“இது தான் நான்! இது என் வாழ்க்கை!” – திலீபன் மகேந்திரன்
சுய பரிசோதனை.
“திலீபன் மகேந்திரனா? அவன் கொடிய எரிச்ச தேச துரோகிதானே…?” ”திலீபன் மகேந்திரன் தேசிய கொடியை எரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.” இந்த மாதிரிதான் என்னை பத்திய செய்தி முதல்ல தெரியும்.
நான் கார்ப்ரேட் கம்பெனியில data analyst-ஆக வேல செஞ்சிட்டு இருந்தேன். பெரியாரியமும், கொஞ்ச முற்போக்கு புத்தகங்களும் படிச்சேன். ஏற்கனவே சமுதாயத்துல நடக்குற பிரச்சனையின் மேல வெறுப்பு இருந்துச்சி. வேலைய விட்டுட்டு போராட்ட களத்துக்கு வந்துட்டேன்.
அப்பா படகு செய்யிற ஆசாரி; கூலி தொழிலாளி.
இங்கதான் என் பயணம் தொடர்கிறது.
தமிழர்களுக்கான அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டேன். எந்த இயக்கம் மக்களுக்காக போராட்டம் நடத்தினாலும் கலந்துகொள்வேன். பல நாட்கள் “ஒரு நாள் மண்டப காவலில்” இருந்தேன்.
2015 ஆகஸ்ட். ஈழத்தமிழர் இனவழிப்பு செய்த இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை அமெரிக்க அரசு கைவிட கோரி கெடு விதித்தோம். அவர்கள் எங்களை உதாசீனப்படுத்தினார்கள். அதனால் பொதுக்கழிப்பிடத்துல இருந்து மனுச சாணிய எடுத்து அமெரிக்க தூதரகத்திலும் KFC-லும் அடித்து சேதப்படுத்தினோம். முதல்முறையாக 15 நாள் புழல் சிறைக்காவலில் இருந்தேன்..
பிணையில் வெளியே வந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தேன். பின்பும் போராட்டங்களில் கலந்துகொண்டேன்.
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் ஏற்ப்பட்ட சென்னை வெள்ளத்தில் முடிந்த வரை முதலில் இறங்கி உயிர்களை காப்பாற்றினோம்.
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சேரி மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களையும், உடைகளையும் உதவிகளையும் வழங்கினோம். என்னை நம்பி பல நபர்கள் உதவிப் பொருட்களை வழங்கினார்கள். அதை உரிய நபர்களிடம் கொண்டு சேர்த்தேன்.
தொடர்ந்து ஒரு மாதம் சென்னையில் உள்ள மக்களுக்கு உதவினேன். பிறகு மழையால் பாதிக்கப்பட்ட கடலூர் சென்றேன்.
அங்கு மூன்று கிராமங்களைச் சேர்ந்த 350 குடும்பங்களுக்கு உதவினோம். (ஒரு குடும்பத்துக்கு = ஒரு ஸ்டவ்வு+5 கிலோ அரிசி+சமையல் எண்ணெய்+ குழந்தைகளுக்கு பாடப்புத்தகங்கள்)
அங்கு 10, +2 படிக்கும் மாணவர்களுக்கு நோட்ஸும், பிற உதவிப் பொருட்களும் கொடுத்தும் உதவினேன். அவர்கள் அனைவரும் இந்த வருடம் தேர்ச்சி பெற்றனர்.
கால் இல்லாத இரண்டு பெண்களுக்கு சைக்கிள் வாங்கி கொடுத்தேன். அந்த ஊர் முழுக்க செடிகள் நட்டோம்.
சென்னை திரும்பியதும் மழை நிவாரணப் பொருட்களில் மீந்து போன நூற்றுக்கணக்கான போர்வைகளை தினமும் சைக்கிளில் வைத்து, நடைபாதையில் உறங்கும் மக்களுக்கு 10 நாட்கள் தொடர்ந்து போத்திவிட்டேன்.
ஜனவரி 29, 2016. முத்துக்குமார் தீக்குளித்து ஈகை செய்த நாளில், உழைக்கும் மக்களுக்கு எதிரான பார்ப்பனிய இந்தியத்தை எதிர்க்கும் வகையில் இந்திய கொடியை கொளுத்தினேன். கொளுத்திய அன்றைய தினமும் இரவு நடைபாதையில் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கினேன்.
