“கபட” மோடிக்கு இன்னொரு சலாம் வைக்க காத்திருக்கிறார் கமல்ஹாசன்!

கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி, “ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது” என திடீரென அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நோட்டுக்களை மாற்றிக்கொள்ள வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் உரிய ஏற்பாடுகள் செய்யாமல், மக்களை அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட பணம் இல்லாமல் வீதிகளிலும், சாலைகளிலும் விழி பிதுங்க அலையவிட்டார்.

மக்களுக்கு நெருக்கமாக இருந்த சமூக ஆர்வலர்களும், ஊடகவியலாளர்களும் மோடியின் இப்பொறுப்பற்ற நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்கள். ஆனால் மக்களுக்கு அந்நியமாக வெகுதொலைவில் ஆடம்பரமாய் வாழும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்றவர்கள் மோடியின் நடவடிக்கையை வரவேற்றதோடு, அவருக்கு “ஹேட்ஸ் ஆஃப்” சொல்லி பாராட்டி மகிழ்ந்தார்கள்.

சில தினங்களுக்குமுன் தொலைகாட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த கமல்ஹாசனிடம், “மோடியின் செல்லா நோட்டு நடவடிக்கையை நீங்கள் ஆதரிக்கிறீர்கள். ஆனால், மன்மோகன் சிங் போன்றவர்கள் எதிர்க்கிறார்களே?” என்று கேட்கப்பட்டது. அதற்கு, “மன்மோகன் சிங் எங்கிருந்து விமர்சிக்கிறார் என்பதை பார்க்க வேண்டும்” என்று பதிலளித்தார் கமல். அதாவது, மன்மோகன் சிங் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்; அவர் அப்படி தான் விமர்சிப்பார் என்பது இதன் பொருள்.

இப்போது முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட பாஜக.வின் ஒரு பிரிவினரே மோடியின் நடவடிக்கையை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆடிட்டர் குருமூர்த்தி போன்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஒரு பிரிவினரும் கூட, “செல்லா நோட்டு நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தையும், மக்களையும் பாதித்திருப்பது உண்மை தான்” என்று பகிரங்கமாக சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக கமலும் தனது ஆதரவு நிலைப்பாட்டை ‘கொஞ்சூண்டு’ மாற்றிக்கொண்டுள்ளார்.

ஆனந்த விகடனில் கமல் எழுதிவரும் ‘என்னுள் மையம்கொண்ட புயல்’ என்ற அரசியல் தொடரில் இது குறித்து கமல் கூறியிருப்பதாவது:

பணமதிப்பு நீக்கம் (demonetisation) பற்றி மாண்புமிகு பிரதமர் மோடி அறிவித்தபோது, கட்சி வரையறைகள் கடந்து இச்செயல் பாராட்டப்பட வேண்டும் என்று ட்விட்டரில் என் கருத்தை வெளியிட்டேன். கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான ஒரு வழி என்ற முறையில், முழு ஆதரவையும் அத்திட்டத்துக்குத் தருவது மட்டுமன்று, அதனால் விளையும் சிறு இடைஞ்சல்களையும் மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றே நான் நினைத்தேன். ஆனால், என் சகாக்கள் பலரும்,  பொருளாதாரக் கல்வி பெற்ற சிலரும் அலைபேசியில் கூப்பிட்டு, என் ஆதரவுக்கு எதிராகத் தங்களின் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்கள்.

கொஞ்சநாள் கழித்து, டீமானிடைசேஷனை நடைமுறைப்படுத்திய விதம் பிழையானது; ஆனால், யோசனை நல்ல யோசனைதான் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன். அதற்கும் பிற்பாடு, பொருளாதார வல்லுநர்களின் விமர்சனக்குரல்கள் வலுத்தன. சரி, சில திட்டங்கள் நல்ல எண்ணத்துடன் செய்யப்பட்டாலும் நடைமுறையில் தோல்வியுறும் என்று நினைத்துக்கொண்டேன்.

தற்போது, `யோசனையே கபடமானது’ என்பது போன்ற உரத்த குரல்களுக்கு அரசிடமிருந்து பலவீனமான பதில்களே வரும்போது சந்தேகம் வலுக்கிறது. திட்டத்துக்குப் பாராட்டு சொன்னதில் சற்றே அவசரப்பட்டுவிட்டதற்காக, பகிரங்கமாக மன்னிப்பு கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று அடம்பிடிக்காமல் தவற்றை ஒப்புக்கொண்டால், பிரதமருக்கு என்னுடைய இன்னொரு சலாம் காத்திருக்கிறது. தவறுகளைத் திருத்தி ஆவன செய்வதும், முக்கியமாக அதை ஒப்புக்கொள்வதும் பெருந்தலைவர்களுக்கான அடையாளம்”

இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

மிஸ்டர் கமல்…! தவறு என்பது, நம்மை அறியாமல் தவறுதலாகச் செய்வது. அதை மன்னிக்கலாம். ஆனால், தெரிந்தே திட்டமிட்டுச் செய்வது கபடத்தனம். உங்கள் கூற்றுப்படி மோடி ஒரு கபட வேடதாரி. அவர் தனது கபடத்தனத்தை ஒப்புக்கொண்டாலும் கூட, அவருக்கு தண்டனை கிடைக்க வேண்டும். திட்டமிட்டு கொலை செய்த ஒருவன், “ஆமாங்க, நான் தான் கொலை செய்தேன்” என்று ஒப்புக்கொண்டாலும் நீதிமன்றம் அவனை மன்னித்து விடுதலை செய்யாது, இல்லையா?

குறைந்தபட்சம் ‘மோடி பதவி விலக வேண்டும்’ என்றாவது நீங்கள் கோரியிருக்கலாம். அதை விடுத்து, குற்றத்தை மோடி ஒப்புக்கொண்டால் அவருக்கு இன்னொரு சலாம் வைக்கக் காத்திருக்கிறேன் என்று மன்றாடுவது எந்த வகையில் நியாயம்?

மோடியின் முன் கூனிக் குறுகி நிற்பதற்கு எங்களிடம் ஏற்கெனவே ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இடம் பிடிக்கத் துடிக்கும் நீங்கள் எதற்கு எங்களுக்கு…?

பிரபல சினிமாக்காரன் எவனுக்கும் மக்கள் விரோத மத்திய அரசை எதிர்க்க துணிச்சல் இருக்காது. நீங்கள் மட்டும் விதிவிலக்கா, என்ன…!

அமரகீதன்