இரட்டை இலை சின்னம் பஞ்சாயத்து: 23ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு!

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் விசாரணை நடைபெற்றது. இதற்காக அதிமுகவில் உள்ள ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணி, தினகரன் அணி ஆகிய இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்திற்கு வந்திருந்தனர்.

தினகரன் தரப்பு சார்பில் வழக்கறிஞர் அஸ்வினி குமார் வாதிட்டார். பிரமாணப் பத்திரங்களில் 6 பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்து முறைகேடாக உள்ளதை நிரூபிக்க தயாராக உள்ளோம் 6 பேரையும் நேரில் ஆஜர்படுத்த அனுமதி வழங்குமாறு தினகரன் தரப்பில் கோரிக்கை வைக்கபட்டது.

ஆனால், இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்து விட்டது. எழுத்துப்பூர்வமாக ஆவணங்களை தாக்கல் செய்தால் மட்டுமே ஏற்க முடியும் என தெரிவித்து விட்டது. மேலும், பிரமாண பத்திரங்களில் கையெழுத்திட்டவர்களை நேரில் அழைத்து விசாரிக்க இயலாது என்றும் ஆணையம் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு விட்டது.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கையையே தினகரன் தரப்பு முன்வைப்பதை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும் என ஓபிஎஸ்  தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தேர்தல் ஆணையம் விசாரணையை அக்டோபர் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது