“சசிகலாவின் தோல்வியும் பன்னீரின் வெற்றியும் தொடங்கும் புள்ளி இதுதான்!”

இப்போதைக்கு சசிகலாவைப் போல பொதுமக்களால் வெறுக்கப்படும் பிறிதொரு அரசியல்வாதி கிடையாது. அதை மிகவும் வெளிப்படையாக பொதுமக்களே வெளிப்படுத்துவதையும் காண ஆச்சர்யமாக இருக்கிறது. முகம் சிறியதாக அச்சிடப்பட்டிருக்கும் போஸ்டர்களிலும் கூட, அதுவும் ஜெயலலிதாவின் முகமும் சசிகலாவின் முகமும் நெருக்கமாக அச்சிடப்பட்டிருக்கும் புகைப்படங்களில் கூட மிகவும் நேர்த்தியாக சசிகலாவின் முகத்தை மட்டும் சேதப்படுத்துகிறார்கள்.

இது உண்மைதான். ஆனால் இந்த உண்மையில் ஒரு பொய் மறைந்திருக்கிறது. அது என்னவென்றால், ‘ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்களின் அபிமானம் பெற்ற தலைவர்கள் கூட மக்களால் வெறுக்கப்பட்டே தான் வருகிறார்கள்’. தனது முதல் ஐந்தாண்டு கால ஆட்சியை நிறைவு செய்து முடித்தபோது ஜெயலலிதாவைப்போல வெறுக்கப்பட்ட ஒரு அரசியல்வாதி கிடையாது. போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோற்கடிக்கப்படுகிறார். பிரச்சாரத்தின்போது அவர் மீது செருப்பு வீசப்படுகிறது. இது வரலாறு.

கருணாநிதி மீதான வெறுப்புக்கு சமீபத்திய உதாரணம், அவரது கடைசி ஐந்தாண்டு கால ஊழல் ஆட்சி. தேர்தலுக்கு ஆறு மாத காலத்துக்கு முன்னால், தனது அரண்மனையில் இருந்து சோம்பல் முறித்துக்கொண்டு வெளியில் வந்த ஜெயலலிதாவை நோக்கி வெள்ளமென பாய்ந்து சென்ற மக்கள், அவரது கையைப் பிடித்து கூட்டி வந்து அரியணையில் அமர வைக்கும் அளவுக்கு கருணாநிதி மீது வெறுப்பு இருந்தது. இதுவும் வரலாறு தான்.

ஆனால், சசிகலா மீது காட்டப்படும் வெறுப்பு என்பது இது எல்லாவற்றிலிருந்தும் முற்றிலும் வேறானது. அவர் இப்போதுதான் வெளிப்படையாக அரசியலுக்கு வருகிறார். நேரடியாக அவரது ‘அரசியல் முடிவுகளால்’ மக்கள் பாதிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், ஜெயலலிதாவின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சி முதல், தற்போது தொடங்கி ஒரு வருடத்தில் பாதியில் விட்டுவிட்டு மறைந்திருக்கும் இந்த ஆட்சி வரை ஜெயலலிதா நடத்திய அரசு குறிப்பிடத்தக்க அளவுக்கு சசிகலாவால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட அரசுதான்.

இந்த ‘ஆதிக்கம்’ என்பதுதான் முக்கியமான கருதுகோள். ஆமாம். ஜெயலலிதா செயல்படுத்திய எந்த மக்கள் நலத் திட்டங்களுக்கும், சசிகலா உரிமை கோரிவிட முடியாது. ஆனால் ஜெயலலிதா அரசாங்கத்தின் எல்லா தீவினைகளுக்கும் அவர் பொறுப்பாக்கப்படுகிறார். இது முழுக்கவும் தவறா? இல்லவே இல்லை. சசிகலா தனது அரசியல் வாழ்வில் அதற்கு பொறுப்பு கூற வேண்டியவர். ஆனால் ஜெயலலிதா சாதித்த எந்த மக்கள் நல அரசியலுக்கும் சசிகலா உரிமை கோரவே முடியாமல் போகிறதே அது ஏன்?

