ரஜினி யாழ்ப்பாணம் பயணம் ரத்து: தமிழக அரசியல்வாதிகள் மீது லைக்கா சரமாரி குற்றச்சாட்டு!

லைக்கா நிறுவனம் பற்றி “வதந்திகளை பரப்புவதன் ஊடாக தமக்குரிய லாபத்தை பெற முனைபவர்களுக்கு சார்பாக, சில தமிழக அரசியல்வாதிகள் திரும்ப திரும்ப பேசுவது கண்டிக்கப்பட வேண்டியது. அத்துடன் எமது போட்டி வியாபாரிகளிடம் ஏதாவதொரு வகையில் கடமைப்பட்ட காரணத்தினால் தான் இப்படியான ஆதாரமற்ற, உண்மையற்ற வதந்திகளை இவர்கள் முன்வைக்கிறார்கள்” என்று லைக்கா நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது:

லைக்கா நிறுவனத்தின் துணைத்தலைவர்  பிரேம் சிவசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இலங்கை வடக்கு மாகாணம் வவுனியா பிரதேசத்தின் சின்ன அடம்பன் கிராமம் மற்றும் புளியங்குளம் பகுதியில், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் சார்பில்,  “லைக்கா ஞானம் கிராமம்” உருவாக்கப்பட்டது. இந்தக் கிராமத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட 150 வீடுகளை லைக்கா ஞானம் அறக்கட்டளை உருவாக்கியிருந்தது.

3 தசாப்த்தங்களுக்கு மேலாக இடம் பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்ந்த 150 குடும்பங்களுக்கு இந்த வீடுகளை கையளிக்கும் வைபவம், எதிர்வரும் சித்திரை மாதம்  10ஆம் திகதி நடைபெற இருக்கிறது. இந்த உன்னதமான நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தோம். அந்த வகையில் இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை சந்திப்பதற்கும் அவர் விருப்பம் தெரிவித்திருந்தார். இதற்கமைவாக எதிர்வரும் 9ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவிருந்த பிரமாண்டமான நிகழ்வில் கலந்து கொள்வதற்கும், புதிதாக உருவாக்கப்பட்ட வீடுகளுக்கான உறுதிப் பத்திரங்களை வழங்கி வைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான, ஞானம் அறக்கட்டளையின், அடுத்தக்கட்ட உதவித் திட்டங்களை அறிவிக்கவும் திட்டமிட்டு இருந்ததோடு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டு நாட்கள் வடக்கு கிழக்கில் தங்கியிருக்கவும் விருப்பம் கொண்டிருந்தார்.  இதன் தொடர்ச்சியாக, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு பிரதேசங்களுக்கும் நேரில் சென்று மக்களை சந்திக்கவும், ஆவலாக இருந்தார்.

ஆனால் அவரின் இலங்கைப் பயணம் குறித்து, தற்போது சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், ஒரு அறக்கட்டளையின் உதவித்திட்ட செயற்பாடுகளை, தமது அரசியல் சுய லாபத்திற்காக பயன்படுத்துகிற ஒரு அநாகரீக சூழல் உருவாகியிருக்கிறது. அது மட்டும் அல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை தர்மசங்கடமான நிலைக்கு உட்படுத்தும் நிலை வலிந்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அசௌகரியங்களை தவிர்க்கும் முகமாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித் திட்டங்கள், இவற்றின் ஊடாக தடைப்படக் கூடாது என்பதற்காகவும், 9ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற இருந்த அனைத்து நிகழ்வுகளும் இரத்துச் செய்யப்படுவதோடு சூப்பர் ஸ்டார்   ரஜினிகாந்தின்  இலங்கைப் பயணமும் ரத்துச் செய்யப்படுகிறது என்பதனை மிகவும் மனவேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

எனினும், திட்டமிட்டபடி பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பினையும், விருப்பத்தினையும், பூர்த்தி செய்யும் நோக்கத்துடன், எதிர்வரும்  10ஆம் தேதி லைக்கா ஞானம் கிராமம், உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டு வீடுகள் அனைத்தும் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் என்பதனையும் லைக்கா ஞானம் அறக்கட்டளை  தெரிவித்துக்கொள்கிறது.

இதேவேளை இந்த தருணத்தில் சில விடயங்களை உலக வாழ் தமிழ் மக்களுக்கும், விசேடமாக தமிழகத்தின் எம் தொப்புள்கொடி உறவுகளுக்கும் சில முக்கிய விடயங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

எங்களுக்கும் முன்னைய ஆட்சியளர்களான ராஜபக்ஸக்களுக்கும் தொடர்புகள் இருப்பதாக வதந்திகளையும், புனைகதைகளையும் உருவாக்கியவர்கள் எமது வர்த்தக சாம்ராட்சியத்திற்கு எதிரான  போட்டியாளர்கள் என்பது உலகறிந்த விடயம்.

இப்படியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்பதோடு எந்தவொரு ஆதாரமுமற்றவை என்பதனை எமது வாழ்வும், எமது செயற்பாடுகளும் நிருப்பித்துக்கொண்டு இருக்கின்றன. அதனால் எமது வர்த்தக செயற்பாடுகளோடும், சமூகம் சார்ந்த முன்னுதாரண திட்டங்களோடும் ஆரோக்கியமான போட்டிகளை உருவாக்க முடியாதவர்கள் முதுகில் குத்தும் நடவடிக்கைகளை தொடர்கின்றனர்.

இப்படியான வதந்திகளை பரப்புவதன் ஊடாக தமக்குரிய லாபத்தை பெற முனைபவர்களுக்கு சார்பாக, சில தமிழக அரசியல்வாதிகள் திரும்ப திரும்ப பேசுவது கண்டிக்கப்பட வேண்டியது. அத்துடன் எமது போட்டி வியாபாரிகளிடம் ஏதாவதொரு வகையில் கடமைப்பட்ட காரணத்தினால்தான் இப்படியான ஆதாரமற்ற, உண்மையற்ற வதந்திகளை இவர்கள் முன்வைக்கிறார்கள் என்பதனை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இத்தகைய அரசியல்வாதிகள் இன்று எமது தாயகத்தில் அல்லலுறும் தமிழ் மக்களின் வாழ்வுக்கும் அவர்களின் எதிர்கால நன்மைக்கும் எதுவும் செய்ததில்லை. ஆயினும் லைக்கா ஞானம் அறக்கட்டளையின் நோக்கம் எல்லாம் அரசியல் தவிர்த்து அவர்களுடைய வாழ்வாதாரத்துக்கும் நிரந்தர உறைவிடத்துக்கும் உதவி செய்வதே ஆகும்.

இதேவேளை ஈழத்தமிழ் மக்களுக்கு நீண்டகால அரசியல் தீர்வை உருவாக்கிக் கொடுப்பதற்கு பல அரசியல் தலைவர்கள் கடுமையான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதனை நாம் மனதார வரவேற்கிறோம். ஆனால் இன்றைய நிலையில், அனைத்தையும் இழந்து அல்லலுறும் மக்களுக்கு உதவுகின்ற எம்முடைய முயற்சிகளை நின்மதியாக செய்ய விடுங்கள் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.