“நாட்டு நாட்டு” பாடல் ஒரு சுமாரான பாடல் தானே! அதற்கு ஏன் இத்தனை வரவேற்பு?

ஆஸ்கர் வென்றே விட்டது ‘நாட்டு நாட்டு’ பாடல். இது குறித்து பேசுவதில் சில குழப்பங்கள் எனக்கிருக்கிறது. பலருக்கும் அது இருக்கக் கூடும் என்பதால் எழுதுகிறேன்.

அந்த குழப்பம் நிச்சயம் RRR ஒரு மசாலா படம் என்பதாலோ, அதை தூக்கிப் பிடித்தால் நம் ரசனை கேள்விக்குட்படுத்தப்படுமோ என்பதால் அல்ல. ஆஸ்கர் வென்ற பல படங்கள் அவ்வூரின் மசாலா சினிமாக்களே. மாறாக இந்த குழப்பம் நாட்டு நாட்டு பாடல் சார்ந்தே உள்ளது.

வந்த புதிதில் அடிக்கடி கேட்கும் பாடலாய் இருந்திருந்தாலும், கோல்டன் குளோப், ஆஸ்கர் என வெல்லும்போது, இதுபோன்ற எண்ணற்ற பாடல்கள் இந்தியாவில், தெலுங்கில், மலையாளத்தில், தமிழில் இருக்கிறதே. அவற்றையெல்லாம் தாண்டி இப்பாடலில் என்ன இருக்கிறது என்கிற தீரா குழப்பம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒருவேளை இந்த இசையின் தன்மை மேலைநாட்டில் ஒருவித உளக்கிளர்ச்சியை ஏற்படுத்துகிறதோ?

இந்திய திரையிசையின் தரத்தின்படியே பார்த்தாலும் கூட ‘நாட்டு நாட்டு’ பாடல் ஒரு சுமாரான பாடல்தானே. அதற்கு ஏன் இத்தனை வரவேற்பு, அங்கீகாரம், விருதுகள் போன்ற கேள்விகள் ஒருபுறம் எழுந்தாலும், ஆஸ்கர் வென்ற மசாலா படங்களைப் போல, இதுவரை ஆஸ்கர் வென்ற பல பாடல்கள் கூட அந்தந்த நாடுகளின் சுமாரான படைப்புகளாக இருக்கக்கூடும் யார் கண்டார் என்ற எண்ணமும் உடனெழுவதால், இப்போதைக்கு ‘நாட்டு நாட்டு’ குறித்த ஆராய்ச்சியை விட்டுவிட்டு, அதன் மூலம் இந்தியாவிற்கு, தென்னிந்தியாவிற்கு கிடைத்த உலகளாவிய பெருமிதத்தை மட்டும் கொண்டாடுவதாய் திட்டம். இந்தியாவின் ஆஸ்கர் கனவுகளில் பெரும் பாய்ச்சல் இன்று கிடைத்த இரு விருதுகளும்.

வாழ்த்துகள் RRR குழு & இசையமைப்பாளர் கீரவாணி

JEYACHANDRA HASMI