சசிகலா என்றால் ஊழலின் பிம்பம். இந்த ஒற்றைப் பரிமாணத்தின் பின்னேதான் ஜெயலலிதாவின் தேவதை இமேஜ் மறைந்திருக்கிறது. மேலும் நடந்த நல்லவை எதற்காவது சசிகலா உரிமை கோரினால் அது சட்ட விரோதமாகிவிடும். ஏனெனில் சென்ற அரசாங்கங்களில் எல்லாம் ‘நான் இத்தகைய முடிவுகளை எடுக்க உதவினேன்’ என்றோ, ‘ஆலோசனை வழங்கினேன்’ என்றோ அவர் சொல்ல முடியாது. ஏனெனில் அவர் எந்த பொறுப்பிலும் இல்லை. ஜெயலலிதா அவரை அப்படித்தான் வைத்திருந்தார். ஆனால் அதிமுகவின் நிர்வாகிகளுக்கு சசிகலா என்னவாக இருந்தார் என்று தெரியும்.

சசிகலா மிக நுணுக்கமாக தோற்கும் இடம் இது. தணியாத வெறுப்பின் வேர் அங்குதான் இருக்கிறது. இதை சரி செய்துகொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஆனால், சசிகலா அந்தப் பொன்னான வாய்ப்பை அலட்சியத்தால் தவற விட்டார். அது மட்டுமல்லாமல், தனது அகங்காரத்தின் மூலம் அந்தத் தவறை மேலும் பெரிதாக்கி மக்களை அவமதித்தார்.

மக்களை வெறுக்கத் தூண்டியதன் விதையை அவர் தூவிக்கொண்டது சுதாகரன் திருமணத்தில். பிறகு மிரட்டியும், ஏமாற்றியும் வாங்கிப்போட்ட சொத்துகள் தொடங்கி, மிடாஸின் வழியாக ஜாஸ் சினிமாவில் நிலைபெற்றது அந்த வெறுப்பின் நிழல். ஆனால், சசிகலா தம்மை கடும் வெறுப்பிற்கு உரிய நபராக மாற்றிக்கொண்டது ஜெயலலிதா அப்பல்லோவில் வைக்கப்பட்டிருந்த ‘அந்த எழுபத்தைந்து நாட்களில்’ தான். இத்தனை காலமும் அவர் மீது மக்களிடம் சிறுகச் சிறுக உருவாக்கி நிலைபெற்ற வெறுப்பு திரண்டுவந்து அசைக்க முடியாத பாறையைப்போல ஆனது அப்போதுதான்.

ஜெயலலிதாவை மக்களிடம் இருந்து மறைத்து வைத்து எல்லாரையும் கையறு நிலைக்குத் தள்ளியதன் மூலம் இன்று ‘வேலைக்காரி’ என்றும் ‘சூனியக்காரி’ என்றும் அவர் தூற்றப்படுவதற்கு அவரே காரணமாகிப்போனார். மற்ற அரசியல்வாதிகள் சம்பாதித்தது வெறுப்பு என்றால் இவர் சம்பாதித்தது மக்களின் அவமதிப்பிலிருந்து வரும் கசப்பை அடிப்படையாகக் கொண்ட அசூசை.

இந்த வெறுப்புக்கு சசிகலா மட்டும்தான் காரணமா? இல்லை. இந்த விஷயத்தில் செயல்படக்கூடிய மூன்று காரணிகள் உண்டு. ஒன்று ஜெயலலிதாவின் பிம்பம், இரண்டாவது அதை விதந்தோதும் பொதுமக்களின் உளவியல், மூன்றாவது சசிகலாவின் சொந்த ஆகிருதி மற்றும் அவரது விரிந்த கிளைகளுள்ள ஊழல் குடும்பம்.

ஜெயலலிதாவின் நிலைநிறுத்தப்பட்ட பிம்பத்திற்கு சசிகலாவின் மீதான வெறுப்பில் பங்குண்டு. இந்த மனநிலை எளிய மக்களிடம் எவ்வாறு செயல்படுகிறது அது அரசியல் திரட்சிக்கு எவ்வாறு உதவுகிறது என்று பார்க்கலாம். குறிப்பாக ஒரு எளிய மனிதனுக்கு, தனது தெருவில் உள்ள கவுன்சிலரை மதிக்க வேண்டியிருக்கிறது. எம்.எல்.ஏ.வுக்கு பணிய வேண்டியிருக்கிறது. மந்திரிக்கு அஞ்ச வேண்டியிருக்கிறது. ஆனால் இவர்கள் எல்லாம் ஒரே நேரத்தில் ஜெயலலிதாவின் காலில் விழுந்து எழுகிறபோது, ஜெயலலலிதாவின் பிம்பத்தைத் தொழுது மண்டியிடுகிற எளிய மக்களின் மனநிலை, காலில் விழும் அதிகாரமிக்கவர்களை தமக்கு நிகராக வைத்து ஒருவித கானல் இன்பத்தில் திளைக்கிறது.

