விஜய்யின் ‘மெர்சல்’ ஹைலைட்ஸ்: இயக்குனர் அட்லி பேட்டி!

தீபாவளி வெளியீடாக ‘மெர்சல்’ நாளை (அக்டோபர் 18) வெளிவருகிறது. இறுதிகட்டப் பணிகள் முடித்து க்யூப்பில் படத்தை சரிபார்த்துக் கொண்டிருந்த இயக்குநர் அட்லியிடம் பேசியதிலிருந்து…

மெர்சல்தலைப்பு ஏன்?

‘தெறி’ படத்தை இயக்கும்போதே, எனது அடுத்த படத்தின் தலைப்பு ‘மெர்சல்’ என முடிவு செய்தேன். அதற்காக கதை ஒன்றை தயார் செய்தேன். ‘பாகுபலி’ கதாசிரியர் விஜயேந்திர பிரசாத்துடன் இணைந்து திரைக்கதையும் உருவாக்கினேன். அப்போது பேசிக் கொண்டிருக்கையில் காட்சி ஒன்றைக் கூறினேன். அவர் அதை அருமையாக இருக்கிறதே என்றவுடன், தயார் செய்த கதையை அப்படியே வைத்துவிட்டு புது கதையை தயார் செய்தோம். இதில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படும் ஒரு பிரச்சினையை தொட்டிருக்கிறேன். தலைப்பு இந்தக் கதைக்குப் பொருத்தமாக இருக்கும். படம் பார்த்துவிட்டு அதை நீங்களே உணர்வீர்கள்.

தளபதி கதாபாத்திரம் பேசப்படும்

மதுரையைச் சேர்ந்த ‘தளபதி’ என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ளார். அக்கதாபாத்திரம் எல்லோரையும் கவரும். அவருக்கு நாயகி நித்யா மேனன். அது மிகவும் வலுவான கதாபாத்திரமாக இருக்கும். இன்னொரு விஜய் மேஜிக் நிபுணர். இதற்காக மேஜிக் கலைஞர்களிடம் கற்றுக் கொண்டு, நடித்திருக்கிறார். எந்தவொரு காட்சியையுமே கிராஃபிக்ஸ் இல்லாமல் தத்ரூபமாக இருக்க வேண்டும் என மெனக்கெட்டு இருக்கிறார். இதில் விஜய் சார் எந்த காட்சியிலுமே டூப் போடாமல் நடித்துள்ளார்.

ராஜஸ்தானில் 58 டிகிரி வெயிலில் வேட்டி மட்டும் கட்டிக்கொண்டு மல்யுத்த வீரர்களுடன் மோதும் சண்டைக்காட்சியில் நடித்திருக்கிறார். இது மிகவும் சிரமமானது. ஆனால், சலித்துக் கொள்ளாமல் நடித்துக் கொடுத்தார். இதில் 3 விஜய்யா என்று கேட்காதீர்கள், அதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். படத்தில் மொத்தம் 12 சண்டைக்காட்சிகள் இருக்கின்றன.

நாயகிகள் மற்றும் வடிவேலு

‘மெர்சல்’ படத்தின் கதை ஒரு கட்டத்தில் நாயகிகள் மீது நகரும். 3 பேர் இருந்தாலும் நித்யாமேனன் கதாபாத்திரம் மிகவும் பேசப்படும். ‘தெறி’ படத்தை விட மிகவும் லோக்கலாக சமந்தா நடித்திருக்கிறார். கதைப்படி சில வெளிநாட்டு காட்சிகள் தேவைப்பட்டது. போலந்து, பிரான்ஸ் ஆகியவற்றில் அக்காட்சிகளை படமாக்கி இருக்கிறோம். வடிவேலுவைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். அவர் காமெடி காட்சிகள் மட்டுமன்றி, மிகவும் எமோஷனலான காட்சியிலும் கலக்கியிருக்கிறார். ‘குஷி’ படத்தை பலமுறை பார்த்து வியந்திருக்கிறேன். விஜய்யை நாயகனாக ரசித்து செதுக்கிய இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் அவருக்கு வில்லனாக நடித்துள்ளார்.

ஆளப்போறான் தமிழன்பாடல் உருவான விதம்

‘ராஜா ராணி’, ‘தெறி’ படங்களுக்கு என் நண்பர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தார். இக்கதை எழுதும்போதே ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என முடிவு செய்தேன். தமிழ் மக்களுக்காக ஒரு பாடல் பண்ணலாம் என்று பேசிக் கொண்டிருக்கும் போது, பாடலாசிரியர் விவேக் சொன்ன வார்த்தைதான் ‘ஆளப்போறான் தமிழன்’.