கொடியை எரித்த வழக்கில் கைது செய்யப்பட்டு,. லத்தியால் ஒரு நாள் முழுக்க தாக்கப்பட்டு, என் இடக்கையின் மூன்று விரல்கள் பின்பக்கமாக இழுத்து உடைக்கப்பட்டு, இரும்புக் கம்பி கொண்டு என் இடது கை உடைக்கப்பட்டு, 35 நாள் புழல் உயர்பாதுகாப்பு சிறையில் அடைப்பட்டேன்.
35வது நாள் சிறைக்காவலில் இருந்து பிணியில் விடுதலை செய்யப்பட்டேன். தொடர்ந்து 9 மாதம் வரை நீதிமன்றத்தில் கையெழுத்துட்டுவந்தேன்
பின்பு குமிடிப்பூண்டி அகதிகள் முகாமில், போலீசாரால் கால் முறிக்கப்பட்ட ஈழத்தமிழர் டில்லிபாபு. தமிழக அரசியல்வாதிகள் யாரும் கண்டுக்கொள்ளாத நிலையில் நான் அந்த விஷ்யத்தை கையிலெடுத்தேன். 4 மாதம் அவர்களுடனே தங்கி உதவி செய்தேன். அவர்களுக்கு இதுவரை ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் தோழர்கள் மூலம் நிதி உதவி செய்தேன் -அவர்களுடைய வங்கி கணக்கிலயே. 8 மாதம் வரை அவர்கள் எனது முயற்சினாலேயே குடும்பத்தை நடத்தினார்கள்.
அண்ணா சித்த மருத்தவமனையில் இருந்த ஆறுமுகம் என்பவர் தரையிலேயே மலம் கழித்துவிட்டார் என்று கூறி, அவரை நடு இரவில் குண்டுக்கட்டாகத் தூக்கி ரோட்டில் வீசினார்கள். அவரை ஒருநாள் முழுக்க பாதுகாப்பாக வைத்து, அடுத்த நாள் அண்ணா ஆர்ச் சாலையில் நாங்கள் வெறும் 4 பேர் சேர்ந்து மறியல் செய்தோம். அதன் விளைவு, ஆறுமுகம் குணமாகும்வரை அந்த மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும் என்று போலீசாரே நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டனர். அவருக்கு வாக்கிங் ஸ்டிக் வாங்கிக் கொடுத்து, தற்போது பாதுகாப்பத்தில் உள்ளார்.
அடுத்து சவுதி அரேபியாவில் சிக்கித் தவித்த லிசா என்ற பெண்ணை 2 மாதங்களில் அங்கிருந்து மீட்டு தமிழகம் கொண்டுவந்தேன். அடுத்து, செல்வி என்பவரையும் கொண்டு வரச் செய்தேன். இதற்கு நான் எவ்வளவு சிரமப்பட்டேன் என்பதை எனது முகநூல் நண்பர்கள் அறிவார்கள்.
கல்பாக்கத்தில் இருக்கும் ஒரு சிறு கிராம இருளர் சமுதாய பழங்குடி மாணவர்கள் 5 பேரை முதல் தலைமுறையாக தொழிற்கல்வியில் இந்த வருடம் படிக்க வைத்தேன்.
மேட்டுகுடியை சேர்ந்த ‘ஆடி கார் ஐஸ்வர்யா’வால் காரில் ஏத்தி கொல்லப்பட்ட கூலித்தொழிலாளி முனுசாமியின் குழந்தை திவ்யாவுக்கு பிறந்தநாளுக்கு பரிசுகள் வழங்கி, என்னால் முடிந்த சில உதவிகள் செய்தேன்.
இந்த ஒரு வருடம் மட்டும் நடந்த நிகழ்வுகள் இவை. இந்த வருடம் நான் செய்த பல காரியங்களில் சிலவற்றை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.
இதில் நான் பல இழப்புகளையும் சந்தித்து இருக்கிறேன்.
கொடி எரிப்பு வழக்கில் எனது சொந்த உழைப்பில் வாங்கிய Pulsar Bike, நூற்றுக்கணக்கான முற்போக்கு புத்தகங்கள், எனது Mobile, எனது புதுத்துணிகள் இவை யாவும் போலீசாரால் கைப்பற்றப்பட்டு கிழிக்கப்பட்டன. கை உடைக்கப்பட்டது. திருச்சி சிறையில் சித்ரவதை செய்யப்பட்டேன்.