கடைசி வரை இந்த இன்பத்தை அடித்தட்டு மக்களுக்குக் வழங்கிக்கொண்டே இருந்தவர்கள் எம்ஜியாரும் ஜெயலலிதாவும். அப்படி வழங்கும் தகுதியை அவர்கள் அடைந்ததற்கு அவர்களது சாதி, பளிச்சிடும் அழகு, செலிப்ரிட்டி ஸ்டேடஸ், கடைசி வரை அவர்கள் கைகொண்ட மிடுக்கு எல்லாம் காரணம். எவ்வளவு ஊழல், எவ்வளவு சட்டவிரோத போலிஸ் கொலைகள் என்று தறிகெட்டுத் திரிந்தபோதும் எம்ஜியாரும் ஜெயலலிதாவும் எளிய மக்களால் கொண்டாடப்பட்டதற்கு இந்த உளவியல் பண்புதான் காரணம்.

நீ யாராக, எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கடைசியில் எனது தலைவனுக்கும் தலைவிக்கும் கீழே தான். தீர்ப்பெழுதும் நிலையில் இருப்பவர்கள் அவர்கள்தான். உன்னால் அவர்களை நெருங்கவோ, மீறவோ முடியாது. அந்த கடவுள்களுக்கு எங்கள் மீது அபிமானம் உண்டு. அதனால் எளிய மக்களாகிய நாங்கள் கடவுள்களுடன் ஒன்றாகக் கலந்தவர்கள் என்னும் தொழுகை மனநிலையாக மாறிவிடுகிறது. இந்த இடத்தில் சசிகலாவின் இடம் என்ன? மக்களுக்கு அவர் யார்?

இந்த பின்புலத்தில் வைத்து சசிகலாவின் ஆகிருதியை நாம் மதிப்பிடுவோம். அவர் எம்ஜியாரோ ஜெயலலிதாவோ அல்ல. கலைஞரோ ஸ்டாலினோ அல்ல. சீமானோ வைகோவோ கூட அல்ல. பிறகு அவர் யார்? ஜெயலலிதாவுடன் இருந்தவர். இருந்தவர் என்றால், ஜெயலலிதாவின் அபிமானத்தையும் அன்பையும் பெற்றவரா என்றால், அவசர அவசரமாக பொது உளவியல் அதை மறுத்துப் பேசுகிறது. சசிகலாவை நிந்தித்து தெருவில் நின்று பேசும் கட்சிப் பெண்களிடம் செயல்படும் பெண்களின் உளவியல் அதுதான்.

ஏனெனில் ஜெயலலிதாவுக்கு சசிகலாவின் மீது அபிமானம் உண்டு என்பதை ஏற்றுக்கொண்டால், ஜெயலலிதாவின் ‘தேவதை’ இமேஜுக்கு சேதாரம் வந்துவிடும். சரி வந்துவிட்டுப் போகட்டுமே என்று விடவும் முடியாது. ஏனென்றால் ஜெயலலிதாவைத் தொழுவதற்கு அந்த தேவதை இமேஜ் தேவையாக இருக்கிறது. அவரை நேர்மையாளராக, இரும்புப் பெண்மணியாக உருவகித்துக்கொள்ளும்போது சசிகலாவின் பிம்பம் அதில் உடைப்பை உண்டாக்குகிறது. அதே சமயம் சசிகலாவோ தம்மை அடுத்த ஜெயலலிதாவாக நிறுவிக்கொள்ள முயல்கிறார்.

