எய்தவன் – விமர்சனம்

மேற்படிப்புக்கு கல்லூரிகளில் இடம் பிடிக்க மாணவ – மாணவிகளும், அவர்களது பெற்றோர்களும் ஆலாய் பறந்துகொண்டிருக்கும் இந்த மே மாதத்தில், அவர்கள் கயவர்கள் விரிக்கும் மோசடி வலையில் சிக்கிவிடக் கூடாது என எச்சரிப்பதற்காகவும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் அதிரடி ஆக்ஷன் படமாக வெளிவந்திருக்கிறது ‘எய்தவன்’.

நாயகன் கலையரசனின் தங்கைக்கு மருத்துவராக வேண்டும் என்பது லட்சியம். ஆனால், பிளஸ்-2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தும், கவுன்சிலிங்கில் அவருக்கு அரசு மருத்துவக் க்ல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. தனியார் கல்லூரிகளோ, இடைத்தரகர்கள் மூலம் கொள்ளை விலைக்கு சீட்களை விற்பனை செய்துகொண்டிருக்கின்றன.

தன் தங்கையை எப்படியாவது மருத்துவப் படிப்பில் சேர்த்துவிட வேண்டும் என்ற உறுதியில் படாதபாடு பட்டு பணம் புரட்டும் கலையரசன், அந்த பணத்தைக் கொடுத்து, வில்லன் கவுதம் நடத்தும் மருத்துவக் கல்லூரியில் தங்கையை சேர்த்துவிடுகிறார். ஆனால், அக்கல்லூரியில் சேர்ந்த சில நாட்களிலேயே கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு விடுகிறது.

இதனால் கலையரசனின் தங்கை உள்ளிட்ட முதலாம் ஆண்டு மாணவர்களின் எதிர்காலம் பெரிய கேள்விக்குறி ஆகிறது. சீட் வாங்குவதற்காக அவர்கள் கொடுத்த பெருந்தொகையும் திரும்பக் கிடைக்காது என்கிற நிலை. ஆவேசம் கொள்ளும் பாதிக்கப்பட்ட மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக போராட தொடங்குகிறார்கள். இந்த போராட்டத்தில் தன்னையும் இணைத்துக்கொள்ளும் கலையரசன், தனது தங்கைகாக மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களின் பணத்தையும் மீட்க முயற்சி செய்கிறார்.

இந்நிலையில், ரவுடி ஒருவனது கார் கலையரசனின் தங்கை மேல் பயங்கரமாக மோத, தங்கை உயிரிழக்கிறார். அந்த ரவுடியை மருத்துவக் கல்லூரி முதலாளி கொலை செய்ய முயற்சிக்கிறான். அவனிடம் இருந்து அந்த ரவுடியை காப்பாற்றும் கலையரசன், அந்த ரவுடிக்கு அடைக்கலம் கொடுத்து, அவனை பகடை காயாக பயன்படுத்தி கல்லூரி முதலாளியிடம் இருந்து பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை திரும்ப பெற திட்டமிடுகிறார். இதில் கலையரசன் வெற்றி பெற்றாரா, இல்லையா என்பது படத்தின் மீதிக்கதை.

நாயகனாக வரும் கலையரசனுக்கு இந்த படத்தின் அருமையான வேடம். அதை கச்சிதமாக உள்வாங்கி, நல்ல அண்ணனாகவும், சமூக அக்கறையுள்ள இளைஞனாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

போலீஸ் அதிகாரியாக வரும் நாயகி சாத்னா டைட்டஸ், தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை ஒழுங்காக செய்திருக்கிறார். அவரது நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது.

மருத்துவக் கல்லூரி நடத்தும் வில்லனாக வரும் கவுதம் பணக்கார மிடுக்குடன் மிரட்டியிருக்கிறார். தனது கல்லூரியை நல்ல நிலைக்கு கொண்டு வர எந்த எல்லைக்கும் போக தயாராக இருக்கும் அவரது கதாபாத்திரம் மிரட்டல்.

கல்லூரி நிர்வாகத்தின் கையாளாக வரும் ஆடுகளம் நரேன் கதாபாத்திரம், ‘வேந்தர் மூவிஸ்’ மதனை நினைவூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இப்பாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார் நரேன்.

அறிமுக இயக்குனர் சக்தி ராஜசேகரன், உண்மைச் சம்பவம் ஒன்றை கருவாக வைத்துக்கொண்டு, ஊடகங்களில் வெளியான சில செய்திகளை கிளை கதைகளாகக் கொண்டு, ‘எய்தவன்’ என்ற சுவாரஸ்யமான திரைக்கதையை அமைத்திருக்கிறார். கல்வியின் தற்போதைய நிலை, ஏமாறும் மாணவர்கள் குறித்து படத்தில் பேசப்படும் வசனங்கள் அனைத்தும் கவனிக்க வைக்கின்றன. இயக்குனர் சக்தி ராஜசேகரன் அடுத்தடுத்து இதுபோன்ற நல்ல படங்களைத் தருவார் என்ற நம்பிக்கையை இந்த படம் ஏற்படுத்தியிருக்கிறது.

பிரேம் குமாரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.  பார்த்தீவ் பார்கின் பின்னணி இசை சிறப்பாக அமைந்துள்ளது. சாண்ட்ரா எமி ஆடியிருக்கும் ‘சிங்காரி’ என்ற குத்துப்பாடல் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் ரசிக்கும்படி உள்ளது.

‘எய்தவன்’ – அவசியம் பார்க்க வேண்டிய நல்லவன்!