எனக்கும், ஏ.ஆர்.ரஹ்மான் சாருக்கும் அந்த வார்த்தை மிகவும் பிடித்திருந்தது. உடனே, அதை வைத்து ஒரு பாடல் செய்தோம். ‘வந்தே மாதரம்’ பாணியில் தமிழின் பெருமையைச் சொல்லும் வகையில் அப்பாடல் இருக்கும். அதை படமாக்கியிருக்கும் விதமும் பேசப்படும். ஏனென்றால், அதற்காக மிகவும் கடுமையாக உழைத்திருக்கிறோம். அதுமட்டுமன்றி, ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற தலைப்பையும் படத்தலைப்புக்காக பதிவு செய்திருக்கிறேன். விரைவில் படம் இயக்குவேன்.

ஜல்லிகட்டை மையப்படுத்திய படமா?

கிராமத்து விஜய் சம்பந்தப்பட்ட கதாபாத்திரத்தின் களம் மதுரை. படம் முழுக்க தமிழனின் ஆளுமை இருந்துகொண்டே இருக்கும். இந்தப் படத்துக்கும் ஜல்லிக்கட்டுக் பிரச்சினைக்கும், மெரினா போராட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எனது கதைகள் அனைத்துமே 2-ம் பாகமாக எடுக்கக் கூடியவை தான். ‘மெர்சல்’ வெற்றியைப் பொறுத்தே அடுத்த பாகம் இருக்கும்.

கதை தழுவல் சர்ச்சை

‘மெளன ராகம்’ படத்தின் தழுவல் ‘ராஜா ராணி’, ‘சத்ரியன்’ படத்தின் தழுவல் ‘தெறி’ என விமர்சனம் செய்தார்கள். ‘மெர்சல்’ படத்திற்கும் தற்போதே அப்படியொரு விமர்சனம் வருகிறது. இதை எல்லாம் கண்டுகொள்வதில்லை. சில நேரம், பெரிய வெற்றி படத்துடன் ஓப்பிடுகிறார்களே என்று சந்தோஷப்படுவேன்.  கிரிக்கெட் விளையாட்டு வீரர் சச்சின் போல் இவர் விளையாடுகிறார் என்பது பெருமையாக தானே இருக்கும். நான் மக்களிடமிருந்து தான் கதை எடுக்கிறேன்.

தீபாவளி வெளியீட்டுக்கு மாற்றம்

கதை, திரைக்கதை, பொருட்செலவு என அனைத்துமே பிரம்மாண்டமாக இருக்கும். இதே போன்று பெரிய பொருட்செலவுள்ள படம் தீபாவளிக்கு வந்தால் மட்டுமே சரியாக இருக்கும். முதலில் ‘2.0’ தீபாவளி வெளியீடாக இருந்தது, அதனால் பொங்கல் வெளியீடு என்று திட்டமிட்டு இருந்தோம். ஆனால், ‘2.0’ வெளியீடு தள்ளிவைக்கப்பட்டதால் மீண்டும் தீபாவளி வெளியீடு என்று அறிவித்திருக்கிறோம்.

தீபாவளிக்கு வெளியிட வேண்டும் என்று அவசர அவசரமாக படமாக்கவில்லை. இரவு, பகலாக ஆயிரம் பேரின் உழைப்போடு ‘மெர்சல்’ உருவாகி, வெளியாகவுள்ளது. கண்டிப்பாக தீபாவளி விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தொடரும் பெரிய பட்ஜெட் படங்கள்

எனது முதல் படமான ‘ராஜா ராணி’யைத் தயாரித்தது ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம். அந்நிறுவனத்தில் ஒரு கதையைச் சொல்லி எளிதாக ஒப்புக் கொள்ள வைக்க இயலாது. எனது வெற்றிக்குப் பின்னால் 11 ஆண்டுகால கடுமையான உழைப்பு இருக்கிறது.

நான் வசதியான வீட்டு பையன் அல்ல. குறும்படம் தயாரித்தால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணி குறும்படம் இயக்கினேன், அதை தயாரிக்க பொருளாதாரம் இல்லாமல் என் அம்மா தனது தங்கச் செயினை விற்று பணம் கொடுத்தார். ஷங்கர் சாரிடம் 8 ஆண்டுகளாக உதவி இயக்குநராக பணிபுரிந்தேன். இதையெல்லாம் கடந்து தான் ‘ராஜா ராணி’ படம் செய்தேன். அடுத்ததாக விஜய் சாருக்கு கதையைச் சொல்லி சம்மதிக்க வைத்தேன். அது வெற்றியடைந்தவுடன் ‘மெர்சல்’ இயக்கியிருக்கிறேன். அதிர்ஷ்டம் இருந்தால் மட்டும் சினிமாவில் ஜெயித்துவிட முடியாது.

எனது நிறுவனத்தை நானே படம் இயக்குவதற்காக தொடங்கவில்லை. பல்வேறு புதுமுக இயக்குநர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றே தொடங்கினேன். விரைவில் நிவின் பாலி நடிக்கவுள்ள படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்.

கா.இசக்கிமுத்து

Courtesy: Tamil.thehindu.com