முதுக்குத் தண்டை சில்லிட வைக்கும் ‘அச்சம்’ தான் மோடி, அமித் ஷா ‘டெக்னிக்’

ரெய்டுகள்’ காங்கிரஸ் செய்ததன் தொடர்ச்சிதான்.ஆனால் இதில் ஒரு ‘வன்மம்’ தெரியவே செய்கிறது. சோனியா காலத்து காங். நோக்கம் தங்களைக் ‘ காப்பாற்றிக்’ கொள்வது, ராகுலின் ‘புனிதத்தை’ நிறுவுவது.

இப்போது எதிர்க்கட்சிகள் “உடைப்பு, சிதைப்பு, அழிப்பு” எனும் மூர்க்கம் துலக்கமாய்த் தெரிகிறது. இதுவும் இந்திராகாந்தி மாடல்தான். அன்று முன்னிறுத்தப்பட்டது ‘தனி நபர்’ அதிகாரம். விளைவு, நாட்டின் மக்களாட்சி செயல்பாடு ‘அவசர நிலை’யால் ஆபத்திற்குள்ளானது. இன்றும் அதேதான். “அதிகாரம்” கேள்விகளற்ற, பதில் சொல்ல வேண்டாத அதிகாரம். இந்த அதிகாரத்தின் இன்னொரு கொடுர முகம், ‘ இந்துத்துவம்”. இதன் நோக்கம் அதிகாரத்தைக் கொண்டு பெரும் ”அடையாளங்களின்” அழித்தொழிப்புகளை நிகழ்த்துவது.

அன்று மிச்சமாய் சில கருத்தியல் நிலைபாடுகளும், அரசியல் தலைமைகளும் இருந்தன. அதைவிட ஊடகம் (பெரும்பாலும் நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள்) உயிர்ப்போடு இருந்தன. கோயாங்கோ போன்ற ஊடக முதலாளிகளே “பத்திரிக்கை அறம்” சார்ந்து நின்றனர்.

இன்று தேசிய மற்றும் மாநில அரசியல் தலைமைகள் வலுவற்ற நிலையில் (ராகுல் நீண்ட விடுப்பில் சென்றிருக்கிறாரா?. இந்த விடுமுறை நாட்களில் ‘ சார்ஜ்’ எடுத்து மேலவையில் பேசிய பேச்சுக்கு இன்று சிதம்பரத்திற்கு ஆப்பு. அது சரி, விதைத்ததைத் தானே அறுக்க முடியும்) ஊடகங்கள் முற்றிலும் ‘ காட்சி வடிவிலாகி’ ”தேசிய” வியாபாரத்தில் மூழ்கி முத்துக் குளிக்கின்றனர்.

”ஊழல்” எனும் ஒற்றைச் சொல் மகுடிக்கு ‘ஆடுகிறது” பொது சமூகம். தினசரி ஊழல் குற்றச்சாட்டு அடுக்கப்படுகிறது. யார் மீது? எதிர்க்கட்சிகள் மீது. மம்தா, கேஜ்ரிவால், லாலு, மாயவதி, அகிலேஷ், முலாயம், சித்தராமய்யா, திமுக, அதிமுக என அனைத்துத் தரப்பும் குறியில்.

ஊடகங்கள் 24/7 கொண்டாட்டமாய்ச் செய்கிறார்கள் எதிர்க்கட்சிகள் மீதான குற்றச்சாட்டை. போதாக்குறைக்கு அதில் ஆக்கப்பூர்வமாக ‘ஒழித்து வைக்கப்பட்ட கேமராக்கள்’ எதிரிக்கட்சிகளை ‘ ரவுண்டு கட்டுகிறது’.

மோடி சர்க்கார் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. மத்தியில் முற்றிலும் “ஊழல்” அறவே இல்லாத ஆட்சி நடப்பதான பொய்மையைக் கட்டமைப்பதில் களப்பணியாற்றுகின்றனர் ஊடகங்கள். ஒரு அர்னாப் இன்று நவிகா, ராகுல் என்று பெரும் கூட்டமாகியிருக்கிறது.. இந்த “குலைப்பு” ஊடகங்கள் வெட்கமின்றி நாள் முழுதும் எதிரிக்கட்சிகளை வீழ்த்துவதற்காகவே நிகழ்ச்சி நட்த்துகின்றனர்

. இவர்களின் விளம்பர வருவாய் ஒரு நாளில் ஆய்வு செய்யப்பட்டாலே மோடி அரசின் “ தில்லாலங்கடி” வேலைகள் வெளிவந்து, நவிகாவும், அர்னாப்மும் கம்பி எண்ணுவது உறுதி. ஆரம்பத்தில் ‘ பல லட்ச ரூபாய் கோட்டு’ , அமித் ஷா, அதானி என்று ஆரம்பித்த ஏனைய மீடியாக்களும், மாநிலத் தேர்தல் வெற்றிகளுக்குப் பின்னர் தொடர்ந்து பம்முவது ஏன்? ஊடக எதிர்ப்புப் பேச்சுகளும் தொலைக்காட்சி வாதப்பிரதிவாதங்களாக குறுகி விட்டிருக்கிறது.

முதுக்குத்தண்டைச் சில்லிட வைக்கும் “அச்சம்” தான் மோடி, அமித் ஷா “ டெக்னிக்”. அது களம் காணும் விதம் பல தினுசு. 2019 தேர்தலைக் கணக்கு வைத்து காய் நகர்த்தப்படுவதற்கு லல்லு, நிதிஷை பிரிக்க நடக்கும் நாடகமே சாட்சி. அடுத்து ஒரிசாவின் நவின் பட்நாயக். அதற்கென்ன வழி என்னவென்பதை ஷா தீர்மானித்திருப்பார்.

ஊடகங்கள் நம்பகமானவையாய் இல்லாமல் போன சமூகம் அதல பாதாள வீழ்ச்சிக்கு தயாராகிவிட்டது. அதுவும் “ ஊழல்” மகுடியை ஊதியபடி நடக்கும் “புனிதர்” மோடியின் பின்னால் விண்ணதிர “ தேசிய” கோஷமெழுப்பியபடி தொடரும் கூட்டமாக.

– ஒரு தேச விரோதி. .

SUBAGUNA RAJAN