ஆனால் 25 வருடம் எனக்கு வெளியில் கிடைக்காத அனுபவம் 70 நாட்கள் சிறையில் கிடைத்தது. தூக்குத்தண்டனை கைதிகள், போராளிகள், தண்டனை கைதிகள் பலரை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. குற்றங்கள், பார்ப்பனிய இந்திய சட்டம், இஸ்லாமிய கைதிகள் அனைத்து அனுபவங்களையும் சிறையில் கற்றுக்கொண்டேன்.
முகநூலுக்கும் எதார்த்தத்திற்கும் மிக பெரிய இடைவெளி உண்டு.. நான் எதார்த்தத்தையே விரும்புகிறேன்.
நான் போராளியோ, பெருச்சாளியோ இல்ல. எனக்கு ஏழைங்களுக்கு உதவுறது புடிக்கும். அவர்களுடனேயே பயணிப்பதும், அவுங்க என்னை பாராட்டுறதும் புடிக்கும். அதனால என்னால முடிஞ்சத பண்றேன்.. இதுவும் ஒரு வகையில சுயநலம் தான்.
இந்த மாதிரி உதவி பண்றதும் முதலாளித்துவ சிந்தனைதான். ரெண்டு பேருக்கு உதவி பண்ணிட்டு, தன்னை பெரிய சமூக ஆர்வலரா காமிச்சிக்கிறது. தாதாக்களும், ரௌடியும், கட்டப்பஞ்சாயத்துகாரர்களும் இதையே தான் செய்கிறார்கள்.
மக்களில் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும் எனில் கம்யூனிச சித்தாந்தமே சிறந்தது..
அமெரிக்காவில் அந்த நாட்டுக்கொடியில் ஜட்டி தைத்துப் போட்டுக்கொண்டாலும் பிரச்சனை இல்லை. ஆனா, சக அமெரிக்கனை மதிக்க வேண்டும். இந்தியாவில் சக இந்தியனை சாதியின் பேரால் 1000 ஆண்டுகள் கக்கூஸ் கழுவ விட்டாலும் பிரச்சனை இல்லை. ஆனால் கொடியை மதிக்க வேண்டும். அதுவும் உழைக்கும் மக்களுக்கு மட்டும் இந்த நிபந்தனை. மோடி, சானியா மிர்சா, ஷாருக்கான், டெல்லி எம்பி, மல்லிகா ஷரவாத் போன்ற மேட்டுக்குடி மக்களுக்கு விதிவிலக்கு.
ஒரு வருட வாழ்க்கை பயணத்தில் என் தகுதியை நான் அறிந்து கொண்டேன். என்னால் எடுத்த காரியத்தில் வெற்றி பெற முடியும் என்று நம்பிக்கை உள்ளது. கொள்கையில் சமரசம் செய்யாமல் இருக்கவும் என்னால் முடிகிறது. இத்துடன் என் பயணத்தை முடிக்கிறேன்.
இதையெல்லாம் வாய்வார்த்தையாய் சொல்வதைக் காட்டிலும், இதை நடைமுறையில் செய்துகாட்டுவது என்பது சுலபமான காரியம் இல்லை என்பதை Facebook மக்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன்.. சொல்லுக்கும் செயலுக்கும் அதிகம் வித்தியாசம் இருக்கு.
ஈசியாக சொல்லிவிடலாம்; ஆனா செயல்…?
நான் என்னை நினைத்து பெருமை கொள்கிறேன். ஒரு இயக்கம் செய்யும் வேலையை தனிஒருவனாக என்னால் செய்ய முடிந்ததை எண்ணி; எந்த சூழ்நிலையையும் என்னால் எதிர்கொள்ள முடியும் என்பதை நினைத்து.
இத்தனையும் செய்தது ஒரு மேட்டுக்குடி ஆளும் வர்க்கத்தை சேர்ந்தவனோ, அல்லது பெரும்பணக்காரனோ அல்ல. ஒரு கூலித்தொழிலாளியின் மகன். proud be a உழைக்கும் வர்க்கம்.
என்னைப் பற்றியான “பொம்பளபொறுக்கி”, “சுயவிளம்பரக்காரன்”, “சோக்காளி” எனும் கேலிச் சொற்களையும், வசவுகளையும் நான் மயிராகக் கூட மதிப்பதில்லை..
ஏனென்றால், இது என் வாழ்க்கை. எனக்கான வாழ்க்கை.
– திலீபன் மகேந்திரன்