“உள்ளே சிவப்பு இருந்தாலும் வெளியே பச்சை வேண்டும் – தர்பூசணி பழம் போல!”

கேரளா பல்கலைக்கழக எஸ்.ஃஎப்.ஐ. (சி.பி,எம். கட்சியின் மாணவர் பிரிவு) தோழர்கள் கூடங்குளம் பிரச்சினை பற்றிப் பேச நேற்று (மார்ச்17) அழைத்திருந்தார்கள்.

இந்தப் பல்கலைக்கழகத்தில்தான் நானும் எம்.ஏ. (ஆங்கிலம்) படித்தேன். எனவே மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு நமது தரப்பு நியாயங்களை, உண்மைகளை எடுத்துச் சொன்னேன். ஏராளமான மாணவர்களும், மாணவிகளும் கலந்துகொண்டு ஆதரித்தனர்.

சுற்றுச்சூழல் துறையைச் சார்ந்த ஒரு பேராசிரியர் மட்டும் (கூடங்குளத்துக்குப் போய் அணுசக்தித் துறையினர் காட்டிய படத்தைப் பார்த்திருக்கிறாராம்; சொன்ன கதைகளைக் கேட்டிருக்கிறாராம்) “உலகிலேயே சிறந்த அணுஉலை” என்றெல்லாம் பிதற்றிக் கொண்டிருந்தார். அவரது மாணவ, மாணவியர், நண்பர்கள் முன்னால் அவரை தரம் தாழ்த்திவிடக் கூடாது என்று முதலில் விட்டுப்பிடித்த நான், பின்னர் வேறு வழியின்றி பிய்த்து எறிந்துவிட்டுத்தான் மேடையிலிருந்து இறங்கினேன்.

பல்கலைக்கழக எஸ்.ஃஎப்.ஐ. தலைவர்கள் சாப்பிட அழைத்துச் சென்றனர். “நிறையப் படியுங்கள், மக்களைச் சந்தியுங்கள், வன்முறையில் இறங்காதீர்கள், தலைவராகுங்கள், பெண்கள் பொதுவாழ்க்கைக்கு வாருங்கள்” என்றெல்லாம் அறிவுரைத்தேன்.

“நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட் போலவே ஏழை எளிய மக்களுக்காகப் பேசுகிறீர்கள். எங்கள் கட்சிக்கு வாருங்கள்” என்று அழைத்தனர்.

“உள்ளே சிவப்பாக இருந்தாலும், அதை தக்கவைக்க, தகவமைக்க வெளியே பச்சை வேண்டும் என்று விரும்புகிறவன் நான், தர்பூசணிப் பழம் போல” என்று சொல்லி விடைபெற்றேன்.

-சுப. உதயகுமாரன்

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்கம்