ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் இடம்பெற்ற “ நாட்டு நாட்டு” பாடலுக்கு ஆஸ்கார் விருது!

ராஜமவுலி இயக்கத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜய் தேவ்கன் உட்பட பலர் நடித்த திரைப்படம் ‘ஆர் ஆர் ஆர்’. சுதந்திரப் போராட்ட வீரர்களான சீதாராம ராஜு, கொமரம் பீம் ஆகியோரின் நட்பை மையமாகக் கொண்டு உருவான இந்தப் பீரியட் படத்துக்கு கீரவாணி இசை அமைத்திருந்தார். நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த பாடலுக்கான விருதை சமீபத்தில் வென்றது.

பல்வேறு விருதுகளைப் பெற்று வரும் இப்படம் ஆஸ்கர் விருதுக்கும் அனுப்பப்பட்டது. அதன்படி, ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘‘நாட்டு நாட்டு’’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. சிறந்த ஒரிஜனல் பாடல் பிரிவில் இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கர் விருதை வென்றார். அப்போது ராஜமவுலி, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

இசையமைப்பாளர் கீரவாணியுடன், பாடலை எழுதிய சந்திரபோஸும் ஆஸ்கர் விருது வென்றார். விருதுவென்ற இசையமைப்பாளர் கீரவாணி பேசும்போது, ராஜமவுலிக்கு பாட்டு பாடியபடியே நன்றி தெரிவித்தார். மேலும் ஆர்ஆர்ஆர் இந்தியாவின் பெருமை என்றும் குறிப்பிட்டார்.