கவிக்கோ வெற்றி பெற்றுக் கொண்டே இருப்பார்!

பள்ளிக்காலத்தில் எல்லாம் இந்த தொகுப்பைத்தான் கொண்டாடி களிப்போம். காதல், நட்பு, உறவு என எது தோற்றாலும் “டேய் நான் பித்தன் டா” என்று திரிவோம். சமூக பொதுமைகளுக்குள் ஒவ்வாத ஒரு நபரை அடையாளப்படுத்தி, உண்மையிலேயே அவன் நம் அனைவரை காட்டிலும் எத்தனை உண்மையானவன் என பேசி இருப்பார் கவிக்கோ அப்துல் ரகுமான்.

இன்று அவர் இல்லை. ஆனால் கவிதைகள் இருக்கின்றன. எழுத்தின் வெற்றி அதுதான். எழுதியவனுக்கும் வெற்றி அதுதான். கவிக்கோ வெற்றி பெற்றுக்கொண்டே இருப்பார்.

‘பித்தன்’ ‘பித்தன்’ என்ற
கூச்சல்களையும்
கற்களையும்
அவன் மீது
எறிந்துகொண்டிருந்தார்கள்.
அவன் சிரித்துக்கொண்டிருந்தான்.
அவன் காயங்களும்
சிரித்துக்கொண்டிருந்தன.
அப்படித்தான் அவனை
முதன் முதலாகப் பார்த்தேன்.
நீ பித்தனா? என்று கேட்டேன்.
நீ கல்லா? என்றான்.
நான் காயப்பட்டேன்.
நீ எப்படிப்
பித்தன் ஆனாய்? என்றேன்.
ஒருமுறை தற்செயலாய்
உண்மையைப்
பின் பக்கமாய்ப்
பார்த்துவிட்டேன்.
அப்போது
சகல இரவுகளுக்குமான
சூரியோதயம் நடந்தது.
திரைகள் விலகின.
எதிர்ப்பதங்கள்
கைகோத்து
நடனமாடக்கண்டேன்.
முரண்கள்
முகமூடியைக் கழற்றிவிட்டு
முத்தமிடக் கண்டேன்.
காலமும் இடமும் மறைய
எல்லாம்
ஒன்றாவதைக் கண்டேன்.
உண்டும் இல்லையும்
அர்த்தம் இழந்தன.
அந்தத் தருணத்தில்
அறிவுச் சிறையிலிருந்து
நான் விடுதலை ஆனேன்.
என்றான்.
அவர்கள் ஏன் உன்மீது
கல்லெறிகிறார்கள்? என்றேன்.
நான் அவர்களுடைய
அந்தரங்கத்தின் கண்ணாடி.
அதனால்தான் என்னை
உடைக்கப் பார்க்கிறார்கள் என்றான்.
ஏன்?என்றேன்.
அவர்கள்
வெளிப்படுவதற்கு
பயப்படுகிறார்கள்.
அவர்கள்
வேடங்களில்
வசிக்கிறார்கள்.
அது அவர்களுக்கு
வசதியாக இருக்கிறது.
வேடம் கலைந்தால்
மேடை போய்விடும்.
நான் அவர்களுடைய
அம்பலம்.
கவனி!
அம்பலம்
என் மேடையல்ல.
நடனம்.
அதனால்தான் என்னைப்
பித்தன் என்கிறார்கள் என்றான்.
நான் உடைந்தேன்.
காலம் காலமாய்த்
திரண்டிருந்த சீழ்
வடிந்தது.

(கவிக்கோ அப்துல் ரகுமானின் ‘பித்தன்’ கவிதை தொகுப்பிலிருந்து)

RAJASANGEETHAN JOHN

Read previous post:
0
கவிக்கோ அப்துல் ரகுமான் இயற்கை எய்தினார்

கவிக்கோ அப்துல் ரகுமான் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 80. சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை

Close