‘குட்டி இளவரசன்’ மொழிபெயர்ப்பாளர் மதனகல்யாணியும் செவாலியர் தான்!

பிரான்ஸ் நாட்டின் உயரிய ‘செவாலியர்’ விருது பெறும் கௌரவத்தை சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகிய இரண்டு தமிழர்கள் மட்டும்தான் பெற்றுள்ளதாக பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கமல்ஹாசனுக்கு முன்பே தமிழ் பெண்மணியான பேராசிரியர் மதனகல்யாணிக்கு பிரான்ஸ் அரசு இந்த விருதை வழங்கி கௌரவித்துள்ளது.

1995ஆம் ஆண்டு சிவாஜி கணேசனுக்கு பிரான்ஸ் அரசு செவாலியர் விருது அறிவித்தது. அப்போதுதான் அதன் கௌரவம் குறித்து தமிழர்கள் பலருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. இந்நிலையில், மூன்று தினங்களுக்குமுன் நடிகர் கமல்ஹாசனுக்கும் செவாலியர் விருதை அறிவித்தது பிரான்ஸ் அரசின் கலாசாரத்துறை. இதற்கு திமுக தலைவர் கருணாநிதி, நடிகர் ரஜினிகாந்த் என பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். “சிவாஜி கணேசனுக்கு பிறகு செவாலியர் விருது பெறும் 2வது தமிழர் கமல்ஹாசன்” என முன்னணி நாளிதழ்களும் செய்தி வெளியிட்டன.

ஆனால், கமலுக்கு பல வருடங்கள் முன்பே, அதாவது 2010ஆம் ஆண்டிலேயே மதனகல்யாணி என்ற தமிழ் பெண்மணி இந்த விருதை பெற்றிருக்கிறார் என்பதை அனைத்து தரப்புமே கவனிக்க தவறிவிட்டது.

0a1n

புதுச்சேரி பிரெஞ்சு கல்லூரியில் 41 ஆண்டுகாலம் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பேராசிரியர் மதனகல்யாணி. பிரெஞ்சு மொழியி்ல் முதுகலையும், தமிழில் புலவர் பட்டமும் பெற்று, இரு மொழிகளிலும் புலமை பெற்றவர் இவர்.

இந்த அறிவைக்கொண்டு, தமிழிலிருந்து பிரெஞ்சு மொழிக்கும், பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழுக்கும் பல நூல்களை இவர் மொழிபெயர்த்துள்ளார். சிலப்பதிகாரத்தை தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு மொழிபெயர்த்தவர் இவர். மேலும், ‘புதுச்சேரி நாட்டுப்புற கலைகள்’, ‘புதுச்சேரி நாட்டுப்புற கதைகள், சுஜாதாவின் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’, போன்ற தமிழ் நூல்களை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.

பிரெஞ்சு மொழியில் அன்த்துவான் தெ சேன்த் எக்சுய்பேரி எழுதிய ‘குட்டி இளவரசன்’, நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு எழுத்தாளர் ஆல்பெர்ட் கம்யூஸ் எழுதிய ‘கொள்ளை நோய்’, ழெரார் துய்வால் எழுதிய ‘புதுச்சேரி வணிகத்தள ஊரின் வரலாறு’ உள்ளிட்ட நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

இவரது இத்தகைய அரும்பணிகளை பாராட்டியே பிரான்ஸ் அரசு இவருக்கு செவாலியர் விருது வழங்கியது. அன்பும் அமைதியும் கொண்டு புதுச்சேரியில் தமிழ்ப் பணியாற்றும் செவாலியர் மதனகல்யாணி வழியாக தமிழ் இலக்கிய வளம் அயல்நாடுகளுக்கு பரவியிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இவரை கண்டுகொள்ளவும், கொண்டாடவும் தமிழ் கூறும் நல்லுலகம் தவறிவிட்டது என்பது பெரும் குறை.

மதனகல்யாணியின் தந்தை செ.கிருட்டினசாமி. காவல்துறை ஆணையராக பணிபுரிந்தவர். தாய் கி.இராசாம்பாள். மதனகல்யாணியின் உடன்பிறந்தோர் 5 பேர்.

மதனகல்யாணியின் கணவர் த.சண்முகானந்தன். புதுச்சேரி மாநில செய்தி மற்றும் விளம்பரத்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். மூவரும் முறையே டில்லி,அமெரிக்கா, துபாயில் பணியில் உள்ளனர். மதனகல்யாணி தற்போது 19. குபெர் தெரு, ராஜீவ் காந்தி நகர், புதுச்சேரி – 605011 என்ற முகவரியில் வசித்து வருகிறார்.

Read previous post:
0a1l
‘காக்கா முட்டை’ இயக்குனரின் புதிய படம் ‘கடைசி விவசாயி’!

தேசிய விருது பெற்ற ‘காக்கா முட்டை’ வெற்றிப்படத்தை இயக்கிய மணிகண்டன், அதனை  தொடர்ந்து 'குற்றமே தண்டனை', 'ஆண்டவன் கட்டளை' ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். தற்போது தனது

Close