விஜய்யின் ‘மெர்சல்’ சிக்கல் தீர்ந்தது: படம் தீபாவளியன்று ரிலீஸ்!

விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியதைத் தொடர்ந்து, ‘மெர்சல்’ படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் முடிவுக்கு வந்தது. இதனால் தீபாவளியன்று இப்படம் திரைக்கு வருகிறது.

கேளிக்கை வரி குறைப்பு, திரையரங்க டிக்கெட் கட்டணம் உள்ளிட்ட பிரச்சனை முடிவுற்றதால் ‘மெர்சல்’ வெளியீடு உறுதி செய்யப்பட்டது. ஆனால், தணிக்கைக் குழுவினருக்கு விலங்குகள் நல வாரியத்தின் கடிதத்தால் ‘மெர்சல்’ மீண்டும் வெளியீட்டு பிரச்சினையில் சிக்கியது. இதனால் முன்னணி திரையரங்குகள் எதிலுமே ‘மெர்சல்’ டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படாமல் உள்ளது.

‘மெர்சல்’ படக்குழுவினரோடு விலங்குகள் நல வாரிய அதிகாரிகளின் அவசர ஆலோசனை சென்னையில் இன்று (அக்டோபர் 16) நடைபெற்றது. அப்போது ‘மெர்சல்’ திரைப்படம் திரையிட்டுக் காட்டப்பட்டது. அப்போது விலங்குகள் நல வாரியம் எழுப்பிய கேள்விகள் அனைத்திற்கும் படக்குழுவினர் பதிலளித்தார்கள். இதற்காக டெல்லியிலிருந்து விலங்குகள் நல வாரிய அதிகாரி சென்னை வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

‘மெர்சல்’ படத்திற்கு எவ்வித தடையுமில்லை என்று விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான முறையான அறிவிப்பு விலங்குகள் நல வாரியத்தின் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனால், அனைத்துச் சிக்கல்களும் தீர்ந்து, தீபாவளியன்று ‘மெர்சல்’ வெளியாவது உறுதியாகியுள்ளது.