செக்ஸ் அடிமை’ அரவிந்த் கதாபாத்திரத்தில் இப்படத்தின் இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் நடித்திருக்கிறார். லேப்டாப் முன் அமர்ந்து கிளுகிளுப்பாக சாட்டிங் செய்வது, ஹேக்கரிடம் வகையாக மாட்டிக்கொண்டு தவிப்பது என அனைத்துக் காட்சிகளிலும் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

‘ஹேக்கர்’ யோகனாக மொட்டைத் தலையுடன் வரும் ஆனந்த்சாமி, அலட்டிக்கொள்ளாமல் வசனம் பேசினாலும், அவரது உருளும் கண்கள் நம்மை அச்சுறுத்துகின்றன. அழுது ஆர்ப்பாட்டம் செய்யாமல் அவர் விவரிக்கும் சம்பவங்கள் நம் ரத்தத்தை உறையச் செய்கின்றன.

இரண்டாம் பாதியில் யோகனின் காதல் மனைவி ஏஞ்சலாக வரும் புதுமுகம் அஷ்வதி லால், அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியாக வரும் அவர், தங்களது முதலிரவு காட்சி ரகசியமாக படமாக்கப்பட்டு, நெட்டில் பதிவேற்றம் செய்யப்பட்டதை அறிந்து துடிதுடிப்பதாகட்டும், தனது துயரத்தை அட்டைகளில் எழுதி அவற்றை ஒவ்வொன்றாக காட்டி வீடியோ பதிவு செய்வதாகட்டும், லென்ஸ் முன் லைவ்வாக தற்கொலை செய்வதாகட்டும்… மிகவும் சிக்கலான கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்து நம் இதயத்தில் இடம் பிடித்துவிடுகிறார்.

கட்டுக்கோப்பான திரைக்கதைக்கு எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷின் இசையும் உயிர் கொடுத்திருக்கின்றன. சற்று சறுக்கினால்கூட ஆபாசமாகிவிடக் கூடிய காட்சிகளை மிகுந்த எச்சரிக்கையுடனும் பொறுப்புணர்வுடனும் படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் கதிருக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

பிறரது அந்தரங்கமான விஷயங்களை ரகசியமாக பதிவு செய்வது, அவற்றை நெட்டில் பதிவேற்றம் செய்வது போன்ற கேடுகெட்ட செயல்களால் அப்பாவிகளின் வாழ்க்கை எப்படி நாசமாகிறது என்பதை, இக்கால ‘ஹைடெக் யுக’ பிரச்சனையை, அழுத்தமாக, அதேநேரத்தில் அழகியலுடன் சொல்லியிருக்கும் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

“அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்; எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்” என்று ‘அடிமைப்பெண்’ பட பாடல் வரிகள் எச்சரிப்பதையே, இந்த ‘லென்ஸ்’ படமும் ஒவ்வொரு தம்பதியரையும் பார்த்து எச்சரிக்கிறது.

எச்சரிக்கை! எச்சரிக்கை!!

‘லென்ஸ்’ – கட்டாயம் பார்க்க வேண்டிய படம்!