ஆனால் ஜெயலலிதாவைப் புனிதராக்கித் தொழுகிற பொதுமக்களின் உளவியல், சசிகலாவை நிராகரிக்கவே விரும்புகிறது. இந்த நிராகரிப்பின் பின்னுள்ளது அரசியல் பூர்வமான விமர்சனமா என்றால் இல்லை. ஏனெனில் அவ்வாறு நிராகரிக்கத் தொடங்கினால், அது ஜெயலலிதாவையும் நிராகரிக்கவே வேண்டியிருக்கும். ஆக, அதற்கு இருக்கும ஒரே வழி சசிகலாவை வெறும் ‘வேலைக்காரி’ என்று வரையறுத்துவிடுவதுதான். சசிகலாவை அவமதிக்கும் பொது உளவியலின் புள்ளி இங்கிருந்துதான் விரிகிறது. சமூக ஊடகங்களில் நிறைந்து வழியும் சசிகலா மீதான கேலிகளின் அடிப்படை இதுதான்.

இதை சசிகலா நேர்மையாக எதிர்கொண்டிருக்க முடியுமா…? தனக்கு சாதகமாக மாற்றியிருக்க முடியுமா…? என்றால் முடியும். ஆனால் அவர் அதை அப்பல்லோவில் தொடங்கியிருக்க வேண்டும். ஆம். ஜெயலலிதாவை அவர் மக்களிடம் ஒப்படைத்திருக்க வேண்டும்.

ஜெயலலிதாவுக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை, மிக வெளிப்படையாக அவர் மக்களிடம் பகிர்ந்து கொண்டிருக்க வேண்டும். தம்மை எளிய வேலையாளாக மட்டுமே மக்களின் முன்னால் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் வழியாக மட்டுமே அவர் பொதுமக்களின் உளவியலுடன் நெருங்கியிருக்க முடியும். அங்கிருந்துதான் அவர், ஜெயலலிதா ஆட்சியின் தீவினைகளுக்கு மட்டுமல்ல, அதன் நலன்களுக்கும் கூட தாம் உரிமை கோர முடியும் என்பதை நோக்கி முன்னேறியிருக்க முடியும்.

ஆனால் அவர் மிகப்பெரும் தவறிழைத்தார். தனது இருப்பைத் தானே ஊதிப் பெருக்கி அடுத்த ஜெயலலிதாவாக மக்கள் முன் வைத்து தம்மை மேலும் மேலும் வெறுக்கும் நிலைக்கு மக்களைத் தள்ளினார்.

மருத்துவமனை ரகசியம் முதல், கடற்கரையில் கொண்டு வந்து ஜெயலலிதாவை இருத்தியது வரை, சசிகலாவின் ஆளுமைப் பண்பு ஒரு ‘வேலைக்காரியின்’ அபகரிப்பாக புரிந்து கொள்ளப்பட்டது. அதை ‘சூனியக்காரியின்’ நிலைக்கு மாற்றியது அவரையும் ஜெயலலிதாவின் உடலையும் சுற்றி நின்று கொண்டிருந்த சசிகலாவின் குடும்பம். மக்களிடமிருந்து முழுக்கவும் அவர் அந்நியப்பட்டது அங்குதான்.

இது பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் ஜாக்கெட்டையும், கொண்டையையும், மாற்றிக்கொண்டால் ஜெயலலிதாவாக மாறிவிடலாம் என்று நினைத்து அவர் செயல்பட்டு கேலிப் பொருளாக ஆகிப்போகிறார். இதுதான் சசிகலா தோற்கும் இடம். இந்த இடத்தில்தான் பன்னீரின் வெற்றி தொடங்குகிறது.

ஜெயலலிதா அடைத்துக்கொண்டிருந்த ‘டாம்பீக’ இடத்தை ‘எளிமையான மற்றும் பணிவான முதல்வர்’ எனும் பிம்பத்தை வைத்து மக்களிடம் ஊடுருவ முயல்கிறார் அவர். அதில் பொருட்படுத்தத்தக்க அளவுக்கு வெற்றியும் அடைகிறார். இது ஒரு வகையில் மக்களை ஏமாற்றுவதுதான். எம்ஜியாரின் குல்லாவைப் போல உள்ளீடற்றதுதான் பன்னீரின் எளிமை. அதன் உள்ளே இருப்பது புரையோடிப்போன ஊழலும் அடிமைத்தனமும்தான். ஆனால் ஜெயலலிதாவை நகல் செய்ய முயலும் வகையில் சசிகலா ஆளுமை, எளிமை இரண்டிலுமே கோட்டைவிடுகிறார் என்பதுதான் அபத்தம்.

KARL MAX GANAPATHY