காத்திருப்போர் பட்டியலில் ஜார்ஜ்: சென்னையின் புதிய ஆணையர் கரன் சின்கா!

சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த எஸ்.ஜார்ஜ் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள கரன் சின்கா உடனடியாக பொறுப்பேற்றார்.

ஆர்.கே நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த தொகுதி சென்னை காவல் ஆணையர் கட்டுப்பாட்டில் வருகிறது. ‘மாநகர காவல் ஆணையராக இருக்கும் ஜார்ஜ் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்புள்ளது. எனவே, அவரை மாற்ற வேண்டும்’ என தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு அளித்திருந்தார். மேலும், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோருக்கும் மனு அனுப்பினார்.

இந்நிலையில், எஸ்.ஜார்ஜ் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். புதிய காவல் ஆணையராக சிபிசிஐடி கூடுதல் டிஜிபியாக இருந்த கரன் சின்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய ஆணையராக நியமிக்கப்பட்ட கரன் சின்கா, உடனடியாக காவல் ஆணையர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு கூடுதல் காவல் ஆணையர்கள் அபய்குமார் சிங், சங்கர், சாரங்கன், தாமரைக் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னதாக நிருபர்களிடம் கரன் சின்கா கூறும்போது, ‘‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சுமுகமாகவும், அமைதியாகவும் நடக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்து சவால்களையும் சமாளிக்கும் வகையில் காவல் துறையில் திறமையான அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் பார்த்துக் கொள்வர். சென்னையில் சட்டம், ஒழுங்கு நிலை நாட்டப்படும். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், சிக்னல்களை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

சென்னை மாநகரின் 105-வது காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள கரன் சின்கா, உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். தற்போது கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் உள்ள அவர், லஞ்ச ஒழிப்பு, சிவில் சப்ளை சிஐடி உட்பட காவல் துறையின் பல பிரிவுகளில் பொறுப்புகளை வகித்துள்ளார்.