கீழடி அகழ்வாய்வை மத்திய பாஜக அரசு புறக்கணிப்பது ஏன்?

பண்டைய தமிழர் நாகரிகம், வைகை கரையில் இருப்பதற்கும், சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் தான் என்பதற்கும் பல்வேறு தரவுகள் இருக்கின்றன. ஒரிசா மாநிலத்தில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த திரு.பாலகிருஷ்ணன் IAS அவர்களின் நூல் இதை நிறுவ முக்கியமான சான்றுகளை எடுத்து வைக்கிறது. சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் வைகைக்கரை பண்பாட்டிற்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கலாம் என்பதற்கும் பல்வேறு ஆதாரங்கள் கிடைத்தன. இந்திய அரசின் தொல்லியல் துறையும், பல்வேறு தொல்பொருள் அறிஞர்களும் பல்வேறு தரவுகளை தேடியதில் சுமார் 213 இடங்களில் வைகைக்கரையில் தொல் பொருட்கள் கிடைத்தன. அதில் குறிப்பாக கீழடியை தேர்வு செய்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அகழ்வாராய்ச்சியை தொடங்கினர். பலருக்கும் ஆச்சரியம் அளிக்கக்கூடிய வகையில் பல்வேறு தொல் பொருட்கள் கீழடியில் கிடைத்தன.

அதுவும் சென்ற ஆண்டு ஒரு தொழிற்சாலையின் படிமங்கள் கிடைத்தன. தமிழகத்தில் இது வரை நமக்கு கிடைத்தது எல்லாம் பழமையான முதுமக்கள் தாழிதான் (இடுகாடுகள் தான் கிடைத்தது), பூம்புகார் பற்றி நமக்கு தெரிந்தாலும் கடல் அகழ்வாராய்ச்சி செய்யாததால் நம்மால் அதை உறுதி செய்ய முடியவில்லை. இதுவரை செய்த ஆராய்ச்சியில் கீழடியில் மட்டுமே மக்கள் வாழ்ந்த பகுதி கிடைத்துள்ளது, அதுவும் அந்த மக்கள் செய்த தொழிலின் எச்சங்களும் கிடைத்திருக்கின்றன..

இதைப்போன்ற அகழ்வாராய்ச்சிகள் குறைந்த பட்சம் பத்து வருடங்கள் நடைபெற்றால்தான் முக்கியமான முடிவுகளும் தரவுகளும் கிடைக்கும். இதுவரை 5,000 க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கீழடியில் கிடைத்திருக்கின்றன, அவற்றில் நிறைய கார்பன் டேட்டிங் ஆய்விற்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும், ஆனால் இரண்டே இரண்டு பொருட்களை மட்டுமே அனுப்பியிருக்கிறார்கள். அந்த இரண்டு பொருளும் கி.மு 2 ஆம் நூற்றாண்டை குறிக்கின்றன, சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பழைய மதுரை இதுவாக இருக்கலாம் என்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இங்கேதான் சிக்கலே ஆரம்பிக்கிறது, மத்தியில் ஆளும் இந்துத்துவ அரசு, வேத மரபுதான் பண்டைய மரபு, சரஸ்வதி நதி நாகரிகம்தான் பண்டைய நாகரீகம் என்று நினைத்து கொண்டு பல வேலைகளை செய்து வந்த நிலையில், தமிழர்களின் தொல் நாகரிகத்தின் சுவடுகள் அவர்களை அச்சுறுத்த தொடங்கின. அதனால் பொதுவாக அக்டோபர் மாதம் அடுத்த கட்ட ஆய்வுகளுக்கு கொடுத்திருக்க வேண்டிய அனுமதியை தராமல் இழுத்தடித்தது.. இதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு இயக்கங்களும், எழுத்தாளர் சுவே உட்பட பல்வேறு எழுத்தாளர்களும், வரலாற்று பண்பாட்டு ஆய்வாளர்களும், தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமை கட்சி, விடுதலை சிறுத்தைகள் பா.ம.க, ம.ம.க, என அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்த போது, மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் என்ன பதில் சொன்னார் தெரியுமா?, “நாங்கள் இடைக்கால அறிக்கையை எதிர்பாத்திருக்கிறோம், அது வந்தவுடன் அடுத்தகட்ட ஆய்வுகளுக்கு அனுமதி கொடுத்துவிடுவோம்” என்றார்.

நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக திரு.TKR அவர்களும் திருச்சி சிவா அவர்களும் எழுப்பிய கேள்விகளுக்கு இதேதான் பதிலாக கொடுக்கப்பட்டது. இதில் எனக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. , இதே நிலைப்பாடுதான் இந்தியா முழுவதும் நடைபெறும் அகழ்வாராய்ச்சிக்கு மத்திய அரசு எடுத்துள்ளதா என்பதை அறிய, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், டோலாவீரா, யூரின் போன்ற இடங்களில் நடைபெறும் அகழ்வாராய்ச்சிகளில் இதைப்போன்ற இடைக்கால அறிக்கைகள் பெறப்பட்டுள்ளனவா என்றும் அப்படி இருந்தால் அந்த இடைக்கால அறிக்கையின் நகல் ஒன்றை தருமாறும் கேட்டு விண்ணப்பித்தேன். இப்போது பிஹார் மாநிலத்தில் யூரின் என்கிற இடத்தில இருந்து பதில் வந்துள்ளது அந்த மாதிரி “இடைக்கால அறிக்கை” எதுவும் இங்கே இல்லையென்றும் ஆனாலும் இந்த வருடமும் அகழ்வாராய்ச்சிகள் நடைபெறுகின்றன என்றும் அந்த பதிலில் உள்ளது. கீழடியில் மட்டும் இடைக்கால அறிக்கை கொடுத்தால்தான் புது அனுமதி தருவோம் என்று சொல்லி, இப்போது அறிக்கையை வாங்கிக்கொண்டு அனுமதி கொடுத்துள்ளார்கள், அதுவும் மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தை பார்த்த பிறகு, எதற்கு வம்பு என்று கொடுத்துள்ளார்கள். அப்படி கொடுத்த பிறகு கீழடியில் அகழ்வாராச்சியை தலைமை தாங்கி நடத்திய “அமர்நாத் ராமகிருஷ்ணா” அவர்களை அசாம் மாநிலத்திற்கு தூக்கியடித்துள்ளார்கள், அவ்வளவு வஞ்சம்.

கீழடியில் கிடைத்த அனைத்தும் சங்க காலத்தின் முற்பகுதியைச் சார்ந்தவை .இவற்றுள் ஆன்மீகம் மற்றும் மதம் தொடர்பானவை ஒன்று கூட இல்லை. கிடைத்துள்ளனவற்றில் ஏதேனும் ஒரு பொருளைக் காட்டி ‘இதுதான் ராமன் பயன்படுத்திய வில்’ என்று கதை விடுவதும் இங்கு நடக்காது. இந்த காரணங்கள் போதும், ஆளும் மத்திய அரசு கீழடியைப் புறக்கணிப்பதற்கு. ஒரு புறம், நம் முன் வரலாற்று உண்மைகளை சுமந்து நிற்கும் கீழடியை ‘மறைக்க முயல்வது”, இன்னொரு பக்கம் ,இல்லாத ‘ராமர் பாலம்’,என்னும் பொய்யை நிலைநாட்ட ‘வரலாற்று’க்குழுவை அமைப்பது, இது தான் இந்துத்துவத்தின் ஆதிக்கம், இந்த மண்ணில் பழமையான நாகரீகம் தமிழர் நாகரீகம்தான் என்பதை உலகிற்கு எடுத்துரைக்க கீழடி தொடர்பான விசயங்களை வெளிகொண்டுவருவோம்.

SUNDAR RAJAN

POOVULAGIN NANBARGAL